வெளித்தெரியா வேர்கள்



அந்திசாயும் நேரம்...

பனையோலை  வேய்ந்த அந்த சிறுகுடிசையில், மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில், நிழல் உருவம் ஒன்று தென்படுகிறது.. அந்த சிறிய உருவத்தின் தோள்களில், சில மரக்கிளைகள், கைகளிலிருக்கும் சிறிய துணிப்பையில் சில இலைகள், வேர்கள், மகரந்தங்கள் மற்றும்
மொக்குகள்..
அந்த உருவத்தின் துரித நடையிலும், செயலிலும் காலம் அப்படியே உறைந்து நிற்கிறது... மெல்லிய மந்திர ஒலிக்கு இடையே, இலைகள் கொதிக்கும் மணமும், விறகுகள் எரியும் நெடியும் ஒன்றாகக் காற்றில் கலந்திட, சில மணித்துளிகளில், கொதிக்கும் திரவம் ஒன்று தயாராகிவிட்டது..

நீண்டகாலமாக பக்கவாதத்தால் செயலிழந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணிக்கு, தான் தயாரித்த இயற்கை மருந்தினை அளித்துவிட்டு, புன்னகையுடன் நிமிர்கிறார் லக்ஷ்மிக்குட்டி என்ற அந்தக் காட்டு மூதாட்டி.. ஊரே அவரை வனமுத்தச்சி (காட்டின் பாட்டி) .என்று தான் அன்புடன் அழைக்கிறது.

“இது எனது இடம்... இந்தக் காட்டில் தான் எனது வாழ்வும், பாரம்பரியமும் அடங்கியுள்ளது.. உண்மையில் இங்கு வாழ்வதற்கு தான், தைரியம் அதிகம் வேண்டும்..” என்று கூறும் எழுபத்தி ஐந்து வயதான லக்ஷ்மிக்குட்டி அம்மாள் என்ற வனமுத்தச்சி பிறந்தது முதல் வாழ்ந்து வருவது திருவனந்தபுரத்தின், பொன்முடி என்ற கிராமத்தை ஒட்டியுள்ள கல்லார் எனும் வனப்பகுதியில் தான்.. அதிலும், தனது சிறுகுடிசையில் தனியாக வாழ்ந்தபடியே, தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் பேணிப் பாதுகாத்து, தேவையான மூலிகைகளையும் வளர்த்து வருகிறார் இந்த மூதாட்டி.

ஏறத்தாழ 150 மூலிகைத் தாவரங்களின் பெயர்களும், அவற்றின் மருத்துவப் பலன்களும் இவருக்கு அத்துபடி என்பதுடன் குறைந்தது ஐந்நூறு நோய்களுக்கான மருந்துகளைத் தயாரிக்கவும், பல்வேறு நோய்களை முறையாகக் குணப்படுத்தவும் இவருக்குத் தெரியும் என்றாலும், இவையனைத்தையும் எங்கேயும் குறித்து வைக்காமல், தனது ஞாபகத்தில் வைத்தியம் செய்யும் இந்த வனமுத்தச்சிக்கு உண்மையில் எழுதப்படிக்கவும் தெரியும் என்பதும் தனது குழந்தைகளையும் படிக்க வைத்தார் என்பதும் இன்னொரு ஆச்சரியம்.

மலையே வாழ்க்கையென இருந்த காணி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த லக்ஷ்மி குட்டி, கல்வி கற்பதற்காக 1950களிலேயே மலையை விட்டு கீழிறங்கி வந்தார் என்பதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க அந்தப் பள்ளியில் வசதி இல்லாததால், படிப்பை நிறுத்திவிட்டாலும், இதற்கு அனுமதித்த தனது தந்தை, தாய் பற்றி பெருமையுடன் நினைவு கூறும் இவர் தனது மருத்துவத்தை தாயிடம் இருந்து கற்றதாகக் கூறுகிறார்.

