காவல் நிலையத்தில் காதல் ஜோடி!



குழந்தைகள் வளர்ந்து வாலிபமாகி துள்ளித் திரிகிறபோது பெற்றவர்களுக்கு சந்தோஷம் வருவது இயற்கைதானே. அதுமாதிரி குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து ஹீரோ, ஹீரோயின்களாக ஆட்டம் போட்டால், சினிமா தாய்க்கு சந்தோஷம்தானே.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரனும், 'கம்பீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்த மனீஷா ஜித்தும் 'விந்தை' என்ற படத்தில் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பம் அபூர்வமானது.

அதனால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சென்றோம்.போரூரை அடுத்துள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் ஷூட்டிங் என்றார்கள். கிளம்பிப்போனால், கல்யாண மண்டபத்தையே போலீஸ் ஸ்டேஷனாக்கி வைத்திருந்தார்கள். லாக்அப் அறை, ஆயுத அறை, இன்ஸ்பெக்டர் அறை, ஆவணக் காப்பகம் என பக்காவாக செட் போட்டிருந்தார்கள். வெளியில் 'காவல் நிலையம், கே.கே.நகர்' என்ற போர்டு மின்னிக் கொண்டிருந்தது.

உள்ளே பரபரப்பாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஹீரோ மகேந்திரனும், ஹீரோயின் மனீஷா ஜித்தும் அங்கிருந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென சம்பந்தமே இல்லாமல் கிளுகிளு உடையில் வந்து நின்றார் சுஜிபாலா. கல்யாணம், பிரிவு என்று பிரச்னைகளில் சிக்கி இருந்தாலும் ஒரு சுற்று பெருத்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் 'மகாநதி' சங்கர் மகேந்திரனையும், மனீஷா ஜித்தையும் நிற்க வைத்து விசாரிக்கிற காட்சியை எடுத்தார்கள். "ஏண்டா உங்களுக்கெல்லாம் மீசை முளைக்கிறதுக்குள்ள ஆசை முளைச்சிடுதில்ல..." என்று டயலாக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஃபிரேமுக்குள் ஒரு வயதான மூதாட்டி வந்தார். "அய்யா வணக்கம்" என்றார். "என்ன பாட்டி என்ன வேணும் உனக்கு" என்றார் சங்கர். "என் பேரனை காணாம்யா. பத்து நாளாச்சு.

பிரண்ட்சுங்களோட சினிமாவுக்கு போறேன்னு சொல்லிட்டு போனான்யா. இன்னிக்கு வரைக்கும் வீடு திரும்பலைய்யா. கொஞ்சம் கண்டுபிடிச்சு குடுங்கய்யா" என்று கண்ணீர் மல்க மடியில் இருந்த போட்டோவை எடுத்துக் கொடுத்தார். "சரி நீங்க பத்திரமா போங்க, நாங்க கண்டுபிடிச்சு கொடுக்குறோம்" என்று சங்கர் சொல்ல பாட்டி கிளம்பிப் போனார். இயக்குனர் லாரா கட் என்று சொல்ல கேமரா நின்றது.

"என்ன சார் இந்த கேரக்டர் பற்றி சொல்லவே இல்லை. திடீர்னு சீனை மாத்திட்டீங்களே" என்றார் மகேந்திரன். "சீனெல்லாம் மாத்தல. வெளியில போர்டை பார்த்துட்டு நிஜ போலீஸ் ஸ்டேஷன்னு நினைச்சு அந்தப் பாட்டி வந்துட்டு போகுது. நானும் கேரக்டரும் ரியலு. சீனுக்கும் நல்லா இருக்கும்னு அப்படியே ஷூட் பண்ணிட்டேன். சங்கரும் சூப்பரா சமாளிச்சாரு" என்று சொல்ல, யூனிட்டே கலகலவெனச் சிரித்தது.

காட்சியை முடித்து விட்டு நம்மிடம் வந்தார் இயக்குனர். "மகேந்திரனும், மனீஷா ஜித்தும் கிராமத்துக் காதலர்கள். மனீஷாவுக்கு 18 வயது நிரம்ப ஒரு நாள் இருக்கு. அடைக்கலம் தேடி சென்னைக்கு வர்றாங்க. போலீசில மாட்டிக்கிறாங்க. காதலர்களை வெறுக்கும் இன்ஸ்பெக்டர் சங்கர், அவர்களைப் பிரிக்க திட்டமிடுகிறார்.

ஒரு நாளை போலீஸ் ஸ்டேஷனிலேயே கழித்து விடுவது தான் நமக்கு பாதுகாப்பு என்று மகேந்திரனும், மனீஷாவும் இங்கேயே இருந்து விடுகிறார்கள். இந்த ஒரு நாளில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

 போலீஸ் கைது செய்து வரும் பாலியல் தொழிலாளி சுஜிபாலா இங்கேயே ஒரு ஆட்டத்தைப் போடுவார். அதைத்தான் அடுத்து எடுக்கப்போகிறோம்" என்றார் லாரா. ஒரு நாள் வயது, ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு காதல் ஜோடி - வித்தியாசமான கதைக்களம். குழந்தை நட்சத்திரமாக இருந்து ஜெயிக்கப் போராடும் மகேந்திரனுக்கும், மனீஷாவுக்கும் வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

-மீரான்