30 ஆண்டுகள் 1400 படங்கள் நகைச்சுவை நாயகி ரமா பிரபா



செல்லுலாய்ட் பெண்கள்-91

‘தான் அதிகம் உயரமான பெண் இல்லை, மிகப் பெரிய பர்சனாலிட்டியும் இல்லை’ என்ற மனப்பான்மையுடன் திரையுலக வாழ்க்கையில் கிடைத்த வேடங்களை மட்டும் ஏற்று நடிப்பது என்ற தெளிவான தீர்க்கமான முடிவை ரமா பிரபா எடுத்தது மிகச் சிறப்பானதொரு அம்சம். அதனாலேயே அவர் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பலவிதமான வேடங்களையும் ஏற்று தமிழ், தெலுங்கு, இந்தி என 1400 படங்களுக்கு மேல் நடித்து வெற்றி வாகை சூட முடிந்தது. தெலுங்கில் மட்டுமே 800 படங்களுக்கு மேல் நடித்துக் குவித்திருக்கிறார். சிரிக்கும்போது கொள்ளை அழகு, அதே நேரம் ஒரு சாயலில் இவருக்குப் பின்னர் 1970களில் நடிக்க வந்த நடிகை உஷா நந்தினியின் சாயலும் இவரிடம் வெளிப்பட்டது.

பிறந்தது அன்றைய ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசம் மதனப்பள்ளி அருகே உள்ள வாயல்பாடு கிராமத்தில் அக்டோபர் 5, 1946 ஆம் ஆண்டு. தந்தையார் கெங்கு செட்டி - தாயார் கொட்டி சென்னம்மா. 13 குழந்தைகளில் ஒருவர் ரமா பிரபா. மிகப் பெரும் குடும்பம். தந்தையார் ஒரு விவசாயி. விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் ஏதுமில்லை.
தந்தையாருடன் பிறந்த சகோதரி ராஜம்மா; ரமா பிரபா பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளியான கிருஷ்ண தாஸ் முகர்ஜி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டவர் அத்தை ராஜம்மா. அத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்ணன் மகளான ரமா பிரபாவுக்கு ஒரு வயதாகும்போதே தத்துக் குழந்தையாகத் தங்களுடன் தூக்கிச் சென்று வளர்த்தார்கள்.

13 குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிரமம் கருதி மகளைத் தங்கை வசம் மனதார ஒப்படைத்தார் கெங்கு செட்டி. மாமா, கிருஷ்ண தாஸ் முகர்ஜி வேலை செய்தது தமிழ் நாட்டில். பணி மாறுதல் காரணமாக ஊட்டி, நெய்வேலி, கூடூர் என பல ஊர்களுக்கும் செல்ல நேர்ந்ததால் ரமா பிரபாவின் குழந்தைப் பருவம் தமிழகத்திலேயே கழிந்தது. அவ்வப்போது அத்தை, மாமாவுடன் கல்கத்தாவுக்கும் பயணம் சென்று வந்தார்.

பள்ளிப் படிப்பு என்பது அறவே இல்லை. தாய்மொழி தெலுங்கும் தெரியாது. தமிழ் மட்டுமே பேசக் கற்றுக் கொடுக்கப்பட்டது. சுய விருப்பத்தின் பேரில் ‘அம்புலி மாமா’ பத்திரிகையைப் பார்த்துத் தமிழையும், ‘ச்சந்த மாமா’ பார்த்துத் தெலுங்கையும் ஓரளவு எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்டார். ரமா பிரபா 13 வயதை எட்டியபோது, மாமா கிருஷ்ண தாஸ் முகர்ஜி காலமானார். அதனால் அத்தையுடன் சென்னையை நோக்கிப் பயணமானார் ரமா பிரபா.

அதுவரை அத்தையும் மாமாவுமே தன்னுடைய சொந்தப் பெற்றோர் என்றே அவர் நினைத்திருந்தார். அதன் பிறகே, தன்னுடைய தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் பற்றிய விவரங்கள் அவருக்குத் தெரிய வந்தது. அதன் பின் ஓராண்டில் பெற்ற தந்தையும் மறைய அதன் பின்னரே தன் வாழ்க்கை அந்தரத்தில் நிற்பதும் தன்னையே நம்பியிருக்கும் மிகப் பெரிய குடும்பம் பற்றிய புரிதலும் எழுந்தது.

