அஜித், விஜய், தனுஷ் படத்துக்கு துண்டு போடும் ராஷி கன்னா!



தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்ட ராஷி கன்னாவின் பார்வை அடுத்து தமிழ்த் திரையுலகம் பக்கமாக திரும்பியிருக்கிறது. நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து நடித்த ‘அயோக்யா’, ‘சங்கத் தமிழன்’ படங்கள் சரியாகப் போகாததால் கொஞ்சம் வருத்தம் அடைந்திருக்கிறார்.

எனினும் சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கா பச்சா’, சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’, சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் ‘அறுவா’ என்று அடுத்தடுத்து அமோக அறுவடைக்குக் காத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் சும்மா இருந்தாலும், ட்விட்டரில் பெரிய ஹீரோக்களுக்கு சோப்புப் போட்டு மேலும் வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

‘அஜித் அற்புதமான மனிதர்’, ‘தனுஷ் பிரமாதமான நடிகர்’, ‘விஜய் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றெல்லாம் ட்விட்டரில் ஏகத்துக்கும் பிட்டு போட்டிருக்கிறார். இதன் மூலமாக பெரிய நடிகர்களின் கவனத்தை ராஷி ஈர்க்க முயற்சிக்கிறார் என்று மற்ற நடிகைகள் மவுனமாக புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

- கிருஷ்ணா