ஹாலிவுட் ஸ்டைல் தாதா கதை!



‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’, ‘திருவண்ணாமலை’ என ஊர்ப் பெயரில் படம் எடுக்கும் ஊரரசு என்கிற பேரரசு அடுத்து இயக்கும் படம் ‘திகார்’. தமிழ்நாட்டு ஊர்களை விட்டு விட்டு வடநாட்டு ஊருக்குச் சென்று விட்டார்.

அவரது படம் போலவே அவரது படப்பிடிப்பும் பரபரவென இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரைத் தொடர்பு கொண்டபோது, "உங்களுக்கு ரொமான்ஸ் சீன்ஸ்தானே பார்க்க பிடிக்கும். பாண்டிச்சேரிக்கு வந்துடுங்க" என படபடவென பேசினார். கிளம்பினோம்.

பாண்டிச்சேரியில் கோடம்பாக்கத்துக் காரர்களுக்கு அதிகம் பிடித்தமான ஏரியாவான பீச் ரோட்டில் படப்பிடிப்பு. பார்த் திபன், பிரியங்கா காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார். பார்த்திபன் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பிரியங்காவுக்கு லவ் ஃபீலை சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சரியான மூவ்மெண்டில் பார்த்திபனும், பிரியங்கா வும் கட்டிப்பிடித்து... முகத்தோடு முகம் உரசி... முத்தம் கொடுக்க இதழை நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது சீன். பார்த்திபனுக்கு இது அல்வா சாப்பிடுகிற மாதிரியான சீன்.

ஆனால் புதுமுகம் பிரியங்காவுக்கு உள்ளுக்குள் உதறல், நடுக்கம். இயக்குனர் எதிர்பார்க்கிற மூடுக்கு பிரியங்கா வரவில்லை. பல டேக்குகள் போனது. பார்த்திபன் செம மூடில் எத்தனை டேக்குன்னாலும் பரவாயில்லைன்னு சளைக்காமல் கட்டிப் பிடித்து ஃபீலிங் காட்டினார். "என்னம்மா சினிமாவே பார்த்ததில்லையா?" என்று பிரியங்காவிடம் கோபித்துக் கொண்டு வந்து மானிட்டர் முன்பு அமர்ந்தார் பேரரசு.

வேகமாக வந்த பார்த்திபன், "டைரக்டர் சார்! இந்த சீன்ல நடிக்க நான் சொல்லிக் கொடுக்கட்டுமா?" என்றார். "ஏதாவது செய்யுங்க சார்" என்று இவர் சொல்ல, கொஞ்சநேரம் பிரியங்காவை ஓரமாக தள்ளிக்கொண்டு போன பார்த்திபன், அவருக்கு ஏதேதோ சொல்லிக் கொடுத்தார்.

'இப்ப டேக் போகலாம் சார்' என்று சைகை காட்ட, செம மூடில் அந்த சீனில் நடித்து முடித்தார் பிரியங்கா. "என்ன சார் பண்ணினீங்க?" என்று பேரரசு கேட்க, "அதுதான் பார்த்திபன் பிராண்ட் ஸ்பெஷல் காதல் பொடி" என்று சிரித்துவிட்டுப் போனா£ர்.

டேக் நன்றாக வந்த சந்தோஷத்தில் நம் பக்கம் திரும்பினார். "ஆக்ஷன் சீன், பன்ச் டயலாக் இதெல்லாம் பக்காவா பண்ணிடுவேன். அதென்னமோ இந்த லவ் சீன்ல மட்டும் கொஞ்சம் வீக். சொல்லிக் கொடுக்கிறப்போ ஹீரோயின்களை விட எனக்குதான் கூச்சம் அதிகமாகிறது. பார்த்திபன் சார் அதுல எக்ஸ்பர்ட்ங்கிறத ப்ரூவ் பண்ணிட்டார்" என்றார்.

 “உங்க படத்துல பார்த்திபன் எப்படி?” என்றால், "இது தாதாக்களின் கதை. ஹீரோ ஒரு தாதா என்றால் அதற்கு எதிரில் நிற்கிறவர் அவரை விட பக்காவான தாதாவாக இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு ஒரே சாய்ஸா வந்தவர் பார்த்திபன் சார். அவர்கிட்ட கதையை சொன்னவுடன் ஒத்துக்கிட்டார்.

அதோட வழக்கமான பார்த்திபன் சாரோட குறும்போ, குத்தல் டயலாக்கோ இருக்காது. டெரரான தாதா. ஹீரோ உன்னி முகுந்தனுக்கும், பார்த்திபன் சாருக்கும் நடக்கிற மோதல்தான் படம். பொதுவா என்னோட படங்கள்ல கொஞ்சம் சென்டிமென்ட், குத்துப்பாட்டு இருக்கும். என்னோட சாயல் எதுவுமே இல்லாமல் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு தாதா கதை. என் ஹீரோயின்கள் கிளாமரா இருக்க மாட்டாங்க. இந்தப்  படத்துல அகன்ஷா பூரி கொஞ்சம் கிளாமரா பண்ணியிருக்காங்க. காரணம்,  மாடலிங் பண்ற பொண்ணா வர்றாங்க" என்றார்.

“தமிழ்நாட்டு ஊர்ப் பெயரை விட்டு விட்டீங்களே?” என்றால், "படத்துல ஜெயில் முக்கிய போர்ஷனா இருக்கு. அதனால ஊர்ப்பேரை சொன்னா, ஜெயில் நினைவுக்கு வர்ற மாதிரி இருக்கணும்னு யோசிச்சேன். தமிழ்நாட்டுல புழல், வேலூர், பாளையங்கோட்டை அந்த மாதிரி பெயர்கள்தான்.

இந்த பெயர்கள்ல படம் வந்திடுச்சு. அதான் திகாரை தேர்வு செய்தேன்" என்றார். "சார், அடுத்து பார்த்திபன் சார் பிரியங்காவை தூக்கி சுத்துற மாதிரி ஷாட் சார்" என்று உதவியாளர் நினைவு படுத்த, "பார்த்திபன் சார்கிட்ட சொல்லு அவரே பார்த்துக்குவார்" என்று சொல்லிவிட்டு... "வாங்க பிரதர் சூடா ஒரு கப் காப்பி சாப் பிடலாம்" என்று அழைத்துப் போனார் பேரரசு.

-மீரான்