கானக்குயில் கலைவாணி!



கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசையை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர். ஐந்து வயதில் இசை கற்க ஆரம்பித்தவர், 10 வயதில் மூன்றுமணி நேர கச்சேரி செய்து இசைப்பிரியர்களை வியப்பில் ஆழ்த்தி, வரவேற்பைப் பெற்றார்.

 திருமணத்துக்குப் பின்னர் மும்பைக்குச் சென்றவர், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி மெல்லிசைப் பயிற்சி பெற்றார். 1969ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அரங்கேற்றம் நடந்தபிறகு, மும்பையின் அத்தனை சபாக்களும் வாணி ஜெயராமின் தேதி கேட்டு தவம் கிடந்தன.

1970ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் பதிவானது. ரிஷிகோஷ் முகர்ஜி இயக்கத்தில் வசந்த் தேசாய் இசையமைத்த ‘குட்டி’ படத்தில் மூன்று பாடல்களைப்பாடி தனது பாட்டுச்சாலைப் பயணத்தை துவக்கினார் வாணி. அந்தப்படத்தில் இவர் பாடிய ‘போல்ரே பாபி ஹரா…’ பாடல் ஐந்து விருதுகளை அள்ளியது. 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியிருக்கும் இவரது குரலுக்கு மூன்றுமுறை தேசிய விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசு.

 ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்…’ பாடல் இவருக்கு மிகப்பெரிய புகழை உருவாக்கித் தந்தது. ‘தீர்க்க சுமங்கலி’யில் வந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்…’ பாடல், பாட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியது. ‘பாலைவனச்சோலை’ படத்தில் கஸல் வடிவில் பாடிய ‘மேகமே மேகமே பால்நிலா காயுதே…’ இவருக்கும் வைரமுத்துவுக்கும், இசையமைத்த சங்கர்-கணேஷுக்கும் பாராட்டுகளைக் குவித்தது.

  ‘மண்ணுலகில் இன்று தேவன்…’, ‘முத்தமிழில் பாடவந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்…’, ‘நாதமென்னும் கோவிலிலே…’, ‘பொங்கும் கடலோசை…’, ‘நானே நானா யாரோதானா…’, ‘கவிதை கேளுங்கள்…’, ‘ நானா பாடுவது நானா…’நித்தம் நித்தம் நெல்லுச்சோறு…’, ‘என் கல்யாண வைபோகமே…’, ‘ஒரேநாள் உன்னை நான்…’, ‘சொர்க்கத்தின் திறப்புவிழா…’, ‘கேள்வியின் நாயகனே…’, ‘அந்தமானைப் பாருங்கள் அழகு…’, ‘உன்னிடம் மயங்குகிறேன்…’ என்று இவரது குரல் மயக்கிய பாடல்களின் பட்டியல் பெரியது.

 இயற்றி இசையமைத்துப் பாடி முருகன் பக்திப்பாடல் ஆல்பம் வெளியிட்டிருக்கிறார்.‘காஞ்சி காமாட்சி’ படத்தில் வரும் ‘ஆனா கானா…’ பாடலை சிரமப்பட்டுப் பாடியதாக குறிப்பிடுகிறார் வாணி. ‘கடினமான பாடலைப் பாடவேண்டுமென்றால் வாணி ஜெயராமை அழைக்கலாம்’ என்று இவருக்கு புகழ்மாலை சூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். தமிழக அரசு மட்டுமின்றி ஆந்திர, ஒரிஸ்ஸா, குஜராத்தி அரசுகளும் வாணி ஜெயராமுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை வழங்கி பெருமைப் படுத்தியிருக்கின்றன.

அடுத்த இதழில்
முத்தமிழ் அறிஞர் கலைஞர்