“இயற்கையைக் கூர்ந்து கவனியுங்கள்..  இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை எனலாம்..” என்று கூறும் லக்ஷ்மி குட்டியம்மாள், காட்டிற்குள் மூலிகைகளைப் பறிக்கச் செல்வதைக் கூட ஒரு தவம் போலத்தான் செய்கிறார்.. தினமும் அதிகாலையில் எழுந்து, தனது குடிசைக்கு அருகே அவரே கட்டமைத்த தெய்வதாரா என்ற துர்க்கை அம்மன் கோவிலில் விளக்கேற்றி வைத்தபின்பு தனது கைப்பையுடன் மூலிகை பறிக்கக் காட்டிற்குள்
செல்கிறார்.

சூரியனின் முதற் கதிர்கள், பனிபடர்ந்த இலைகளை முதன்முதலாகத் தீண்டுவதற்காக பொறுமையாகக் காத்திருந்து, அதன்பின் அந்த மூலிகைச் செடியை வணங்கி, செடியிடம் அனுமதி கேட்ட பின்னரே, அவரது கடவுளை மனதிற்குள் வேண்டியபடியே மிகவும் மென்மையாக இலைகளைப் பறிக்கிறார்.. “காட்டில் இருக்கும் அனைத்து இலைகளும் மருத்துவ குணம் கொண்டது. அதிலும் இச்செடிகளின் இளம்தண்டுகளில் உள்ள நரம்புகள் மனிதனின் ரத்தநாளங்களுக்கு இணையானவை.

இவற்றிலிருந்து வெளிப்படும் ஆற்றல் தான், நம் உடலுக்குள் பாய்ந்து, குணப்படுத்துதல் என்ற சக்தியை நமக்கு வழங்குகிறது.. என்னைப் பொறுத்தவரை நோயைத் தீர்க்கும் ஒவ்வொரு இலையும் ஒரு மந்திரம். அதை நிகழ்த்திக் கொடுக்கும் இந்த இயற்கை சிகிச்சையோ ஒரு தெய்வ வழிபாடு.!” என்று கூறும் இவர், தேவைக்கதிகமாக ஒரு இலையையோ, வேரையோ ஒருபோதும் பறிப்பதில்லை என்பதை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறார்..

இந்த மூலிகை மருத்துவத்தை, மந்திரத்தை குழந்தைப் பருவத்திலேயே தனது தாய் குஞ்சிதேவியிடம் கற்றுக் கொண்ட லக்ஷ்மிக் குட்டியம்மாளை தொடர்ந்து ஊக்கப்படுத்தியது அன்புக் கணவர் மாதன் காணிதான் என்று சொல்பவர், சிறு வயதில் தான் தினமும் பத்து கிலோமீட்டர் நடைபயின்று பள்ளி சென்றபோது தன்னுடன் துணைக்கு வந்தவர், பதினாறு வயதில் விரும்பித் திருமணம் செய்து கொண்டதை காதலுடன் நினைவுகூறுகிறார்.

மூன்று ஆண் குழந்தைகள், குடும்பம் என்று மருத்துவத்தையே மறந்திருந்த அவர், தனது இளைய மகன் எதிர்பாராத விதமாக, பாம்பு தீண்டி மரணமடைந்தபோது தான், இனி இந்தத் துன்பம் இன்னொருவருக்கு நிகழக்கூடாது என்று, தான் கற்றிருந்த இயற்கை மருத்துவத்தை திரும்பவும் தன் கைகளில் எடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை கடந்த ஐம்பது வருடங்களாக நானூறு பேரை பாம்புக் கடியால் உயிர்போகும் நிலையிலிருந்து காப்பாற்றியிருக்கும் இந்த வனமுத்தச்சி, “எந்த மருந்தையும் தேவைக்கு அதிகமாக வைத்துக்கொள்ள மாட்டேன்.. ஆனால் பாம்புக்கடிக்கான இயற்கை விஷமுறிவு மருந்தினை மட்டும் எப்போதும் தயார்நிலையில் வைத்திருப்பேன்..” என்கிறார்.

