நியூஸ் பைட்ஸ்



ஹார்ட்டின் நிறைந்த நினைவுச்சுவர்

லண்டனில் கொரோனா தொற்றுநோயால் இறந்தவர்களின் நினைவாக, குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் இணைந்து அரைக் கிலோ மீட்டர் நீளத்திற்கு நினைவுச்சுவரை அமைத்துள்ளனர். அந்தச் சுவரில் இறந்த ஒவ்வொருவரின் நினைவாகவும், 150,835 ஹார்ட்டின்களை மக்கள் வரைந்துள்ளனர். இந்த நினைவுச்சுவரின் முழு நீளத்தை நடந்து முடிக்கவே பத்து நிமிடங்களாகிறது.

பார்பி ரிப்போர்ட்ஸ்

பல புகழ்பெற்ற கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், கலை உலகில் ஆண்களை மையப்படுத்தியே கலைகளையும், கலை சார்ந்த பார்வையையும் முன்வைக்கின்றன. அதிலும் குறிப்பாக வெள்ளையர்களின் படைப்புகளே அங்கீகரிக்கப்படுகின்றன. எதிர்ப்பு பலகை அல்லது இந்த பாகுபாடு குறித்த கேள்விகளுடைய பலகையுடன் பார்பி பொம்மைகள், புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு, அதன் புகைப்படங்கள்  Art Activist Barbie என்னும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்படுகிறது. இந்த புதுவிதமான போராட்டத்திற்கு 1.9 மில்லியன் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆண்களின் கட்டுப்பாட்டில் டிவி ரிமோட்

இந்தியாவில், நகர்ப்புற குடும்பங்களில் டிவி ரிமோட்டின் கட்டுப்பாடு ஆண்களின் கையில்தான் இருக்கிறது என சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. ஓர்மக்ஸ் மீடியா என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வில், பொதுவாக தொலைக்காட்சிகளில் ப்ரைம் டைம் என்று குறிப்பிடப்படும் 7-9 மணியளவில், ஆண்களே டிவியில் எந்த சேனல் பார்க்க வேண்டும், எந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானிப்பதாக  தெரிவித்துள்ளனர்.

தனித்து வாழமுடியாவிட்டால் தோற்பதற்கு சமம்

ஒரு பெண், தன் இணையரை விட்டுப் பிரிந்ததும், குழந்தையை தத்து கொடுக்க நேர்ந்ததைப் பற்றிய ஒரு வழக்கில், நீதிபதிகள் பெண்கள் ஆண் துணையில்லாமல் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை உருவானால், ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் எனக் கூறினர். தனியாக வாழும் பெண்களும், தாய்மார்களும் ஆண் ஆதரவு இல்லாமல் சுயமாக வாழத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் நிலத்தடி சுரங்க மேலாளர்

இந்துஸ்தான் சின்க் நிறுவனம், இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் நிலத்தடி சுரங்க மேலாளராக சந்தியா ரசகத்லாவையும், நிலத்தடி சுரங்க மேம்பாட்டு மேலாளராக யோகேஸ்வரி ரானேவையும் நியமித்துள்ளது. சுரங்கச் சட்டம் 1952ன்படி  2019ல் செய்யப்பட்ட திருத்தங்களில், பெண்கள் முறையான சான்றிதழ்களை பெறும் பட்சத்தில் எந்தவிதமான சுரங்கத்திலும் (நிலத்திற்கு மேல், நிலத்திற்கு கீழ்) பணியாற்றலாம் என்றது. இச்சட்டத்தின்படி  சந்தியாவும், யோகேஸ்வரியும் முறையான பயிற்சிக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2021 தேர்தலில் பெண்கள் அதிக வாக்களிப்பு

தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆண்களை விட மொத்தம் 5,68,580 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தம் 4,57,76,311 வாக்குகளில்,  2,31,71,736 பெண்களும், 2,26,03,156 ஆண்களும், 1,419 பிற பாலினத்தவரும் வாக்களித்துள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வாக்களிக்கத் தொடங்கிய போக்கு 2016 தமிழகத் தேர்தலில் ஆரம்பித்தது. 2019லும் குறிப்பிட்ட சதவீதத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம் முன் வந்து வாக்களித்துள்ளனர்.

ஸ்வேதா கண்ணன்