ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்



பிரான்சில் இருந்து வாங்கப்பட்டுள்ள அதி நவீன ரஃபேல் போர் விமானத்தை இயக்கப் போகும் முதல் பெண் விமானி என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தின் ஷிவாங்கி சிங் பெறுகிறார். ஃபிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் கடந்த மாதம் ஹரியானாவின் அம்பலா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த, ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கியது.  இதில் 10 விமானங்கள் நம் விமானப் படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


அதில் ஐந்து விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐந்து விமானங்கள் அம்பாலா விமானப் படை தளத்தில் அமைந்துள்ள ‘கோல்டன் ஆரோ’ படைப்பிரிவில் சமீபத்தில் இணைக்கப்பட்டன.  ரஃபேல் போர் விமானங்களை இயக்க நம் விமானப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் பெண் விமானிகளுக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் பணியாற்றும் லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங் இந்திய விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும், மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட ரஃபேல் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் பெண் ஆவார். அவருக்கு வழங்கப்பட இருக்கும் கன்வெர்ஷன் பயிற்சி முடிந்தவுடன் இந்தியாவின் கோல்டன் ஏரோவ்ஸ் ஸ்குவார்டனில் இணைந்து ரஃபேல் போர் விமானத்தை
அவர் இயக்க உள்ளார். தற்போது ராஜஸ்தானில் இருக்கும் விமானப்படை தளத்தில் இருந்து அம்பாலாவுக்கு ஷிவாங்கி வந்து சேர்ந்துள்ளார்.

இந்திய விமானப்படையில் தற்போது 10 பெண் போர் விமானிகள் உள்ளனர். இதில் ஷிவாங்கி சிங் மிக்21எஸ் விமானத்தை ஓட்டி பயிற்சி பெற்றவர். உலகிலேயே மிகவும் அதிகமான லேண்டிங் மற்றும் டேக்-ஆஃப் ஸ்பீட் கொண்ட போர் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவாங்கி சிங், விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உடன் ராஜஸ்தானில் செயல்பட்டு அவரிடம் பயிற்சி பெற்றவர். கடந்தாண்டு தேர்தலுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி, பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டவர் அபிநந்தன் வர்த்தமான் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

வாரணாசியைப் பூர்வீகமாக கொண்டவர் ஷிவாங்கி சிங். வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். சிறு வயது முதலே விமானம் ஓட்டவேண்டும் என்ற கனவுடன் தான் இருந்து வந்ததாக ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.  பிறகு தேசிய சாரணர் படையின் விமானப் படைப் பிரிவில் இணைந்து பணியாற்றியவர், 2016ல் இந்திய விமானப் படை அகாடமியில் இணைந்து தனது பயிற்சியைத் தொடங்கினார்.

அங்கு தேர்ச்சி அடைந்த பின் 2017ல் நமது இந்திய விமானப் படையில் விமானியாகப் பணியில் இணைந்தார்.நமது இந்திய விமானப் படையில் மொத்தம், 1,875 பெண் அதிகாரிகள் பணியில் இருக்கின்றனர். அதில் 10 பெண் விமானிகளும், 18 பெண் வழிகாட்டிகளும் உள்ளனர்.

மகேஸ்வரி நாகராஜன்