இவர் வாழும் அந்தக் குடிசையில் இவர் அமர்ந்து இலைகளைப் பிரிக்கும் அறையில் மூன்று புகைப்படங்கள் தென்படுகின்றன.. ஒன்று தனக்கு பக்கபலமாக நின்று, ஐந்து வருடங்களுக்கு முன் வயோதிகத்தில் இறந்த கணவரின் படம். மற்றொன்று பாம்பு தீண்டி மரணித்த மகனது படம்.. மூன்றாவது, யானை மிதித்து மாண்ட மற்றொரு மகனது புகைப்படம்.

“இயற்கையை நாம் துன்புறுத்தாத வரையில், அதுவும் நம்மைத் துன்புறுத்துவதில்லை” என்ற மிகப்பெரிய உண்மையை எனது இரண்டாவது மகனை பலி கொடுத்த பின்பு உணர்ந்து கொண்டேன். என்ன, இயற்கை எனக்கான பாடங்களை மிகுந்த வலியுடன் தந்துள்ளது..” என்று அமைதியாகக் கூறும் லக்ஷ்மிக் குட்டியம்மாளின் மூத்த மகன், தற்சமயம் ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்.

தனது தாயை, நகரத்தில் தன்னுடன் தங்குமாறு எவ்வளவோ அழைத்தும், “இது எனது இடம்... இந்தக் காட்டில் தான் எனது வாழ்வும், பாரம்பரியமும் அடங்கியுள்ளது..” என்று உறுதியுடன் இருக்கும் இந்தக் காட்டு மூதாட்டி, தனது இயற்கை மருத்துவத்தை இன்றும் மக்களுக்காக தொடர்ந்து அளித்து வருகிறார்.. இவரது மருத்துவப் பணிகளைப் பாராட்டி, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம, கேரள அரசின் நன்விருதான நாட்டுவைத்திய ரத்னா ஆகியன இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மட்டுமின்றி இந்த வனமுத்தச்சி நாட்டுப்புற பாடல்களை எழுதுவது, கேரள மாநிலத்தின் நாட்டுப்புறவியல் கல்வி மற்றும் ஆய்விற்கு வரும் மாணவர்களுக்கு கௌரவப் பேராசிரியராக பாடங்கள் நடத்துவது, அனைத்திற்கும் மேலாக இயற்கையைப் பாதுகாப்பது என இந்த வயதிலும் சுறுசுறுப்பாக வலம் வருகிறார்.

சரியான சாலையே இல்லாத காட்டுக்குள் இருக்கும் தனது சாதாரண குடிசைக்கு வைத்தியம் தேடி வருபவர்களுக்கு துளசி சேர்த்து கொதிக்க வைத்த நீரை வழங்கி, வேக வைத்த காட்டுக் கிழங்குகளையே உணவாக வழங்கும் இவர், தனது மருத்துவத்தை தற்சமயம் முறைப்படுத்தி, ஆவணப்
படுத்தும் முயற்சியில் அமிர்த பலா, காட்டு முல்லை என்ற பெயர்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கேரள அரசுக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்.

தொடர் விருதுகளுக்குப் பின், இவரைத் தேடிவருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்களுக்கு இன்றும் இவர் கூறும்
அறிவுரை ஒன்றே ஒன்றுதான். “என்னைத் தேடி வந்த உங்களது பிரச்னைகள் அனைத்தும் ஒரே நாளில் குணமாக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. உண்மையில் உடலுக்கு மருத்துவம் என்பதைக் காட்டிலும் இது மனதிற்கான மருத்துவம் என்பதை நீங்கள் உணர்ந்தால் போதும்..” என்றபடி தனது விளக்கை ஏற்றி வைக்கிறார் வனமுத்தச்சி..

பாட்டி சொல்லைத் தட்டாதே என்று விளையாட்டாகச் சொல்லும் நாம், இந்த காட்டின் பாட்டி சொல்வதில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு இந்த மருத்துவத்தில் மட்டுமல்ல, எந்தத் துறை மருத்துவத்தையும் நம்பிக்கையுடன், பொறுமையுடன் கடைபிடித்தால் நம் வாழ்விலும் ஒளி வீசும் என்பதில் சந்தேகமே இல்லை..!!