கட்டிப்பிடித்து உருண்ட கதாநாயகி!



நவம்பர் குளிரில் பசுமை போர்த்திக் கிடந்தது சேரன்மாதேவி... "தமிழில் 'திலகர்'  படத்தில் நேட்டிவிட்டியான கேரக்டரில் சூப்பரா பண்ணிக்கிட்டிருக்கேன். சேரன்மாதேவியில ஷூட்டிங் நடக்குது, வரமுடியுமா?" என்று கேட்டிருந்தார் கிஷோர்.

நடிப்பை தெய்வமாக நினைத்து, அதைத் தவிர வேறு எதிலும் சிந்தனை செலுத்தாத ஒரு சில நல்ல நடிகர்களில் கிஷோரும் ஒருவர். அவர் அழைப்பை தட்டமுடியுமா?. சேரன்மாதேவிக்குச் சென்றோம்.


அமெரிக்காவில் படித்து திரும்பிய துருவாதான் ஹீரோ. வில்லேஜ் மேக்-அப்பையும் மீறி அந்த அமெரிக்கத்தனம் தலைகாட்டிக் கொண்டிருந்தது. அருகில் ஹீரோயின் மிருதுளா. 'வல்லினம்' படத்தின் மூலம் அறிமுகமான அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. இயக்குனர் பெருமாள் பிள்ளை மானிட்டரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, டான்ஸ் டாஸ்டர் பாபி பாடலுக்கான டான்ஸ் மூவ்மெண்டை சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்சம் உயரமான இடத்திலிருந்து ஹீரோவும், ஹீரோயினும் உருண்டு வருவது மாதிரியான காட்சி.

பாபி மாஸ்டர் ஒரு உதவியாளருடன் உருண்டு காட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரம் அதை கவனித்துக் கொண்டிருந்த துருவா நேராக இயக்குனரிடம் வந்தார். "சார் இந்த சீன் வேண்டாம் சார். எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு. வேற மாதிரி வையுங்க சார்" என்றார் அப்பாவியாக. "சரி நீங்க போங்க, நான் மாஸ்டர்கிட்ட பேசுறேன்" என்றார்.

அதன் பிறகு மாஸ்டரும், இயக்குனரும், மிருதுளாவும் சின்னதாக ஒரு டிஸ்கஷன் செய்தார்கள். பின்னர் துருவாவிடம் சென்ற இயக்குனர் "உருள வேண்டாம். சும்மா நடந்து வாங்க போதும்" என்று சொல்லிவிட்டு வந்தார். துருவாவும், மிருதுளாவும் உயரமான மேட்டில் நின்று கொண்டிருக்க, கேமராமேன் ராஜேஷ் யாதவ் கைகாட்ட, இயக்குனர் ஸ்டார்ட், ஆக்ஷன் சொல்ல, நடந்து வரத் தொடங்கினார் துருவா...

அப்போது அவர் மீது திடீரெனப் பாய்ந்த மிருதுளா அப்படியே கட்டிப்பிடித்தபடி உருள... துருவா மிரள... சுற்றி நின்ற கூட்டம் கைதட்டி ரசிக்க... காட்சி படமானது. வெட்கம் பிடுங்கித் தின்க... துருவா ஓட்டமெடுக்க மிருதுளா எதையோ சாதித்துவிட்ட மாதிரி இயக்குனரிடம் வந்து "ஓகேவா சார்" என்று கேஷு வலாகக் கேட்டு விட்டுச் சென்றார்.

காட்சி நல்ல முறையில் பட மான திருப்தியோடு நம்மிடம் திரும்பினார் இயக்குனர். 'வெள்ளை வேட்டி, அருவா, சுமோன்னு நீங்களும் ஹரி ஸ்டைல்ல படம் எடுக்கிற மாதிரி தெரியுதே?' என்றால், "அவர் படம் மாதிரி இதுவும் கமர்ஷியல் படம்தான். ஆனால் சொல்கிற விஷயம் வேறு. குற்றப் பரம்பரையாக சித்தரிக்கப்பட்ட ஒரு சமூகம். அதிலிருந்து விடுபட தனது தம்பியைப் படிக்க வைத்து முன்மாதிரியாக்க நினைக்கிறார் கிஷோர்.

படித்து விட்டுத் திரும்புகிற தம்பியே அரிவாளைக் கையில் எடுக்க வேண்டிய நிலை வந்து விடுகிறது. பூவாக இருந்தவனைப் புயலாக மாற்றுகிறது சமூகம். அண்ணனால் செய்ய முடியாததை தம்பி எப்படிச் சாதிக்கிறான் என்பது கதை. இடையில் காதல், சென்டிமென்ட், காமெடி என அத்தனை விஷயங்களும் இருக்கிறது" என்றார். நம்மை அழைத்த கிஷோரை எங்கே என்று இயக்குனரிடம் கேட்டால், "அங்க பாருங்க" என்று கைகாட்டினார். நடிகை அனுமோளை அலாக்காக முதுகில் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார் கிஷோர். அதனைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அது சரி...

-மீரான்