உணர்வை ஏற்படுத்தும் திருப்பம்!



நவம்பர் 13ஆம் தேதி மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் இயக்குனர் பிரபு சாலமனுக்கு மறக்க முடியாத நாள். அன்றுதான் அவர் இயக்கிய ‘கயல்’ படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீடு. வார்த்தையால் வர்ணிக்க முடியாதளவுக்கு விஷுவல்ஸ் மிரட்டுகின்றன.

‘கயல்’ படத்தின் இறுதிக் கட்ட பணியில் இருந்த பிரபுசாலமனை சந்தித்தோம். யார் இந்த ‘கயல்’ ? சுனாமி பாதிப்புகள் ஏற்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டது. 2004 டிசம்பர் 26ஆம் தேதி உலகம் ஒரு மறக்க முடியாத சோகத்தை சந்தித்தது.

கடலோர மாவட்டங்களில் அதன் பாதிப்பு வார்த்தையால் சொல்ல முடியாதளவுக்கு உச்சமாக இருந்தது. எத்தனையோ பேர் உறவுகள், சொத்துகள், உடைமைகளை இழந்தார்கள். அதில் தொலைந்து போன ஒரு காதல் கதைதான் ‘கயல்’. வெளி உலகம் தெரியாத கயலிடம் ஒரு இளைஞன் உணர்வுபூர்வமாகப் பேசுகிறான்.

அந்த சந்திப்பு அவளிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. அது காதலா என்று கூட உணர முடியாத நிலையில் அவனைத் தேடிப் போகிறாள். அந்த காதல் பயணத்தைத்தான் உணர்வுபூர்வமாகவும், விஷுவலாகவும் சொல்லியிருக்கிறேன். 

உங்கள் கதையில் பெரிய ஹீரோக்கள் இருப்பதில்லையே...என்னுடைய ஆரம்பகாலப் படங்களில் விக்ரம், அர்ஜுன் இருந்தார்களே! ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ கதைகளில் பிரபலங்கள் தேவைப்படவில்லை. அதே சமயம் என் கூடவே பயணமாகிற நடிகர்கள்தான் என் கதைக்கு தேவைப்பட்டனர். அந்த வகையில் இந்தப் படத்தின் நாயகன் சந்திரன் இரண்டரை ஆண்டுகள் என்னுடன் டிராவல் பண்ணியிருக்கிறார். நாயகி ஆனந்தியும் அப்படித்தான்.

படத்துல வேற என்ன ஸ்பெஷல்?

படத்தில் ஒரு பயணப்பாடல் வருகிறது. அதற்காக நிறைய பயணப்பட்டிருக்கிறோம். பத்து வினாடிகளே வரும் ராஜஸ்தான் காட்சிகள், மூன்று ஷாட்களுக்காக மட்டும் சிரபுஞ்சி சென்றது, லே, லடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டும் படமாக்கியது என நிறைய மெனக்கெடல் படத்துல இருக்கும்.

இசை?

வழக்கம் போல இந்தப் படத்திலும் இமான், யுகபாரதி இருவரும் பாடலுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டத்துக்காக நிறைய உழைத்திருக்கிறோம். முழு காமெடியுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடைசி அரை மணி நேரம் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் இருக்கும். அந்த திருப்பம் புதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.

- சுரேஷ்