தமிழ் நாடக உலகம் வளர்த்தெடுத்த அற்புத நடிகை  

நாடகக் கம்பெனிகள் 14 வயதேயான ரமா பிரபாவுக்கு ஆதரவாகக் கை கொடுத்தன. கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ‘நாடகக் காவலர்’ என அறியப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் என மிகப் பெரும் நாடக ஆளுமைகளின் நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்ததால் திறமையான ஒரு நடிகையாக அவர் வார்த்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்றாலும் பின்னர் முதன்மையான பாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகும் தெளிவும் துல்லியமும் நிறைந்தது.

நாடகத்திலிருந்து திரைப் படங்களை நோக்கிய பயணம்...

தமிழ்த் திரையுலகில் இருந்துதான் முதன் முதலில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பொருட்காட்சிகளில் நடத்தப்படும் நாடகங்களில் நடித்ததன் மூலம் நடிகை கே.ஆர்.விஜயாவுடன் நட்பு ஏற்பட்டிருந்தது. இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் ரமா பிரபா நடித்த நாடகங்களைப் பார்த்து ரசித்ததன் வழியாக, 1963ல் அவர்கள் இயக்கத்தில் வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் துவக்கத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியான மாமல்லபுரம் சிற்பங்களுக்கிடையே கதாநாயகியும் அவளுடைய தோழிகளும் ஆடிப் பாடும் ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு..’ பாடலில் முகம் காட்டாமல் குழு நடனப் பெண்களில் ஒருவராக ஆடினார்.

அதே படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான ‘பாட்டொன்று தருவார் பாடடியம்மா..’ பாடலை நாயகி கே.ஆர். விஜயாவுடன் அவரது தோழிகளாக நடித்த உதய சந்திரிகா, எல்.காஞ்சனா, சாந்தா இவர்களுடன் ரமா பிரபாவும் இணைந்து ஆடிப் பாடினார். மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல், பாவாடை, நீண்ட டாப்ஸ், துப்பட்டா அணிந்து கொண்டு ஒயிலான இளம் பெண்ணாக மிக அழகாகவே ஆடினார். இப்படம் 1964ல் வெளியானது. அதன் பிறகும் திரைப்படங்களில் நடிப்பதற்கான பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் 1966 ஆம் ஆண்டு மிகப் பெரும் திருப்பம் அவர் வாழ்வில் பெரும் பாய்ச்சலாக நிகழ்ந்தது.

தெலுங்கின் இணையில்லா நகைச்சுவை நாயகி தெலுங்கில் ரமா பிரபா நடித்த முதல் படம் ’ச்சிலகா கோரிங்கா’ (Chilaka Gorinka) வெளியானது. தெலுங்கின் பிரபல நகைச்சுவை நடிகரான பத்மநாபம் ஜோடியாக, நகைச்சுவை நடிகையாக இப்படத்தில் அறிமுகமானார். அது அவருக்கு நல்லதோர் தொடக்கமாகவும் அமைந்தது. தெலுங்கு தாய் மொழியானபோதும், ரமா பிரபாவுக்கு தமிழ் நன்றாகத் தெரிந்த அளவு தெலுங்கு தெரியாது. ஆனால், திறமையான நடிகையாக அவர் இருந்ததால், அவரை விட்டு விட விரும்பாமல் தெலுங்கில் வசனங்களைச் சொல்லிக் கொடுத்துப் படக்குழுவினர் அவரை நடிக்க வைத்தார்கள்.

கற்பூர புத்தி என்பார்களே, அது ரமா பிரபாவுக்கு முற்றிலும் பொருந்தும். கல்வியறிவோ வாசிக்கும் பழக்கமோ பெரிதாக இல்லாவிடினும் நாடகங்களில் வசனங்களைச் செவி வழியாகக் கேட்டு எவ்வாறு சிறப்பாக நடித்தாரோ, அவ்வாறே திரைப்படங்களிலும் துணை இயக்குநர்கள் சொல்லிக் கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்து பேசும் பேராற்றல் அவருக்கு வாய்த்திருந்தது. அப்படம் நல்ல வெற்றியையும் பெற்றதால் தெலுங்கில் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகர் ராஜா பாபுவுடன் இணைந்து நடித்தார். ஏற்கனவே ரேலங்க்கி - கிரிஜா, பத்மநாபம் - கீதாஞ்சலி இணை நகைச்சுவையில் பேரும் புகழும் பெற்று விளங்கியதைப் போலவே, ராஜா பாபு - ரமா பிரபு இணையும் தெலுங்குத் திரையுலகில் கோலோச்சியது.

