கிசுகிசுவில் சிக்காத சோனாக்ஷி !



பீக்கில் இருக்கும் பாலிவுட் ஹீரோயின் வீடியோ ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்பது அரிது. ஆனால் அதை செய்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. காரணம், அந்த ஆல்பம் டாப்பில் இருக்கும் ஹனி சிங் தயாரித்து, பாடி, நடித்தது.

'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ரஜினியைப் போற்றி உருவான லுங்கி டான்ஸ் பாடலின் ஓனர்தான் இந்த ஹனி சிங். இவரது வளர்ச்சி பாலிவுட்டில் யாரும் எதிர்பார்க்காதது. ஆள் பார்ப்பதற்கு, ஹர்பஜன் சிங் போலத்தான் இருக்கிறார். பாடுவதுடன் ஆடவும் செய்கிறார். இவர் இல்லாத பாலிவுட் படப் பாடல்கள் பிரபலம் ஆகாது என்ற நிலைதான் இப்போது நிலவுகிறது. அதனால் படத்தில் இல்லாவிட்டாலும் புரமோஷன் சாங்கிலாவது இவரைச் சேர்த்துக்கொள் கிறார்கள்.

அப்படிப்பட்டவருடன் வந்த வாய்ப்பை லபக் என கைப்பற்ற ரூ.80 லட்சம் சம்பளமாகப் பெற்றாராம் சோனாக்ஷி. மொத்தமே ஒன்றரை நாள் கால்ஷீட்தான். அதில் முழுப் பாடலையும் படமாக்க வேண்டும் என கண்டிஷன். படமாக்கியும் விட்டார்கள்.

இந்த ஆல்பம் ரிலீசும் ஆகிவிட்டது. இப்போது சோனாக்ஷி, ஹனி சிங் இடையே நல்ல நட்பு நிலவுகிறது. தன்னுடன் பணியாற்றும் ஆண்களுடன் சோனாக்ஷி நட்பு வளர்த்துக்கொள்வது இது முதல் முறை கிடையாது. இவரது நெருங்கிய நண்பர்களான பிரபுதேவா, அக்ஷய் குமார் ஆகியோரும் அவருடன் பலமுறை பணியாற்றியவர்கள்; பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்.

இப்படி ஆண் நண்பர்களுடன் பழகினாலும் இதுவரை இவர்களுடன் இணைத்து சோனாக்ஷி பேசப்படவில்லை. எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை. அதற்கு காரணம், நிஜமாகவே நட்புடன் மட்டுமே அவர் பழகுவதுதான். அத்துடன் சோனாக்ஷிக்கு இருக்கும் காதலரும்தான் என்கிறார்கள். சோனாக்ஷியின் ரகசிய காதலன், மாடல் உலகத்தைச் சேர்ந்தவராம். ஆனால் இதுவரை அவர் பிக்சரில் வரவில்லை. எந்த சினிமா விழாவுக்கும் பொது இடத்துக்கும் காதலருடன் சோனாக்ஷி வலம் வருவதில்லை.

இது அவருடைய அப்பா அவருக்கு போட்டிருக்கிற தடை என சொல்லப்படுகிறது. சோனாக்ஷியின் அப்பாவான சத்ருகன் சின்ஹா, 'சினிமா வாழ்க்கை முடிவுக்கு வரும் வரை திருமணம் பற்றி யோசிக்காதே. திருமணம் பற்றி யோசிக்காத வரை காதலை வெளிச்சத்துக்கு கொண்டு வராதே' என கட்டளை போட்டிருக்கிறாராம். இதுதான் தனக்கு நன்மை பயக்கும் என தந்தை வாக்கை மந்திரமாகக் கொண்டிருக்கிறார் சோனாக்ஷி.

ஷாஹித் கபூர், அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் என இளம் ஹீரோக்கள் இவருடன் நடித்துள்ளனர். இவர்கள் மூவருமே சோனாக்ஷியுடன் டேட்டிங் செல்ல படாத பாடு பட்டார்களாம். ஆனால் சோனாக்ஷி அசரவில்லை. இவர்களுக்கு பிடி கொடுக்கவில்லை. முதல் படத்திலேயே சல்மான் கானுடன் நடித்தும் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தும் டாப் இடத்துக்கு வந்துவிட்டதால் சோனாக்ஷியை யாராலும் நெருங்க முடியவில்லை என்றும் ஒரு தயாரிப்பாளர் சொல்கிறார்.

அவர் வெற்றி பெற்ற நடிகையாக இருக்காவிட்டால் டேட்டிங் பெயரால் மற்ற ஹீரோயின்களைப் போல இவரையும் கிசு கிசுவில் ஹீரோக்கள் சிக்க வைத்திருப்பார்கள் என அந்தத் தயாரிப்பாளர் கூறுகிறார்.

- ஜியா