உன்னி என் கூட இரண்டு நாள் பேசவே இல்லை... கோச்சுக்கிட்டான்!



‘உன்னுடைய  முகவெட்டு மற்றும் பெரிய கண்கள் கொண்ட தமிழ் பேசும் பெண் கிடைத்தால் நான் உன்னை தேர்வு செய்ய மாட்டேன்னு’ தான் என்னிடம் டைரக்டர் சொல்லி அனுப்பினார். என்னுடைய அதிர்ஷ்டம், ஒரு மாசம் அவர் ேதடியும் அவருக்கான அந்த தமிழ் ேபசும் பெண் கிடைக்கல. இப்ப நான்தான் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்’’ என்று பேசத் துவங்கினார் ஷ்ரிதா. இவர் பிரபு சாலமன் இயக்கும் கும்கி 2 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

‘‘இது தான் என்னுடைய முதல் படம். நான் ஐதராபாத் பொண்ணு. பொறியியல் பட்டப்படிப்பு படிச்சாலும் எனக்கு நாடகத் துறை மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. அதனால் 2016ல் ஐதராபாத்திலும் அடுத்த ஆண்டு தில்லியிலும் நாடகம் குறித்த பயிற்சி எடுத்தேன்.  நாடகத் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான், என்னுடைய கோ-ஆர்டினேட்டர் சினிமாவில் நடிக்க விருப்பமான்னு கேட்டார்.

நாடகத்துறையில் அடுத்த வளர்ச்சி சினிமா என்பதால் நானும் சரின்னு சொல்ல அவர் சென்னையில் உள்ள கோ-ஆர்டினேட்டரிடம் என் புகைப்படத்தை கொடுக்க அவர் மூலமாக பிரபு சாலமன் சாரின் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆடிஷனுக்காக நான் போன போது, இந்த படத்திற்காக 200க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தாங்க. அவர்கள் அனைவரையும் பின் தள்ளி நான் தேர்வானேன். இப்படித்தான் நான் வெள்ளித்திரையில் கால் பதித்தேன். மேலும் என் முதல் தமிழ் திரைப்படத்திலேயே ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் எனக்கு கிடைச்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

படத்தில் உங்களின் கதாப்பாத்திரம்

நான் கிராமத்து பெண்ணும் இல்லை, நகரத்து பெண்ணும் இல்லை. இரண்டும் கலந்த ஒரு கலவையான கதாப்பாத்திரம் எனக்கு. ஆனால் படத்தில் இயக்குனர் அவர்களின் கிராமத்து டச் கண்டிப்பா இருக்கும். எனக்கும் யானைக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரம். எல்லாவற்றையும் விட படத்தில் எனக்கு மேக்கப், சிகை அலங்காரம் எதுவுமே கிடையாது, பேன்ட், ஷர்ட்ன்னு ஒரே காஸ்ட்யூம் தான். மத்தபடி நீங்க திரையில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

நாடக என்ட்ரி

அந்த துறை ரொம்பவே பிடித்து போய் தான் அதனை தேர்வு செய்தேன். நாடக துறையை நான் தேர்வு செய்தது ஒரு விபத்துன்னு கூட சொல்லலாம். ஒரு முறை நானும் என் தோழியும் வெளியே சென்று விட்டு வரும் போது என்னுடைய கார் டயர் பஞ்சராகிவிட்டது. அதை சரி செய்ய இரண்டு மணி நேரமாகும்ன்னு டிரைவர் சொன்னார். எங்க கார் நின்ற இடத்திற்கு எதிரே ஒரு ஆடிடோரியம் இருந்தது. அதில் ஒரு நாடகம் நிகழ்ச்சி நடக்க இருப்பதாக என் தோழி சொல்ல. கார் தயாராகும் வரை நாடகம் பார்க்கலாம்ன்னு தான் நானும் என் தோழியும் அங்கு சென்றோம். மேடையில் வண்ண வண்ண உடைகளுடன் ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரத்தை நடித்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது முடிவு செய்தேன் எனக்கான தளம் கலைத்துறைன்னு. உடனே அதே நாடகக்குழுவில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன்.

