பெண்களின் சுதந்திர சுவாசத்திற்கு போராடிய கார்னிலியா!



பெண்கள் தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கிற சமூக அவலங்களை எல்லாம் கடந்து இன்று பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருந்த காலத்தில், வெளியே வந்து சமூக புறக்கணிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்த பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதில் கார்னிலியா என்பவரது பெயர் இல்லாமல் வரலாறு எழுத முடியாது. பெண்களுக்கு ஓர் முன்னோடியாக விளங்கிய கார்னிலியா, மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர். 1889 ஆம் ஆண்டு ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்ணும், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் படித்த முதல் இந்தியரும் இவர்தான். இன்னும் சொல்லப்போனால் உலகிலேயே பெண்களில் முதன் முதலாக சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றியது இவர்தான்.

வீட்டில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராக பிறந்த கார்னிலியா, ஒரு பிரிட்டன் தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டார். அப்போது ஃப்ரான்சினா என்ற பெண்மணி பெண் கல்வி தொடர்பாக குழந்தையாக இருந்த கார்னிலியா படிக்கும் பள்ளியில் வந்து பேசியிருக்கிறார். பெண்களுக்கு நடக்கிற அநீதிகளைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறார். அது கார்னிலியா மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கார்னிலியாவின் மூத்த சகோதரிகள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தனர்.

அப்போது பெண்கள் யாரையும் இதுவரையில் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததில்லை. அதனால் உங்களையும் சேர்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நிச்சயம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சபதமேற்றார் கார்னிலியா. இறுதியாக பதினாறு வயதில் தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறைவு செய்த கார்னிலியா பல்வேறு போராட்டங்களைக் கடந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இவருக்கு ஆங்கில இலக்கியம் ஒதுக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்கிற முதல் பெண் கார்னிலியா. வகுப்பில் எக்கச்சக்கமான தொல்லைகளை சந்தித்தார். ஆரம்ப காலங்களில் பல்கலைக்கழகங்கள், வகுப்பறைகள் எல்லாம் அவ்வளவு வசதி நிறைந்ததாக இருந்திருக்கவில்லை. உள்ளே நுழையும் போதிருந்தே வகுப்பில் இருப்பவர்கள் கார்னிலியாவை கேலி பேசி கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தொடர்ந்து அவரை பாடம் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் வாடிக்கையாக இருந்தது. ஆறு ஆண்டு படிப்பு முடியும் போது, தன்னை கேலி பேசிய அனைவரையும் முட்டாளாக்கி பல்கலைக்கழகத்திலேயே முதல் ஆளாக தேறினார். முதல் மதிப்பெண் பெற்றிருப்பதால் இங்கிலாந்
திற்கு சென்று மேற்படிப்பு படிக்கலாம் என்ற கனவுடன் காத்திருந்தார் கார்னிலியா.

அவரது கனவை சிதைக்கும் விதமாக ஓர் அறிவிப்பு வெளியானது. என்ன தான் கார்னிலியா முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர் பெண்ணாக இருப்பதினால் பல்கலைக்கழகத்தின் முதல் மதிப்பெண் பெற்றவர் என்ற அங்கீகாரம் அவருக்கு வழங்க மறுக்கப்பட்டது. அதனால் அவருக்கு எந்த உதவித் தொகையும் கிடைக்காது என்றார்கள். சுக்குநூறாக நொறுங்கித்தான் போனார் கார்னிலியா. ஆனால் அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அன்றைக்கு வாழ்ந்த பிரமுகர்களான மேரி ஹோஹவுஸ், அடிலெயிட் மேனிங், ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், வில்லியம் வெட்டெர்பர்ன் ஆகியோர் தங்களது பணத்தை சேர்த்து கார்னிலியாவை ஆக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க உதவி செய்தனர்.

இவ்வளவு போராட்டங்களை கடந்து வந்தவருக்கு மீண்டும் கதவு அடைக்கப்படுகிறது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நீங்கள் ஆங்கில இலக்கியத்தை வேண்டுமானால் படிக்கலாம். ஆனால் உங்களுக்கு சட்டம் படிக்க எல்லாம் அனுமதிக்க முடியாது என்றார்கள். கல்வியாளரும் தத்துவஞானியுமான பெஞ்சமின் ஜோவெட் கார்னிலியாவிற்காகவே பெண்களும் சட்டம் படிக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குகிறார். அதன் படி ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இணைந்தாலும், அவ்வளவு எளிதாக முடிக்கவில்லை.

