நாவை தூண்டும் பரோட்டா



வாழை இலையில் பரோட்டாவை பிய்த்து ேபாட்டு அதன் மேல் சால்னாவை ஊற்றி ஊற வைத்து சாப்பிடும் போது... அதன் சுவையே அலாதி. என்னதான் பரோட்டா கடைகள் பல இருந்தாலும் கடந்த 49 வருடமாக அதே சுவை மாறாமல் இன்றும் உணவினை பரிமாறி வருகிறது ‘குற்றாலம் பார்டர் ரஹ்மத் பரோட்டா’ கடை.

‘1970ல் என்னுடைய தாத்தா ஹாஜி முகமது அசன் தமிழ்நாடு -கேரளாவை இணைக்கும் எல்லையில் ஆரம்பித்தார். அன்று முதல் பார்டர் கடை என்று அழைக்கப்பட்டு வரும் இந்த கடையை தாத்தா லாரி டிரைவர்களுக்காகத்தான் முதலில் துவங்கினார். குற்றாலம் கேரளா எல்லை என்பதால், அவ்வழியாக செல்லும் டிரைவர்களின் பசியை போக்கவேதான் ஆரம்பிக்கப்பட்டது.

நாளடைவில் மக்கள் மத்தியில் உணவின் சுவை பேசப்பட... இப்போது எல்லாத் தரப்பு மக்களும் இங்கு வருகிறார்கள். இ்ங்கு பரோட்டாவிற்கு பரிமாறப்படும் நாட்டுக்கோழி வகைகளும், காடை வகைகளும் உலகப் புகழ் பெற்றதாகும். தற்போது அயல்நாடு மட்டும் இல்லாமல் சென்னை மற்றும் கோவையிலும் எங்களின் கிளைகள் உள்ளது.

உணவின் சுவை மாறாமல் இருக்க காரணம் தாத்தா சொல்லிக் கொடுத்த மசாலாக்கள் செய்முறையை தான் இன்றும் பின்பற்றி வருகிறோம். பாரம்பரியம் மாறாமல் அதே சுவை கொடுத்துவருவதால்  வெற்றிகரமாக 50ம் ஆண்டு நோக்கி பயணம் செய்ய இருக்கிறோம். என் இரு மகன்கள் முகமது அசன் மற்றும் ராஜா முகமது என்னுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார்கள்’’ என்றார் இஸ்மாயில்.

தொகுப்பு: ப்ரியா மோகன்