முதல் ஆடிஷன்

என் புகைப்படத்தைப் பார்த்து பிடித்ததும்… சாலமன் சாரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஒரு பெரிய நீளமான டயலாக் கொடுத்து அதை பேசி ரெக்கார்ட் செய்து அனுப்ப சொன்னாங்க. எனக்கு தமிழ் தெரியாது. அவர்கள் அதை ஆங்கிலத்தில் கொடுத்திருந்ததால், அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிச்சேன். அது பிடித்து போக நேரடியாக ஆடிஷனுக்கு வரச்சொன்னாங்க. சென்னைக்கு வந்து இங்கும் படத்தின் மிகவும் முக்கியமான நான்கு சீன்களை நடிக்க சொன்னாங்க. நானும் அதை தங்கிலீஷில் எழுதிக் கொண்டு நடித்து காண்பித்தேன். கடைசியாக லுக் டெஸ்ட். அதிலும் என்னை இயக்குனருக்கு பிடித்து போனது.

என்னை சாலமன் சாருக்கு பிடிச்சிருந்தாலும், அவரின் மனதில் தமிழ் பேச தெரிந்த பெண்ணாக இருந்தால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆடிஷன் முடிந்தவுடனே அவர் சொன்ன முதல் வார்த்தை ‘எனக்கு 95% நீ ஓ.கே தான். ஆனா உன்னைப்போலவே தமிழ் பேச தெரிந்த பொண்ணு கிடைச்சா… உன்னை ரிஜக்ட் செய்திடுவேன்’ன்னு சொல்லிட்டார். அவர் சொன்ன போது, என் மனதில் முதலில் உதித்தது, தமிழ் பேசவும் மற்றும் புரிந்து கொள்ளவும் தெரியணும் என்பது தான். வீட்டிற்கு வந்து தமிழ் படமா பார்த்தேன். இப்போது தமிழ் நல்லா புரியும்,
பேசவும் செய்வேன்.

நாடகம் vs சினிமா

ஒரு ஆர்வத்தில் தான் நாடக குழுவில் சேர்ந்தேன். ஆனால் பயிற்சி எடுக்கும் போது தான் அதன் கஷ்டம் புரிந்தது. அதுவும் என்னுடைய சார் வினய் வர்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். இரண்டு நிமிஷம் பயிற்சிக்கு வர லேட்டாகும்ன்னா அவரிடன் முன்பே தெரிவிக்கணும். அவரிடம் சொன்னது போல் இரண்டு நிமிஷத்தில் வந்திடணும். இல்லைன்னா பனிஷ்மென்ட் தருவார். அதெல்லாம் சமாளிச்சு தான் நான் நடிக்கவே கத்துக்கிட்டேன்.

அங்கு பயிற்சி எடுத்தாலும் நான் ஒரே ஒரு நாடத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிச்சேன். மத்தபடி பெரும்பாலும் பேக்ஸ்டேஜ் வேலை தான் பார்ப்பேன். காரணம் அப்ப நான் கல்லூரியில் படிச்சிட்டு இருந்தேன். நாடகத்தில் நடிக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் ரிகர்சல் இருக்கும். படிக்கும் போது என்னால் அதில் அவ்வளவு நேரம் இருக்க முடியாது என்பதால் பேக்ஸ்டேஜ் வேலைகளை மட்டும் நான் பார்த்துக் கொண்டேன்.

ஆனால் நடிப்பதைவிட பேக்ஸ்டேஜ் வேலை தான் ரொம்ப கஷ்டம். இவங்க சாதாரணமா வந்து நடிச்சிட்டு போயிடுவாங்க. ஆனால் அதற்கான காஸ்ட்யூம், நகைகள் மற்றும் அனைத்து வேலையும் நாம தான் பார்க்கணும். அப்படித்தான் ஒரு நாள் நாடகத்தில் நடிச்ச ஒருவரின் நகைகளை பார்த்துக் கொள்ள என்னிடம் சொல்லி இருந்தாங்க. நாடகம் முடிய லேட்டானதால், அவர் அந்த நகைகளை தன்னுடன் எடுத்து சென்றுவிட்டார். நான் அவர் அதை கழட்டி கப்போர்டில் வைத்திருப்பார்ன்னு நினைச்சு விட்டுட்டேன். மறுநாள் அங்கு நகை இல்லை என்றதும், ஒரு நிமிடம் பதறிட்டேன். திட்டும் வாங்கினேன்... அது வேறு விஷயம். எந்த ஒரு வேலை நமக்கு கொடுத்திருந்தாலும், அதை முழு பொறுப்புடன் செய்யணும்ன்னு அப்பதான் புரிந்தது. எல்லாவற்றையும் விட இங்க கருவிழி வெளியே பிதுங்க, முகத்தில் பாவங்கள் கொப்பளிக்க நடிக்கணும்.