இவரின் விடைத்தாள்களை திருத்த மறுக்கிறார்கள். திருத்தாமலே தேர்வில் மூன்றாம் நிலையாகத்தான் தேர்ச்சி பெற்றார் என்று சொல்லப்படுகிறது. இத்தனை சங்கடங்களை கடந்து சட்டப்படிப்பை முடித்தாலும், அப்போது அமலிலிருந்த ஒரு சட்டம் பெரும் துயரமாய் வந்து நின்றது. பெண்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தாலும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர்கள் பட்டம் பெற முடியாது என்றது அந்த சட்டம்.

இதற்கிடையில் லண்டன், லீ அண்ட் பெம்பெர்டன் வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியாற்றியவருக்கு லிங்கன் நூலகத்தில் சேர்ந்து படிக்க ஆசை. பெண்கள் நூலகத்திற்கு சென்று படிக்க அனுமதியில்லை. அந்த தடையையும் தகர்த்தி நூலகத்திற்கு சென்று படிக்கிறார். பல போராட்டங்களுக்கு பிறகு பட்டம் பெற்று தான் கற்ற கல்வி இந்தியாவிலிருக்கும் அனைத்து பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்தியா திரும்புகிறார் கார்னிலியா. இவர் இந்தியா திரும்பிய 1894 ஆம் ஆண்டில் இன்னொரு பேரதிர்ச்சியை சந்திக்கிறார்.

மும்பை நீதிமன்றத்தில் இருந்த தலைமை நீதிபதி, பயிற்சி வழக்கறிஞராக யாரும் பெண்ணை நியமிக்கக்கூடாது என்று அறிவிக்கிறார். இந்தியாவிற்கு வந்து வழக்கறிஞராக வேண்டும் என்ற கார்னிலியாவின் கனவு மீண்டும் நசுக்கப்படுகிறது. அதனால் மும்பை பல்கலைக்கழகத்தில் இணைந்து மீண்டும் சட்டப்
படிப்பை படிக்கிறார்.

இதன் மூலம் மும்பை பல்கலைக்கழகம் தனக்கு பட்டம் வழங்கும். அதை வைத்து வழக்கறிஞராகலாம் என்பது கார்னிலியாவின் திட்டம். பிரிட்டிஷ் அரசாங்கம் பெண் வழக்கறிஞராக முடியாது என்ற உறுதியுடன் இருந்தாலும், இந்தியாவை ஆண்ட அரசர்கள் அவ்வளவு எதிர்ப்பு காட்டவில்லை. மாறாக இவருக்கு கேலிக்கூத்தான வழக்குகளை வாதாட அனுமதியளித்தார்கள். அதாவது தன் தோப்பிலிருந்த வாழைப் பழங்களை யானை திருடி சாப்பிட்டுவிட்டது என்பது தான் புகார்.

கார்னிலியா யானைக்கு ஆதரவாக வாதிட வேண்டும். அவர்கள் பொழுது போக்கிற்காக இப்படி ஒரு வழக்கினை ஜோடித்துள்ளனர். ஆனால் மனம் தளராமல், 1899 ஆம் ஆண்டு வரை தன்னை வக்கீலாக அங்கீகரிக்க வேண்டுமென்று போராடிய, கார்னிலியாவிற்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை. தனக்கு மட்டுமல்ல. பெண் இனத்திற்கே இழிநிலை உள்ளதை உணர்கிறார்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேற கூடாது. கணவனைத் தவிர பிற ஆண்களிடம் பேசுவது பெரும் குற்றமாக பார்க்கப்பட்டது. கணவனை இழந்தவள் என்றால் தந்தை, சகோதரன் உட்பட எந்த ஆணிடமும் பேசக்கூடாது. இதை உணர்ந்தவர் தனக்கான பெண்களுக்காக போராட சபதமேற்கிறார். 1904 ஆம் ஆண்டு லார்டு குர்சன் இந்தியாவின் செயலராக நியமிக்கப்படுகிறார். அவர், இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாக வாதாட பெண் வக்கீல் இருக்கலாம் என்று சட்டம் கொண்டுவருகிறார்.

கார்னிலியா இதுவரை நடத்திய போராட்டத்திற்கு காலம் பெரும் வெற்றியை கொடுத்தது. இருபது ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றினார். 600க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குழந்தைத் திருமணம், கைம்பெண், சொத்துரிமை, போன்ற பல விஷயங்களை பெண்களுக்காக வாதாடியுள்ளார். இவரின் தொடர் போராட்டம் காரணமாக 1924க்கு பிறகு பெண்கள் வெளியே வர ஆரம்பித்தனர்.

 கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியில் சேர்ந்து 1929 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து சென்றாலும், இந்தியா வந்து சென்று கொண்டு தான் இருந்தார். இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றினை முதலில் சுவாசித்து, அது எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடிய கார்னிலியா நிச்சயம் போற்றப்படக்கூடியவர்.

அன்னம் அரசு