வரும் காலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்!



கொரோனாவின் முதல் அலை கோரத்தாண்டவம் ஆடி ஒரு வருடமானாலும், தற்போது அதன் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. ஒரு பக்கம் அரசு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஊசி போட பரிந்துரைத்து வந்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தங்களின் நலன் மேல் அக்கறை கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மேலும் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்க்கையில் எந்த வித பிரேக்டவுன் ஏற்படாமல் இருக்க உணவு, உடை போல் சில அத்தியாவசியப் பொருட்களுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை தடை இல்லாமல் வாழ முடியும். அதை நினைவில் கொண்டு தான் தொற்று காலத்திற்கு ஏற்ற பாதுகாப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளார் மைபிபிஇ(MYPPE) வெல்னஸ் சர்வீஸ் நிறுவனர் கவின்குமார் கந்தசாமி.
கல்வியாளரான இவர் மக்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு தான் இந்த பொருட்களை பல ஆய்வுகளுக்கு பிறகு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘பொதுவாக நாம் வரும் முன் காப்போம் என்று தான் பல பொருட்களை உருவாக்கி வருகிறோம். ஆனால் இது போன்ற தொற்று வந்த பிறகு தான் அதன் பாதிப்பு பற்றியே நாம் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு அதில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தோம். அந்த சிந்தனையில் உருவானது தான் இந்த பாதுகாப்பு பொருட்கள்.  

ஒரு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டதும், அதனைத் தொடர்ந்து பல கிருமிகள் மற்றும் நோய்களின் பாதிப்பு ஏற்படும். இனி வரும் காலங்களில் மாஸ்க், சானிடைசர் இல்லாமல் வாழ முடியாத சூழல் வரவும் வாய்ப்புள்ளது. ஸ்பானிஷ் ப்ஃளூ, உலகப்போருக்கு பிறகு, பல நோயின் தாக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் வரும் காலங்களில் கொரோனா தொற்று குறித்து பயப்படக்கூடாது. மேலும் அந்த நோயின் தாக்கம் ஏற்படாமல் இருக்க நம்முடன் எப்பவுமே ஒரு பாதுகாப்பு கவசம் வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் வாழ்க்கை முறைகளை மிகவும் பாதுகாப்பாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்க பொருட்களை தயாரிக்க ஆரம்பிச்சோம்.

கடந்த ஆண்டு அக்டோபர் தான் எங்களின் பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர ஆரம்பிச்சது. இன்று இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் எங்களின் பொருட்கள் விற்பனையில் உள்ளது. தற்போது நாங்க ஆன்லைனில் தான் விற்பனை செய்து வருகிறோம். கூடிய விரைவில் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலும் எங்களின் பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறோம். கொரோனா வந்த காலம் முதல் பொது இடங்களுக்கு பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் மாஸ்குகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதில் டிஸ்போசபில் மாஸ்கினை ஒரு நாள்தான் பயன்படுத்த முடியும்.

இந்த மாஸ்க் பொதுவாகவே பாக்டீரியாவை தடுக்கக்கூடியவை. ஆனால் கொரோனா என்பது வைரஸ், அதை தடுக்க மட்டுமில்லாமல் காற்றில் உள்ள மற்ற நச்சுக்களையும் தடுக்க பிரத்யேக மாஸ்க் நாம் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் பல நாட்கள் போடக்கூடிய மாஸ்க்காக இருக்கணும். அப்படிப்பட்ட மாஸ்க்கை தான் நாங்க அறிமுகம் செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆக்டிவேடெட் கார்பன் மற்றும் செம்பு கொண்ட மாஸ்க் இது மட்டும் தான். ஆக்டிவேடெட் கார்பன் நச்சுத்தன்மை நம்மை பாதிக்காமல் காக்கும்.

மேலும் நாம் வெளியேற்றும் கார்பன்டையாக்சைடினை உறிஞ்சிக் கொள்ளும். செம்பு ஆன்டிவைரல் உலோகம் என்பதால் வைரஸ் கிருமிகளை அழிக்க உதவும். ஒரு மாஸ்க்கினை ஆறு மாசம் வரை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை என முப்பது முறை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். சாதாரணமாக சுடுதண்ணீரில் நன்றாக கசக்கி வெயிலில் காயவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். டிஸ்போசபில் மாஸ்கை குப்பையில் போடுவதால் அது நம் சுற்றுச்சூழலை பாதிக்கும். அதை தடுக்கலாம்.

