50 நொடிக்கு 50 லட்சம்



‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் டீசரை பார்த்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை... அந்தப் படத்தை இயக்கிய ஆர்.நாகேந்திரன் நல்லா வருவார் என்பதுதான். அந்தளவுக்கு டீசர் அசத்தலாக இருந்தது. விமல் இதன் நாயகன். ‘புன்னகை பூ’ கீதா இதன் நாயகி. இசை ஜி.வி.பிரகாஷ் குமார்.

“இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது காமெடி கதையாகத்தான் இருந்தது. ஏன்னா, போலீஸ்காரரின் மகனான விமல் வேலைவெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பார். அந்த வகையில் கதையில் காமெடி காட்சிகள் இயல்பாக ஒட்டிக் கொண்டன. ஆனால் போலீஸ் ஆபீசராக நடிக்கும் சமுத்திரக்கனியின் கேரக்டர் டெவலப் ஆனதும் கதை ஆக்ஷன் கலந்த சீரியஸ் படமாக மாறியது.

டீசரில் நீங்கள் பார்த்த ஆக்ஷன் காட்சியை பொதுவாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டெக்னலாஜியை பயப்படுத்தி எடுப்பார்கள். ஆனால் நாங்கள் அந்தக் காட்சியை ரியலாக எடுக்க திட்டமிட்டோம். அந்த முயற்சிக்கு சண்டை இயக்குநர் சில்வா, ஆர்ட் டைரக்டர் விதேஷ் என டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பு இருந்ததால் சுலபமாக எடுக்க முடிந்தது. பொதுவாக நடிகர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சியை கயிறு கட்டி எடுப்பார்கள். ஆனால் இதில் வித்தியாசமான ஸ்டேண்டு பயன்படுத்தி எடுத்தோம்.

ஏழெட்டு டேக்குக்குப் பிறகுதான் அந்தக் காட்சி ஓ.கே ஆனது. படத்துல அந்தக் காட்சி 50 நொடிகள்தான் இடம்பெறுகிறது. ஆனால் அந்த காட்சிக்கு மட்டும் ஐம்பது லட்சம் செலவு செய்தோம். மும்பையில் இருந்து கேமரா, ஆஸ்திரேலியாவில் இருந்து ஆபரேட்டர் என அந்தக் காட்சிக்காக நிறைய மெனக்கெட்டு விட்டோம்.

அதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. டீசர் எந்தளவுக்கு திருப்தியாக இருந்ததோ அதேபோல் படமும் திருப்தி தரும்” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

-எஸ்