இன்றைக்குத் தேவையான கதை!



திறமையாளர்களை, புதியவர்களைத் தேடித்தேடி வாய்ப்பு கொடுப்பவர் லிங்குசாமி. வித்தியாசமான படங்களைக் கொடுத்து ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் படைப்பாளி ரவி நந்தா பெரியசாமி. இவர்கள் இருவரையும் இப்போது இணைத்திருக்கிறது ‘ஜிகினா’. தனது வெற்றிக்கான தேடலில் புதிய தயாரிப்பாளர் திருக்கடல் உதயத்துடன் ஓடிக் கொண்டிருந்தவருக்கு, உற்சாக டானிக் கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

ஆம், ‘ஜிகினா’வின் தயாரிப்பாளராகியிருக்கிறார்.அந்த மகிழ்ச்சிச் செய்தியை நம்மோடு பகிர்ந்து கொண்ட ரவி நந்தா பெரியசாமியிடம் படப்பிடிப்பு விபரம் கேட்டபோது... “அண்ணே நாளைக்கு செம்மொழிப் பூங்காவி–்ல் பாடல் எடுக்குறோம் வாங்கண்ணே...” என்று அழைத்தார். சென்றோம். சூரியன் தலைகாட்டாத அந்த பகல் பொழுதி–்ல் செம்ெமாழிப் பூங்காவுக்குள் நுழைந்தபோது மினி ஊட்டியாய் இருந்தது.

 நந்தா படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். ஹீரோ விஜய் வசந்தும், ஹீரோயின் சானியாதாராவும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். விஜய் வசந்த் பின்பக்கம் அமர்ந்திருக்க, சானியாதாரா சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தார். பின்னணியில் பாடல் ஒலிக்க ரம்மியமான அந்தக்காட்சி படமாகிக் கொண்டிருந்தது. கேமராமேன் பாலாஜி ரங்கா கேமராவைக் கையாண்டு கொண்டிருந்தார்.

பொதுவா நாம் என்ட்ரி கொடுத்தாலே ஏதாவது நடக்கும். ஆனால் இன்றைக்கு எதுவுமே நடக்கவில்லை. ஷாட்டை முடித்துவிட்டு வந்த நந்தாவை செம்மொழிப் பூங்காவின் கடைக்கோடியில் உள்ள ஒரு பெஞ்சுக்கு தள்ளிக் கொண்டு போனோம். 2 ஆப்பிள் ஜூஸுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தார். ‘வெற்றிக்காக நீண்ட தூரம் ஓடிட்டே இருக்கீங்க போல...’ என்றோம். “அப்புறம் என்னண்ணே பண்றது? சினிமாதான்னு இறங்கிட்டோம். ேவற தொழில் எதுவும் தெரியாது. ஜெயிக்கிற வரைக்கும் ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுக்குப்பிறகு பெற்ற வெற்றியை தக்க வைக்க அடுத்த வெற்றியைத் தேடி ஓடணும். ஓட்டம்தானே சினிமாக்காரனோட வாழ்க்கை” என்றார்.

‘அதென்ன ஜிகினா...? புதுசா இருக்கே!’ என்றோம். “ஜிகினா பளபளப்பா இருக்கும். எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அதுமாதிரி இன்றைய இளைஞர்களைக் கவர்ந்து இழுப்பது ஃபேஸ்புக். விஞ்ஞான வளர்ச்சியில எந்த புதுமை வந்தாலும் அதை தவறாக பயன்படுத்துறதுதான் நம்மோட வேலையா இருக்கு. ஒவ்வொருவரும் தங்களுடைய நிஜ அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேறொரு முகத்துடன் ஃபேஸ்புக்கில் உலா வருகிறார்கள். அதை நம்பி ஏமாறுகிறவர்கள் அதிகம். இதுதான் கதைக்களம். என்னோட ஹீரோ சாதாரண ஆள். அவனுடைய நிறம், அழகு பற்றி அவனுக்கு தாழ்வு மனப்பான்மை.

இதனால் தன்னைப் பற்றி தவறான தகவலுடன் ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்குகிறான். அதனால் கவரப்பட்டு பின் தொடர்கிறாள் நாயகி. அவன் நிஜமுகம் தெரிந்ததா என்பதுதான் கதை. என்கிட்ட எத்தனையோ கதைகள் இருக்கு. இன்றைக்குத் தேவையான கதை இதுதான்னு கையில் எடுத்தேன். எடுத்த வரைக்கும் பார்த்த லிங்குசாமி அண்ணன் “தம்பி இனி உனக்கு வெற்றிதான்டா”ன்னு சொல்லி படத்தை வாங்கிக்கொண்டார்.”

உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போதே உதவியாளர் ஓடி வந்தார். “சார்,  ஹீரோயின் சைக்கிள்லேருந்து விழுந்துட்டாங்க சார். உடம்பெல்லாம் சிராய்ப்பு ஆகிடுச்சி” என்றார். “சரி பேக்-அப் சொல்லிடு. நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றார். “அண்ணே இந்தப்பொண்ணு இப்படி கீழே விழுகிறது தினமும் நடக்குது. கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவுல ஒரு ஆக்சிடென்ட் சீன் எடுத்தோம். அப்போ ஒரு தடவை விழுந்தாங்க. இரண்டு அடி தள்ளி விழுந்திருந்தா அவ்ளோதான். எப்படியோ தப்பிச்சோம். நீங்க ஜூஸ் குடிச்சுட்டு வாங்க, நான் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று எழுந்து போனார் ரவி நந்தா பெரியசாமி.

-மீரான்