அருள்நிதியின் புதிய அவதாரம்



வித்தியாசமான படங்களை தேடித் தேடி நடிக்கும் ஆர்வமிக்க நடிகர்களில் முக்கியமானவர் அருள்நிதி. கேரக்டருக்காக மெனக்கெடும் நடிகர்களில் மிக முக்கியமானவர். டிமான்டி காலனி படத்தில் பேயாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே ஷூட்டிங் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியை தொடர்பு கொண்டபோது, “சார், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிஜ ேபயே வருதாம். கண்டிப்பாக நீங்க போகத்தான் வேண்டுமா?” என்று பயமுறுத்தினார்.

 ‘பரவாயில்லை, பேய் வந்தால் அப்படியே அதையும் ஒரு பேட்டி எடுத்துக் கொடுத்தால் புரமோஷன் கிடைக்கும். ஓகே’ என்ற பிறகு, “சாந்தோம் சி.எஸ்.ஐ ஸ்கூல் பின்னால் உள்ள ஒரு பழைய தேவாலயத்தின் அருகில் டிமான்டி காலனி செட் போட்டிருக்கோம். போயிட்டு வாங்க” என்றார்.

அடுத்த நாளே அங்கே இருந்தோம். பழமையான ஆழ்வார்பேட்டை டிமான்டி காலனி ஷெட்டை அப்படியே தத்துருபமாக போட்டிருந்தார் ஆர்ட் டைரக்டர் சந்தானம். மேக்-அப் எதுவும் இல்லாமல் ரொம்ப சாதுவாக இருந்தார் அருள்நிதி. அவரது நண்பர் களாக நடிக்கும் சூது கவ்வும் ரமேஷ், திலக், சனத் ஆகியோர் பின்தொடர அருள்நிதி எதையோ தேடிக்கொண்டு அந்த செட்டுக்குள் பயந்தபடி சென்று கொண்டிருக்க...

அதனை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து மானிட்டரில் பார்த்து உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். “அருள்நிதி சார் முகத்துல இன்னும் பயம் இருக்கணும், ரமேஷ் இன்னும் கொஞ்சம் ஃபீலிங்கை ஏத்துங்க” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். ஷாட் ஓகே ஆனதும்தான் நம்மை கவனித்து வரவேற்றார்.

“புரட்யூசர் சார் நீங்க வருவீங்கன்னு சொல்லி யிருந்தாரு. எங்க செட் எப்படி இருக்கு?” என்று அக்கறையுடன் கேட்டார். ‘அதை விடுங்க சார். உங்க புரட்யூசர் ரொம்ப பயமுறுத்தினாரே’ என்றோம். “ஆமா சார், அது நிஜந்தான். ஒரு நாள் காலையில் செட்டுக்கு வந்த ஒரு அசிஸ்டென்ட் செட்டுக்குள்ள போயிருக்காரு.

யாருமே இல்லை. என்ன பார்த்தாரோ ெதரியவில்லை, அலறி அடிச்சிட்டு ஓடிவந்திருக்காரு... கேட்டதுக்கு ஏதோ ஒண்ணு என்னை துரத்துச்சுன்னு சொன்னாரு. ஆனா அது என்னதுன்னு அவருக்கு ெதரியல. அதுலேருந்து செட்டுக்குள்ள யாரும் தனியாக ேபாறதில்லை. எனக்கே அது நடந்துருக்கு.

படம் ஷூட் பண்றதுக்கு முன்னாடி பேய் நடமாடிய டிமான்டி காலனி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதை வச்சுத்தான் திரைக்கதை அமைச்சிருக்கேன். டிமான்டி காலனியைப் பார்த்துட்டு வரலாமுன்னு போனேன். போகும்போது நல்ல வெயில். டிமான்டி காலனிக்குள்ள கால் வச்சதுமே மழை அப்படியே கொட்டிக்கிட்டு ஊத்துச்சு.

இடி மின்னல் அடிச்சுது. மின்னல் வெளிச்சத்துலதான் டிமான்டி காலனிங்கிற போர்டே என் கண்ணில் பட்டது. திரும்பி வீட்டுக்கு வந்தா பவர் கட். விடிய விடிய மெழுகுவர்த்திய கொளுத்திட்டு தூங்கினேன். சுவரில் விதவிதமா நிழல்கள். சரி, படம் எடுக்க பேய்ங்க கிரீன் சிக்னல் கொடுத்திடுச்சின்னு படத்தை உடனே ஆரம்பிச்சிட்டேன்” என்றார்.

‘நீங்க எடுக்கிற படம் எப்படின்னு ெதரியல. ஆனா நீங்க சொன்ன சம்பவம் ரொம்ப திகிலா இருக்கு’ என்றோம். ‘அருள்நிதிதான் பேயா?’ என்றோம். “அவர் பேயெல்லாம் கிடையாது. நம்மள மாதிரி சாதாரண மனிதர்தான். ஆனால் சில விநாடிகள் அவர் அப்படி ஒரு அவதாரம் எடுப்பார். அது அலற வைக்கும்” என்றார்.

‘படத்தோட ஹீரோயினை காட்டவே மாட்டேங்குறீங்களே’ என்றால், “ஹீரோயின் இல்லாத படமா? இதிலேயும் ஹீரோயின் இருக்காங்க. அது யாரு, என்னவா நடிச்சிருக்காங்க என்பதை கடைசி வரை சொல்லப்போறதில்லை. இது தயாரிப்பாளர்களுக்கும் எனக்குமான ஒப்பந்தம்.

ஹீரோ உள்ளிட்ட ஒரு சிலருக்குத்தான் இந்த ரகசியம் ெதரியும். படம் ரிலீசாகற வரைக்கும் சொல்லப்போறதில்லை” என்றார். ‘வண்ணத்திரைக்கு ஒரு நடிகை படமாவது வேண்டுமே...’ என்றோம். “அப்படீன்னா படத்தோட பிளாஷ்பேக் வெள்ளக்காரங்க காலத்துல நடக்குது. அதுல ஒரு ஜெர்மன் நடிகை நடிச்சிருக்காங்க. இந்தாங்க அவுங்க படத்தை போடுங்க. கலையில் தேச வித்தியாசமெல்லாம் பார்க்கக்கூடாது” என்று அந்த ஜெர்மன் நடிகை படத்தை கையில் கொடுத்தார். சாரி பிரதர்ஸ், இந்த வாரம் நம்மள பேயடிச்சிடுச்சு.

-மீரான்