ஆனால் சினிமா அப்படியே நேர்மாறாக இருந்தது. இங்க அவ்வளவு உணர்ச்சி ெபாங்க நடிக்க வேண்டாம். சாதாரணமா இருந்தாலே போதும். எனக்கு முழுக்க முழுக்க சாலமன் சார் தான் எல்லாமே சொல்லிக் கொடுத்தார். நாடக நடிப்பு வெளி வரும் போது எல்லாம் அமைதி அமைதின்னு சொல்வார். எனக்கு தமிழ் தெரியாததால், எனக்கான டயலாக்கினை அவரே அதற்கான உச்சரிப்போடு பேசி ரெக்கார்ட் செய்து கொடுப்பார். நான் ஷூட்டிங் முடிந்ததும் அறையில் அதைக் கேட்டு பிராக்டிஸ் செய்துகொள்வேன். அதுமட்டுமில்லாமல் எனக்குள் ஏற்படும் எல்லா சந்தேகத்தையும் அவர் தீர்த்து வைப்பார். ஆரம்பத்தில் ஒரு டயலாக் பேசவே பத்து டேக் எடுப்பேன். போகப் போக பிக்கப் செய்துெகாண்டேன். சொல்லப்போனால் அவருடைய மகளைப் போல் பார்த்துக் கொண்டார். நான் இந்த படத்தில் இவ்வளவு யதார்த்தமா நடிக்க பிரபு சாலமன் சாருக்கு தான் கிரெடிட் கொடுக்கணும்.

காடு

கேரளாவில் உள்ள நிலையாம்பதி என்ற மலை உச்சியில் தான் ஷூட்டிங். நாங்க தங்கி இருக்கும் இடத்தில் இருந்து அங்கு ஜீப்பில் தான் போகணும். ஷாட் முடிஞ்சதும் திரும்பி வர முடியாது. மொத்த யூனிட் பேக்கப் செய்த பிறகு தான் திரும்ப முடியும். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். மலை ஏறணும். எனக்கு அது பழக்கமில்லை என்பதால், கொஞ்சம் சிரமமா இருந்தது. அதன் பிறகு அந்த பகுதியில் நிலவிய அமைதியான சூழல், பசுமையான காற்று... மனசுக்கு ரொம்பவே அமைதியை கொடுத்துச்சு. 60 நாள் அங்கு தங்கி இருந்து தான் படத்தை முடிச்சோம். இதில் என்னவென்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் மட்டும் தான். மற்ற 60 பேரும் ஆண்கள். அந்த அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமா இருந்தது.

யானைக்கும் உங்களுக்குமான தொடர்பு

அவன் பெயர் உன்னி. ரொம்ப சேட்டைக்காரன்.என்னை சீண்டுவது தான் அவன் வேலை. அதே சமயம் பாசக்காரன். அவன் கும்கி யானை கிடையாது. கேரளாவில் உள்ள யானை முகாமில் முறையாக பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்ட யானை. இந்த படத்தில் எனக்கும் யானைக்குமான கெமிஸ்ட்ரி அன்யோன்யமா இருக்கணும்ன்னு டைரக்டர் சொல்லிட்டார். படத்தில் நான் சொல்வதை அவன் கேட்கணும், அதேபோல் அவன் சொல்வது எனக்கு புரியணும். அவனுடன் நான் நல்லா பழகினா தான் இதெல்லாம் செய்ய முடியும். முதலில் அவ்வளவு பெரிய உருவத்தை பார்த்த போது கிட்ட போகவும்.

ெதாடவும் பயந்தேன். உடன் பாகன் இருந்தாலும் சாப்பாடு கொடுப்பது, குளிப்பாட்டுவதுன்னு எல்லாம் நான் செய்தேன். எங்க இரண்டு பேருக்கும் பாண்டிங் ஏற்பட பத்து நாளாச்சு. அப்புறம் நான் அவன் தும்பிக்கை பிடிச்சி விளையாடுற அளவுக்கு பழகிட்டோம். ஆனா ஒரு முறை என்னிடம் கோச்சுக்கிட்டான் உன்னி. அன்று எனக்கும் உன்னிக்குமான ஷூட்டிங் முடிந்துவிட்டது. நான் அசதியில் சேரில்  தூங்கிட்டேன். உன்னி என் பின்னாடி வந்து என் மேல் அவன் தும்பிக்கையை போட்டான்.

