ஓவியக்காதல்!



ஆர்ட் டைரக்டர் வெங்கல் ரவி... கோலிவுட்டில் பரிச்சயமான பெயர். ஆர்ட் டைரக்டர் கதிரிடம் வித்தை கற்றவர். ‘தி நகர்’, ‘ராமேஸ்வரம்’, ‘ஞாபகங்கள்’, ‘திண்டுக்கல் சாரதி’, ஏவி.எம்மின் ‘முதல் இடம்’ போன்ற  படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக வேலை பார்த்தவர்.

ஏராளமான இயக்குனர்களின் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் இவருடைய டைரக்‌ஷன் கனவை நிஜமாக்கினவர் ஷீபா பிலிம்ஸ் ஜனார்த்தனன். படத்தின் பெயர் ‘ரவிவர்மா’.

‘‘நான் படிச்சது ஆர்ட்ஸ். ஆனால் டைரக்‌ஷன் என்பது நீண்ட நாள் லட்சியம். சுவர் ஓவியம் வரையும் ஒருவனும் கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் ஒருத்தியும் காதலிக்கிறார்கள். பழமையும் புதுமையும் கலந்த இவர்களின் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.

நான் ஆர்ட் டைரக்டராக வேலை செய்த படங்களுக்கு பிரமாண்டமாக செட் போட்டிருக்கிறேன். இது லைவ் சப்ஜெக்ட் என்பதால் ஆர்ட் டைரக்டராக என்னுடைய வேலை கம்மிதான். ஆனால் டைரக்டராக  ஜனரஞ்சகமான ஒரு படத்தை கொடுத்த திருப்தி இருக்கிறது’’ என்கிறார் வெங்கல் ரவி.

இதன் நாயகன் கிஷோர். நாயகி ஆதிரா. ஆன்டி ஹீரோவாக ஹரிபிரசாத் நடித்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக மகாலட்சுமி. பைக் வீராங்கனையான இவர் படத்தில் படுத்துக் கொண்டும், நின்று கொண்டும் பைக் சாகசம் பண்ணியிருக்கிறாராம். தயாரிப்பாளர்களில் ஒருவரான சக்திமயில் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடி மீரா கிருஷ்ணன். சங்கர் கணேஷின் உதவியாளர் கே.கே.பிரபாஜி இசையில் இயக்குனரே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். முக்கிய காட்சிகளில் கலைப்புலி எஸ்.தாணு, ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா, பாண்டு நடித்திருக்கிறார்களாம்.