தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட.. ஆமா..! வில்லினில் பாட...



(அழிந்து வரும் கலைகளை போராடிக் காப்பாற்றும் பெண் கலைஞர்களைப் பேசும் தொடர்...)

எல்லாக் கலைகளும் கண்டு ரசிக்க பயன்பட்டது என்றால், வில்லுப்பாட்டு மட்டுமே கருத்துக்களை சொல்ல பயன்பட்டது. ஐம்புலனுக்கும் வேலை தரும் நவரசங்கள் நிறைந்தது. வீசுகோலை விரல்களில் சுழற்றி வில்லோடு இணைந்த நாணில் அடிக்க... கிளம்பும் ஒலியில் உடுக்கின் இசையும் கலக்க... ‘தந்தனத்தோம் என்று சொல்லியே... ஆமா!’ என்கிற பின் பாட்டுடன் கேட்கும் வில்லிசைக் கலை மேடை பார்க்கவே அதகளம்தான்.எந்தக் கலையாக இருந்தாலும் அதன் மூல வித்து உணவு தேடுதல்.
ஆதிகாலத்தில் இறை தேடிச் சென்ற வேடவர்கள், உணவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தங்கள் கைகளில் இருந்த வில்லையும் நாணையும் இணைத்து, சுருதி மீட்டிப் பாடிய பாட்டே வில்லுப்பாட்டானது.  பிற்பாடு போருக்கு சென்ற வீரர்கள் மன்னனையும், தங்களையும் மகிழ்விக்க, வெற்றி வாகை சூடிய மன்னனின் வீரக் கதைகளையும், வீர மரணம் எய்த மன்னர்கள் வரலாற்றையும் பாட பயன்பட்ட கலையாகவும் இது இருந்தது.

‘கலைவாணர் வில்லிசைக் கலைக் குழு’ என்கிற பெயரில் மனைவி சங்கீதாவுடன் இணைந்து வேலவன் சங்கீதாவாக 36 ஆண்டுகளைக் கடந்து வில்லிசை நிகழ்ச்சி நடத்தி வரும் கலைஞர் வேலுச்சாமியிடம், வில்லிசைக் கலை குறித்து பேசியபோது...“பேசினால் தமிழில் பேசடா இல்லாட்டி பேசாமல் செத்துத் தொலையடா” எனவில்லிசையில் நான் பாடிய பாடல் வரிகளைக் கேட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர், என் குரலின் கம்பீரத்தை வெகுவாக ரசித்தார். அவரின் கரங்களாலே 2007ல் கலைமாமணி விருதையும் நான் பெற்றேன் என்றவர், பள்ளித் தலைமை ஆசிரியராக பொறுப்பில் இருந்துகொண்டே வில்லிசைக் கலையிலும் ஈடுபட்டதை நம்மிடம் பகிர்ந்தார்.

மன்னர்கள் தங்கள் வெற்றிச் செய்தியை, கடல் மற்றும் ஆற்றின் கரையில் நின்று கொண்டாடிய இந்தக் ‘கரை நாடக இசை’யே, பின்னாளில் ‘கர்நாடக இசை’யாக மருவியது என்றவர், மற்ற எல்லாக் கலைகளுமே ஆட்டக் கலைதான். வில்லிசை கலை மட்டுமே இயல் இசை நாடகத்தை உள்ளடக்கியது என்கிறார். வில்லிசையின் வழியாகவே இதிகாசங்களும், புராணக் கதைகளும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. வில்லிசை பாடும் புலவன் நவரசங்களையும் கற்றுத் தேர்ந்திருப்பதுடன், எல்லா இதிகாசங்களையும், புராணங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

இசைக் கருவிகளிலே உயரமானது வில்லிசைக் கருவி. முக்கூடற்பள்ளு இலக்கியத்திலும் வில்லுப்பாட்டு குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வில்லிசையில் 80 சதவிகிதம் கலைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் கலையாகவும் இது இருக்கிறது. பனையேறும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் மட்டுமே இருந்த கலையாக, இதில் பயன்பாட்டில் இருக்கும் கருவிகள் பனையால் செய்யப்பட்டுள்ளது. பிரதான கருவியான ‘வில்’ கூந்தல் பனையிலும், பனை ஓலை நாரில் ‘நாணும்’, குடம் அடிக்கும் பொத்தி பனை மட்டையிலும் தயாரிக்கப்படுகிறது.