எங்களின் இரண்டாவது கண்டுபிடிப்பு வைரஸ் நோய் உங்களை தாக்காமல் இருக்க கூடிய உடை. சாதாரண கோட் போல இருக்கும். அதை உங்களின் உடைகளுக்கு மேல் அணிந்து கொள்ளலாம். பார்க்கும் போது கோட் அணிந்திருப்பது போல் இருக்கும். மூன்றாவது யுவி சானிடைசர். இந்த கருவியில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் அந்த பகுதியில் உள்ள வைரஸ் கிருமிகளை அழித்திடும். ரயில் பயணம் மேற்கொள்ளும் போது, நீங்க அமரும் இடத்தில் ஐந்து செகண்ட் இயக்கினால் போதும்.

டார்ச் லைட் போல் அதில் இருந்து புறஊதா கதிர்கள் வெளியாகி உங்கள் இடத்தினை சானிடைஸ் செய்திடும். அடுத்து சேஃப் ஸ்டோரேஜ். சின்ன பெட்டி போல இருக்கும் இந்த கருவிக்குள் எந்த பொருளை வைத்தாலும் அதில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள்  அதனை சானிடைஸ் செய்திடும். நாம் அணியும் கண்ணாடி முதல் வாட்ச் என எது வேண்டுமானாலும் வைக்கலாம்’’ என்றார் கவின்குமார் கந்தசாமி.

‘‘இன்று கொரோனா நாளை வேறு நோய். சென்னை மட்டுமில்லை இனி உலகில் எங்கு போனாலும், மாஸ்க் கட்டாயம் என்ற சட்டம் நியமனமாகும். நம்மை சுற்றி இருப்பவர்கள் பாதுகாப்பா இருப்பாங்களான்னு தெரியாது. ஆனால் நாம் கவனமாக இருக்கணும். இந்த கருவிகள் அனைத்தும், 99.96% வைரஸ் கிருமிகளிடம் இருந்து காக்கும் என்று ஆய்வில் உறுதி செய்திருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்’’ என்றவர் மாஸ்கின் பயன்பாடு மற்றும் அதை பயன்படுத்தும் முறையினை விவரித்தார்.

‘‘மாஸ்க் மட்டுமல்ல எங்களின் உடைகளும் அதன் மேல் தங்கும் எந்த ஒரு வைரஸ் கிருமியையும் 20 வினாடி முதல் ஒரு நிமிடத்தில் அழித்திடும். வைரஸ் கிருமி மிகவும் சிறியது. எந்த வழியிலும் உள்ளே போயிடும். அதற்காகத்தான் மாஸ்கில் செம்பு மற்றும் ஆக்டிவேடெட் கார்பன் கொண்ட ஃபில்டரை பயன்படுத்தி இருக்கிறோம். இது வைரஸ் கிருமியை முற்றிலும் அழிச்சிடும். மாஸ்கின் உள்பகுதியினை எப்போதும் தொடக்கூடாது. அதே போல் கழட்டும் போதும் அதில் இணைக்கப்பட்டு இருக்கும் கயிறு கொண்டுதான் கழட்ட வேண்டும். மாஸ்க்கை கழட்டிவிட்டு முதலில் கையினை சானிடைஸ் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கண் மற்றும் வாய் பகுதியினை ெதாட வேண்டும்.

எங்களின் உடையில் கார்பன் கிடையாது. அதற்கு பதில் சில்வர் ஐயான்ஸ் பயன்படுத்தி இருக்கிறோம். வைரசை கட்டுப்படுத்தும் திரவத்தை நூலிலேயே இழைச்சு கொடுத்து இருக்கிறோம். இந்த உடையை 50 முறை துவைத்து பயன்படுத்தலாம். அதாவது ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம். சுடிதார், புடவை, ஷர்ட் என எந்த உடையின் மேலும் பயன்படுத்தலாம்’’ என்றார் கவின்குமார் கந்தசாமி.

ஷம்ரிதி