புரட்டிப் போட்ட ரயில் பயணம்!



‘ஜெயம் கொண் டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து ஆர்.கண்ணன் இயக்கும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. மசாலா பிக்ஸ் என்ற தயாரிப்பு  நிறுவனம் ஆரம்பித்துள்ள இவர், இந்தப் படத்தை குளோபல் இன்ஃபோடையின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார். டப்பிங், மிக்ஸிங் என உச்ச கட்ட ஒர்க்கில் இருந்த ஆர்.கண்ணன் ‘வாங்க சாப்பிடலாம்’ என்று அழைத்தார். சாப்பிடும் போதே பேச ஆரம்பித்தார்.

“‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தோட கதைக்காக மட்டுமே சுமார் 2 வருடங்கள் எடுத்துக் கொண்டேன். ஏன்னா, எனக்கு ஸ்கிரிப்ட் ரொம்ப முக்கியம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டோரியை டெவலப் பண்ற பழக்கம் எனக்கு கிடையாது. அந்த வகையில் இந்தப் படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் ரயிலில் விமல், பிரியா ஆனந்த், சூரி மூவரும் யதேச்சையாக சந்திக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறேன்.

விமல் இதில் அடுத்த கட்டத்தை தொட்டிருக்கிறார் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். சூரி இதுல வெறும் காமெடியனாக மட்டும் வராமல் இன்னொரு நாயகனாகத் தெரிவார். பிரியா ஆனந்தை புது லுக்கில் பார்க்கலாம். அந்தளவுக்கு அவருடைய கேரக்டர் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். என்னுடைய படத்துல வில்லன் என்று தனியாக காட்டமாட்டேன். ஏன்னா, எல்லாருடைய வாழ்க்கையிலும் கோபம், எரிச்சல் இருக்கும். அவரவர் கோணத்தில் அவரவர் செய்வது நியாயமாக இருக்கும்.

அப்படியொரு கேரக்டரில் நாசர் வர்றார். படத்துல ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் ரயில். கதையோட முக்கியமான எல்லா இடத்திலேயும் ரயிலுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை அழகாக என்னுடைய கேமராமேன் பி.ஜி.முத்தையா படமாக்கியிருக்கிறார். டி.இமான் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டடித்துள்ளன. பாடலை ஹிட்டாக்கிய ரசிகர்கள் படத்தையும் ஹிட்டாக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் ஆர்.கண்ணன்.

-சுரேஷ்