நான் என்னமோன்னு பயந்து கத்திட்டேன். உடனே பாகன் இப்படி எல்லாம் செய்யக்கூடாதுன்னு அவனை திட்டிட்டார். நான் தான் அவனுக்கு திட்டு வாங்க வச்சுட்டேன்னு என் மேல கோச்சுக்கிட்டான். நான் எது சொன்னாலும் செய்ய மாட்டான். அவனைப் பார்க்க போனா மூஞ்சை திருப்பிப்பான். அப்புறம் சாலமன் சார் தான் வெல்லம் கொடு சமாதானம் ஆயிடுவான்னு சொன்னார். தினமும் வெல்லம் கொடுத்து அவனை சமாதானம் செய்தேன். யானைகள் பார்க்க தான் ெபரிய உருவம் போல இருக்கும். ரொம்ப சென்சிடிவ், வெள்ளை மனசு கொண்டவை.

பிராஜட்கள்

கும்கி நடிக்கும் போது நடிகர் விமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ‘படவா’ படத்தில் அவருடன் இணைந்து நடிச்சிருக்கேன். அது முழுக்க முழுக்க கிராமத்து படம். கும்கி, படவா இரண்டு படமும் ரிலீசுக்காக வெயிட்டிங். அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் சாரின் ஒரு ஆல்பத்திற்காக முகேஷ், அஷ்வினுடன் இணைந்து செய்திருக்கேன். இது அடுத்த மாசம் ரிலீசாகும்ன்னு நினைக்கிறேன்.

அப்புறம் ஓ.டி.டி ரிலீசில் ஒரு படம் செய்றேன். ஷ்ரிதா ராவ் யார்?
நான் ரொம்ப சுட்டியான பெண். ஆனால் அந்த சுட்டித்தனம் கொஞ்ச நாட்கள் என்னுள் மறைந்திருந்தது. காரணம் நீங்க இப்ப பார்க்கிற மாதிரி நான் இரண்டு வருஷம் முன்பு இல்லை. ரொம்ப குண்டா இருந்தேன். எல்லாரும் என்னுடைய உடலமைப்பைப் பார்த்து கிண்டல் செய்வாங்க. அதனால் நான் நத்தைப் போல என்னுடைய கூடுக்குள் சுறுங்கிட்டேன். என்னுள் இருந்த தன்னம்பிக்கை முழுதும் இழந்தேன். நாடக பயிற்சி எடுத்த பிறகு அடுத்த கட்டம் சினிமான்னு நான் முடிவு செய்த பிறகு முடிவு செய்தேன். உடல் எடையை குறைக்கணும்ன்னு. ஒன்றரை வருஷ கடின உழைப்பு. 30 கிலோ எடையை குறைச்சேன். கும்கிக்காக சார் ஐந்து கிலோ எடை கூட்ட சொன்னார்.

நடிப்பைத் தாண்டி எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும். என் அம்மா டீச்சர் மற்றும் ஃபேஷன் டிசைனரும் கூட. ஆனா படிப்பு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதே சமயம் நானும் என் தம்பி இருவரும் விளையாட்டிலும் ஈடுபடணும்ன்னு நினைச்சாங்க. ஸ்கேட்டிங், ஸ்விம்மிங், பாக்சிங்ன்னு எல்லா விளையாட்டும் விளையாடுவேன். அப்பறம் சினிமா பார்க்க பிடிக்கும், குறிப்பா தமிழ் படங்கள். இப்ப கொரியன் சீரிஸ் விரும்பி பார்க்கிறேன்.

எனக்கு ஒரு நல்ல நடிகையா வலம் வரணும்ன்னு தான் விருப்பம். தமிழ் சினிமா அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதற்கு நான் பிரபு சாருக்கு தான் நன்றியை தெரிவிக்கணும். அவருக்கு மட்டும் தமிழ் பேசும் பெண் கிடைச்சிருந்தா இந்த ஷ்ரிதா உங்க முன் பேசிக் கொண்டு இருக்கமாட்டா. நடிகையை தாண்டி நான் ஒரு கலைஞர். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்திற்கான வாய்ப்பு வந்தா கண்டிப்பா நான் செய்ய தயார்’’ என்றார் ஷ்ரிதா ராவ்.

செய்தி: ஷன்மதி

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்