பாவ் பாஜி பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு.

பாவ் பாஜி மசாலாவிற்கு...

உருளைக்கிழங்கு - 3,
கேரட் - 1/2 கப்,
பீன்ஸ் - 1/2 கப்,
பச்சைப்பட்டாணி - 1/2 கப்,
காலிஃப்ளவர் - 1 கப்,
குடைமிளகாய் - 1,
வெங்காயம் - 1,
தக்காளி - 4,
இஞ்சி பூண்டு விழுது - 1½ டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
சோம்பு, கொத்தமல்லித்தழை - சிறிது,
வெண்ணெய், எண்ணெய், உப்பு,
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

பாவ் பாஜி மசாலா செய்ய...
வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, கேரட் தோலை சீவி, பீன்ஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து நன்கு வேகவைத்து தண்ணீரை வடித்து மசித்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி வெந்நீரில் அலசி கொள்ளவும். கடாயில் வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி காயவைத்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போக வதக்கவும்.

வதக்கியதும் குடைமிளகாய், காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பாவ்பாஜி மசாலா, உப்பு போட்டு வதக்கவும். பின்பு மசித்த காய்களை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து மசாலாவில் தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
 
மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பாவ்பாஜி கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.