இந்த ஜோடிக்குத் தெலுங்குத் திரையுலகில் நல்ல வரவேற்பும் இருந்தது. 100 படங்களுக்கு மேல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் துவங்கும்போதே கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர் இவர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னதாகவே ரமா பிரபா - ராஜா பாபு நகைச்சுவை ஜோடியை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு மிகவும் பிரபலமான, பிஸியான ஜோடியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கின் பிரபல ஸ்க்ரிப்ட் ரைட்டர் அப்ளாச்சாரியார் இந்த ஜோடிக்காக மட்டுமே ஏராளமான படங்களில் நகைச்சுவைப் பகுதியை எழுதியிருக்கிறார்.

ராஜா பாபு மட்டுமல்லாமல், தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான ரேலங்க்கி, அல்லு ராமலிங்கய்யா, ரமண ரெட்டி மற்றும் கதாநாயகர்களான சலம், ஷோபன் பாபு, கிருஷ்ணா, ராமகிருஷ்ணா அனைவருடனும் இணைந்து நடித்தவர். 1966ல் தெலுங்குத் திரையுலகில் துவங்கிய நகைச்சுவை நடிப்புப் பயணம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அதற்குப் பின்னால் ரமா பிரபாவின் கடுமையான உழைப்பும் நடிப்பின் மீதான மாறாத நேசமும் இருந்ததும் உண்மை. தெலுங்குப் படங்களில் நடிக்க வந்த புதிதில் வாயைத் திறந்தால் தெலுங்குக்கு பதிலாக தமிழே அதிகமாக இவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மீறித்தான் தெலுங்குத் திரையுலகம் இவரை ஏற்றுக் கொண்டுள்ளது.  

‘செல்வம்’ தந்த அறிமுக நாயகி மேகலா

தெலுங்குத் திரையுலகில் நுழைந்த அதே நேரம் தமிழிலும் நல்ல அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. 1966 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி தயாரிப்பில், இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த ‘செல்வம்’ திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார்.

சற்றே அசட்டுத்தனம் மிக்க பாத்திரம் போல் தோன்றினாலும் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார். சற்றும் புதுமுகம் போல் தோன்றாதவாறு அவரது பாத்திரப் படைப்பும் நடிப்பும் இருந்தன. அறிமுகக் காட்சியிலேயே நாய்க்குட்டிகளைக் கொலு பொம்மை போல மாடிப் படிக்கட்டுகளில் உட்கார வைத்துக்கொண்டு கையில் பிரம்புடன் இவர் ஆடிப்பாடுவதே கொள்ளை அழகு.

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் அவர் பாடி நடித்த,
‘லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூஸி ரோஸி ராணி’
உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன்
முன்னுக்குக் கொஞ்சம் வா நீ முன்னுக்குக் கொஞ்சம் வாநீ வாநீ வா’...

என்ற பாடலும் அப்போது மிகப் பிரபலம். இலங்கை வானொலியில் அந்தப் பாடல் ஒலிக்காத நாள் இல்லை எனும் அளவுக்குப் பிரபலம். நாயகன் செல்வத்துக்கு (சிவாஜி கணேசன்) வள்ளி (கே.ஆர்.விஜயா), ரத்னா (மேகலா) என இரண்டு முறைப்பெண்கள். இப்படத்தில் அவர் மேகலா என்னும் பெயரில்தான் அறிமுகமானார். ஏனோ மேகலாவை விட, சொந்தப் பெயரான ரமா பிரபா என்பதே பின்னர் திரையில் நிலைத்துப் போனது. ஜாதகம், ஜோதிடம், செவ்வாய் தோஷம் என ஒட்டுமொத்தப் பிற்போக்குத்தனங்களின் கூடாரமாக, அவற்றை உயர்த்திப் பிடிப்பதாக அப்படம் திகழ்ந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் முன்னேற்றப் பாதையை நோக்கியே அவரது திரைப் பயணம் இருந்தது.

அனைத்தும் அப்போதைய முன்னணி இயக்குநர்கள் தர், பி.மாதவன், வியட்நாம் வீடு சுந்தரம் முன்னணி நாயகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நாயகர்களின் படங்களில் எல்லாம் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழின் நகைச்சுவை ஜோடியாக நாகேஷ்

தெலுங்கில் ராஜா பாபு உடன் நடித்ததைப் போல தமிழில் அதிகமான படங்களில் இவருடன் இணைந்து நடித்தவர் நாகேஷ். இந்த ஜோடி நடித்த படங்கள் எல்லாம்  ஏதோ ஒருவிதத்தில் குறிப்பிடத்தக்கவையாக பாராட்டும்படியாக இருந்தன. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து நடித்த ‘புதிய பூமி’ யில் நாகேஷுக்கு ஜோடி. பழங்குடியினப் பெண்ணாகவும் மருத்துவம் என்றால் உடுக்கை அடித்துப் பேய் விரட்டுவது என்பதையே தொழிலாக வைத்திருக்கும் பூசாரியின் மகளாக நடித்திருந்தார்.