வில்லிசையை வளர்த்ததில் மிகப்பெரும் பங்கு வித்வான் சாத்தூர் பிச்சுக்குட்டி ஐயாவைச் சேரும் என்றவர், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம் பயணித்து, வில்லிசையை பரப்பி, தட்டு நிறைய தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்யப்பட்டவர் அவர். அவரைத் தொடர்ந்து செவளகுலம் தங்கய்யா சிறப்பாக செய்தார்.

வில்லுப்பாட்டை மக்கள்மத்தியில் அதிகம் கொண்டு சேர்த்த பெருமை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் சேரும். வில்லுப்பாட்டுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சாத்தூரில் தங்கி, சாத்தூர் பிச்சுகுட்டி ஐயாவிடம் வில்லுப்பாட்டு பயின்று கண்ணகியின் கதையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை சேரும்.

கண்ணகியின் துயரத்தைச் சொல்ல எஸ்.எஸ்.ஆர் போட்ட டியூன் சிறப்பானது. காந்தி மகான் கதையையும், தேசிய கருத்துக்களையும் வில்லிசையில் பரப்பிய பெருமை வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தை சேரும். பெண்களில் விளாத்திக்குளம் கலைமாமணி ராஜேஸ்வரி, கலைமாமணி ஆத்தூர் கோமதி, முடிமண் கருப்பாயி அம்மாள் போன்றவர்கள் வில்லிசைப்பதில் சிறந்த கலைஞர்கள்.

நம்முடைய கருத்தைச் சொல்ல நமக்கு ஒரு ஊடகம் தேவை. அதற்கு நான் தேர்ந்தெடுத்த ஊடகம் இந்த வில்லுப் பாட்டுதான். வில்லு என்றால் ஒலி எனவும் பொருள் உண்டு. மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை ஒலி வடிவில் செலுத்த, அறிவுத் தளத்தில் நின்று வேலை செய்யும் கலையாகவும் இது இருக்கிறது.

வில்லுப்பாட்டு வழியே சொல்லப்படும் செய்தியில் மக்களுக்கு ஈர்ப்பை உண்டாக்க, நிகழ்ச்சி அதற்கேற்ப களைகட்ட வேண்டும். அதில்தான் இருக்கிறது சூட்சுமம். புராண, இதிகாசங்கள், மன்னர்களின் வெற்றி வரலாற்றைத் தாண்டி, விழிப்புணர்வு செய்திகளையும் வில்லிசையில் தருகிறோம். முக்கியமாக எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, தொழுநோய் குறித்த விழிப்புணர்வு, பன்றி காய்ச்சல், பறவைக் காய்ச்சல் நிகழ்வுகளையும் வில்லுப்பாட்டின் வழியே மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

வில்லிசையிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகம். தற்போது ஆணும் பெண்ணுமாக இணைந்தே வில்லிசைக் குழு இடம் பெருகிறது. ஆண்கள் மட்டுமே வில்லிசைத்து பாடிய நிலையில், ஆண்கள் பங்கேற்க முடியாத சூழலை வீட்டிலிருந்த பெண்கள் தன் வசமாக்கினர். பெண்களால் மட்டுமே சில வில்லிசைக் குழுக்கள் இயக்கப்படுகிறது. 

இதில் வீசுகோல் வீசுவது மிகப் பெரும் கலை. வீசுகோலை உள்ளங்கையில் வைத்து சுழற்றினால் சுழன்று கொண்டே இருக்கும். இதைப் பார்க்க கூட்டம் கூடும். இதை பெண்கள் அழகாக, நேர்த்தியாகச் செய்கிறார்கள். இதற்கு பயிற்சி தேவை என்றவர், பாடுகின்ற கலை காலப்போக்கில் ஆடுகின்ற கலையாகவும் மாறிவிட்டது என்கிறார்.

முன்பு வில்லிசைக் கலை ஒரு வாரம் நடக்கும். பிறகு 3 நாளாக மாறியது. இப்போது 3 மணி நேரமாகச் சுருங்கிவிட்டது என்றவர், கடவுள் நம்பிக்கையும், கோயிலும்,
திருவிழாக்களும் இருக்கும்வரை இந்தக் கலைக்கு அழிவில்லைதான். டெக்னாலஜி வளர்ச்சியில் மக்களின் மனோபாவம் பெரிதும் மாறிவிட்டது. அதனால் இந்தக் கலையை ரசிப்பவர்கள் குறைந்துவிட்டனர்’’ என்கிறார் வருத்தத்தோடு.

அரைத்த மாவையே அரைக்காமல் காலத்திற்கேற்ற புதுமைகளைப் புகுத்தினால்தான் மக்கள் ரசிக்கிறார்கள் என நம்மிடம் பேசியவர் வில்லிசைக் கலைஞர் சங்கரன்கோயில் மாரியம்மாள். ராமர் வந்த கதையையும் அவர் வனவாசம் சென்ற கதையை மட்டும் பேசாமல், நவீன டிரென்டிற்கு ஏற்ற, நகைச்சுவை, சினிமாப் பாடல்கள், சினிமா வசனம், அரசியலை ஆங்காங்கே புகுத்தி, பட்டும் படாமலும் புகுத்த, மக்களும் ஆர்பரித்து ரசிக்கிறார்கள் எனப் பேசத் தொடங்கினார்.

‘‘என் அப்பாவும் வில்லிசைக் கலைஞர்தான். எங்கள் வீட்டில் நாங்கள் நால்வரும் பெண்பிள்ளைகள். நான் 5ம் வகுப்பு படிக்கும்போதே என் அப்பா என்னை இந்த கலைக்குள் கொண்டு வந்து பயிற்சி கொடுக்க தொடங்கினார். பள்ளி முடிந்ததும், மாலை 5 முதல் 10 மணி வரை பயிற்சி எடுப்பேன். தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் செல்ல, புராண இதிகாசங்களை அப்படியே உள்வாங்கி, அப்பாவிற்குப் பிறகு குழுவை நடத்த ஆரம்பித்தேன். திருமணத்திற்குப் பிறகு, என் கணவர் முத்துக்குமாரும் இணைந்து குழுவில் கட்டைத் தாளம் போட தொடங்கினார்.

அவர் குழுவிற்குள் வந்த பின்னரே நிகழ்ச்சி கலகலப்பானது. நிகழ்ச்சிக்கு நடுவே நகைச்சுவைகளையும், டிரன்டான சினிமாப் பாடல்களையும் அவர் புகுத்துவார்.
வில்லு, வீசுகோல், குடம், குடம் அடிக்கும் பொத்தி, தாளம், கட்டைத் தாளம், உடுக்கையுடன் 6 பேர் இணைந்தது ஒரு வில்லிசைக் குழு.

குழுவில் தலைமைப் பாடகியான எனக்கு வில்லிசைப் புலவர் என்று பெயர். புலவர் என்றால் புகழ்ந்து பாடி பரிசு வாங்குபவர்தானே. அப்படி நாங்கள் கோயில்களில் புகழ்ந்து பாடி அன்பளிப்பு பெறுவதால் இந்தப் பெயர். உடன் பாடும் துணை பாடகி வலம் பாடுபவர். என்னோடு வலம் பாடுவது என் கடைசி தங்கை மகேஸ்வரி. இதில் மையப் பாடகியான நான் “தந்தனத்தோம் என்று சொல்லியே...ஆமா..! வில்லினில் பாட.. ஆமா..! வில்லினில் பாட.. வந்தருள்வாய் கலைமகளே” என்றால், அதை உடன் பின்னால் இருப்பவர் அப்படியே வாங்கிப் படிப்பார்கள்.