பூசாரிக்கு (அய்யா தெரியாதய்யா ராமாராவ்) உதவியாளராக, ரமா பிரபாவின் முறைமாமனாக நடித்தவர் நாகேஷ். பெண் வாடையே கொஞ்சமும் ஆகாத ஆஞ்சநேய பக்தனாகவும் பிரம்மச்சாரியாகவும் இருப்பவரைத் தன் அன்பால் காதலில் விழ வைக்கும் முறைப்பெண் வேடம் ரமா பிரபாவுக்கு. இப்படத்தின் ஆரம்பத்திலேயே ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் தோழிகளுக்குமான ஆட்டமும் பாட்டும் உண்டு.

‘நான்தான்டி காத்தி நல்லமுத்து பேத்தி
 ஒத்தையா ரெட்டையா எத்தனை பேர் வாரீங்க’  
என பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்
களில் சடுகுடு பாணியில் அமைந்த பாடல் அது. இரு பெண் குரல்களின் பாடல்களும் தோழிகள் இணைந்து ஆடிப் பாடுவதுமான காட்சிப்படுத்தல்களும் அப்போதைய
படங்களில் எல்லாம் ஏராளமாக இருந்தன.

‘சாந்தி நிலையம்’ படத்தில் தாய் தகப்பனை இழந்து சித்தப்பாவின் ஆதரவில் வளரும் செல்வச் சீமான் வீட்டுக் குழந்தைகள் ஐவரில் மூத்தவர். துடுக்குத்தனமும்
துறுதுறுப்பும் நிறைந்த பெண்ணாகத் தோன்றுவதுடன், நாகேஷை காதலிப்பதாகச் சொல்லி அவரை மிரள வைப்பார். இப்படத்திலும் நாகேஷுக்கும் இவருக்குமான,
‘கண்கள் தேடுவது உள்ளம் நாடுவது
மெல்லப் பேசுவது ஒன்று சேருவது
யாருக்கு யார் சொல்லித் தெரியும் கண்ணா..’
ஒரு பாடல் காட்சி உண்டு.

நேசமணி பொன்னையாவும் நாசமா நீ போனியாவும் கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் குறிப்பிடத்தக்கதோர் நாடகம் ‘நவாப் நாற்காலி’. பலமுறை மேடையேற்றம் கண்ட இந்த நாடகம் 1972ல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாகவும் வெளி வந்தது. இப்படத்தில் ஆங்கிலோ - இந்திய நர்ஸ் கிறிஸ்டி வேடம் ஏற்றார் ரமா பிரபா.

படத்தில் கொச்சையாகத் தமிழ் பேசுவது அவரது பாணியாக அமைக்கப்பட்டிருந்தது. நாகேஷுடன் இணைந்து அவர் அடிக்கும் கூத்துகள் நம்மை விலா நோகச் சிரிக்க வைத்தன. இதிலும் இந்த ஜோடிக்கு,‘சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டி தான்’  என்று கடற்கரையில் ஆடிப் பாடும் காட்சி இடம் பெற்றது.

நேசமணி பொன்னையா என்பது ஏ.ஆர்.சீனிவாசன் ஏற்ற பாத்திரத்தின் பெயர். அதைத்தான் தமிழில் சரியாக உச்சரிக்கத் தெரியாமல், ‘நாசமா நீ போனியா’ என்று ரமா பிரபா குறிப்பிடுவதாகக் காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களைச் சிரிப்பு மழையில் ஆழ்த்தின. ‘நவாப் நாற்காலி’ படம் வெளியாகி இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினிகாந்த், குஷ்பு, ஜனகராஜ் நடித்த ‘அண்ணாமலை’ திரைப்படத்திலும் இதே உத்தி பயன்படுத்தப்பட்டது.

முகவரி கேட்டு வரும் குஷ்புவிடம், ஜனகராஜ் ‘நாசமா நீ போனியா’ என்று நேசமணி பொன்னையா தெருவைக் குதறி எடுப்பார். கோமல் சுவாமிநாதனின் கற்பனையில் உருப் பெற்ற இந்த நகைச்சுவை காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது. அதேபோல் நேசமணி பொன்னையா என்ற பெயரும் ‘நாசமா நீ போனியா..’ என்ற ரமா பிரபாவின் கொஞ்சலான உச்சரிப்பும் அவரைப் போலவே நம் நினைவுகளில் என்றென்றைக்கும் நிழலாடிக் கொண்டிருக்கும்.

(ரமா பிரபா அடுத்த இதழிலும் தொடர்வார்...)

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்