கோயில் விழாக்கள் தவிர்த்து எங்களை இல்லம் தேடி கல்வி, தூய்மை பார்வை இயக்கம், கல்வி மேலாண்மைக் குழு, நெகிழி ஒழிப்பு போன்ற அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் பயன்படுத்துகிறார்கள் என்றவர், சொல்ல வேண்டிய கருத்தை புள்ளி விபரங்களோடு சிறிய குறிப்பாக மட்டுமே எங்களிடம் கையளிப்பார்கள். அதை வைத்து நாங்களே பாட்டு எழுதி மெட்டு போடுவோம். இதில் இடை இடையே நகைச்சுவை, சினிமாப் பாடல், அரசியல் என புகுத்தினால் ஒரு மணி நேரம் மக்களை ஒரே இடத்தில் கட்டிப்போடலாம். அதுவும் தொலைக்காட்சியில் வரும் சீரியல் நேரமாக இருந்தால் முடிஞ்ச பிறகுதான் கூட்டம்  சேரும்’’  என்கிறார் புன்னகைத்தபடி.

தங்களின் வாரிசுகள் இருவர் பொறியியல் கல்லூரியில் படிப்பதாகக் குறிப்பிட்டவர்,  அவர்கள் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் செல்லும் இடங்களில், ரசிக்கும் சில மாணவர்கள் இதைக் கற்க ஆர்வம் காட்டி மேடை ஏறுகிறார்கள் என்கிறார் இவர்.அவரைத் தொடர்ந்து, வில்லிசை நிகழ்ச்சியில், கொடத்தின் மீது மட்டை கொண்டு அடிப்பேன் என தன்னை அறிமுகப் படுத்தி பேசத் தொடங்கியவர் வில்லிசைக் கலைஞர் மாரியம்மாளின் கணவர் முத்துக் குமார்.

வீசுகோலை சுழற்றி வில்லில் அடிக்க, மணியில் கேட்கும் இசை, பக்க வாத்தியங்களோடு இணைய, பாடகரின் பாடலும், வலம் பாடுபவரும் சேர்ந்தால் நிகழ்ச்சியே கலகலப்புதான். கால மாற்றத்திற்கு ஏற்ப இப்போது தபேலா, ஆர்மேனியம், டோலக்கு போன்ற இசைக் கருவிகளையும் வில்லிசையில் பயன்படுத்த தொடங்கியுள்ளோம் என்றவர், ‘‘தந்தனத்தோம் என்று சொல்லியே... ஆமா!” என்றவாறு அவர் விடைபெற்றபோது, அவரைத் தொடர்ந்து பேசியவர் வில்லிசைக் கலைஞர் சங்கரம்மாள்.

எனக்கு ஊர் கொக்கிரகுளம். ‘வில்லுப்பாட்டுக் கலைஞர் சங்கரம்மாள்’ என்றால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை வரை எல்லோருக்கும் என்னை நன்றாகவே தெரியும் என்றவர், 15 வயதில் பாட ஆரம்பித்து 35 வருடமாக இந்த கலையில் விடாமல் இருக்கிறேன். டெல்லி தமிழ் சங்கத்தில் பாடி விருதுகளை வாங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் திருநெல்வேலி வானொலியில் என்னுடைய வில்லிசை பாடல் அதிகம் இடம் பெறும். கோயில் திருவிழாக்களில் மட்டுமே இப்போது வில்லிசைத்து பாடுகிறேன் என்றவாறு விடைபெற்றார்.

(பாட்டும் பாவமும்

தொடரும்…)

மகேஸ்வரி நாகராஜன்