கத்தியின்றி ரத்தமின்றி வலியை விரட்டலாம்!



நாற்பது வயதைக் கடந்தாலே மூட்டு வலி, மாடிப்படி ஏற முடியவில்லை, கழுத்து வலி, தோள்பட்டை வலின்னு ஒவ்வொரு பிரச்னையும் தலை தூக்க ஆரம்பிக்கும். அதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றில்லாமல், கைகளாலும், சிறப்பு பெல்ட்டுகள் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் எலும்பியல் நிபுணர் டாக்டர் பால குமரன்.

‘‘இது முழுக்க முழுக்க மேனுவல் தெரபி. அதாவது கத்தியின்றி, ரத்தமின்றி நம் எலும்பின் மைக்ரோ அமைப்பை சரி செய்வது. இந்த சிகிச்சைக்கு பெயர், 4 எம் ஆர்த்தோ ேமனுவல் தெரபி. கைகளால் மற்றும் சிறப்பு பெல்ட்டுகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சையின் போது வலியை ஒருவர் உணர மாட்டாங்க. அதே நேரத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த வலி குறைந்து இருக்கும். இந்த சிகிச்சையினை மூன்று வாரம் தொடர்ந்து எடுத்து வந்தால், அவர்கள் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பிடலாம்.

ஆஸ்டியோபதி என்பது மற்றொரு சிகிச்சை. அதாவது பெயின் சாஃப்ட்வேர் கரெக்‌ஷன். நம்முடைய மூளையில்  செரிபிரோ ஸ்பைனல் திரவம் இருக்கும். அதுதான் நம் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல உதவும். அதே போல் அங்குள்ள தேவையற்ற ரசாயன பொருட்களையும் வெளியேற்றும். இதுதான் அந்த திரவத்தின் முக்கிய வேலை. இந்த திரவத்தின் ஓட்டம் மூளையில் இருந்து முதுகுத் தண்டு வரை இருக்கும். ஓட்டம் குறையும் போது, முதுகுத் தண்டு பகுதி வலுவிழந்துவிடும். அதற்கான சிகிச்சை முறைதான் ஆஸ்டியோபதி. இதன் மூலம் முதுகுத்தண்டு ரிலாக்சாகி அது பழைய நிலைக்கு மாற வழிவகுக்கும்.

இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் இந்தியாவிற்கு புதுசு. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த சிகிச்சையினை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கேன். 4 எம் ெதரபியினை கடந்த 15 வருடமாக செய்து வருகிறோம் என்றாலும், அதற்கான பயிற்சி முறைகள் இங்கு கிடையாது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் தான் இந்த சிகிச்சைக்கான பயிற்சி முறைகள் உள்ளன’’ என்றவர் எதிர்காலத்தில் இதற்கான கல்வி திட்டங்களை இங்கும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘‘பொதுவாகவே 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பலர் முதுகு, கழுத்து வலியினால் அவதிப்பட காரணம் அந்த வயதில் தான் எலும்பு தேய்மானம் ஏற்பட ஆரம்பிக்கும். இதற்கு நம்முடைய உணவு முறை மற்றும் தூக்கமின்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை தூக்கம் அவசியம். ஆனால் நாம் அதை கடைப்பிடிப்பது இல்லை. எல்லாமே தலைகீழாக தான் செய்கிறோம். எதையுமே சரியான நேரத்தில் செய்வதில்லை. இதனால் நம்முடைய உடலுக்கும் மூளைக்கும் எலும்புக்கும் தேவையான மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. விளைவு நாளடைவில் அவை வலுவிழக்க ஆரம்பிக்கும்.

காலை ஏழு மணிக்கு காலை உணவு சாப்பிடணும். மதியம் ஒரு மணிக்கெல்லாம் மதிய உணவை முடித்திடவேண்டும். அதே போல் இரவு உணவும் ஏழு மணிக்கு சாப்பிட்டு எட்டு மணிக்கெல்லாம் தூங்க செல்ல வேண்டும். அப்போது தான் நாம் தூங்கும் போது கூட நம்முடைய உடல் உறுப்புகள் முறையாக இயங்கும். இது தான் இயற்கையான முறை. இதற்கு தான் நம் உடல் பழக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் நாம் காலை உணவை சாப்பிடுவதில்லை. ஆனால் உடலுக்கு மட்டும் அளவுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறோம். மேலும் சத்துள்ள ஆகாரங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதன் மூலம் நாமே பல நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறோம்’’ என்றவர் பெண்கள் மட்டும் இல்லாமல் எல்லாரும் உடற்பயிற்சிகள் அவசியம் செய்து பழக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

‘‘ஆர்த்ரைடிஸ், பெண்களை பாதிக்கும் எலும்பு பிரச்னை. 55 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். மெனோபாஸ் நிலையை அடையும் போது, அவர்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் எலும்புகள் வலுவிழக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகள் செய்வதில்லை.

அவர்களின் பாதி வேலையை இயந்திரங்களும், வேலையாட்களும் செய்கிறார்கள். அம்மியில் தேங்காய் அரைப்பது மற்றும் ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது கூட ஒரு வகையான எலும்பினை வலுவாக்கும் உடற்பயிற்சி தான். இதனால் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதி வலுவடையும்.

தரையில் அமர்ந்து அரைக்கும் போது குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் நம்முடைய முதுகு தண்டுவடம் வலுவாகும். அதே போல் சாப்பாடு சாப்பிடும் போது தரையில் அமர்ந்து கால்களை சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். வெஸ்டர்ன் கழிவறை பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும். இது கால் மூட்டுக்கு நல்ல பயிற்சி.

இப்போது பலர் சந்திக்கும் முக்கிய பிரச்னை கழுத்து வலி. எல்லாமே கணினி மயமாகிவிட்டதால், நாம் செய்யும் வேலையும் அதை சார்ந்தே உள்ளது. அவ்வாறு அதில் வேலைப் பார்க்கும் போது, அதற்கான உரிய நிலையில் அமர்ந்து வேலைப் பார்க்க வேண்டும்.

ஒரு சிறு மாற்றம் கூட உங்க உடலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். எலும்பு வலுவாக விட்டமின் டி மிகவும் அவசியம். அவை சூரிய ஒளியில் எண்ணற்ற மடங்கு கிடைக்கிறது. ஆனால் அதையும் நாம் சன்ஸ்கிரீன் லோஷன் போட்டு உடலுக்குள் ஊடுறுவவிடாமல் தடுத்து விடுகிறோம். காலை மாலை இளம் வெயில் நம் உடலில் படுவது போல் நடைபயிற்சி  செய்யலாம்.

உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது போல் உணவு முறையிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு பழக வேண்டும். நம் நாட்டில் இல்லாத உணவுகள் இல்லை. ஆனால் அதை தவிர்த்து விட்டு நாம் துரித உணவினை விரும்பி சாப்பிடுகிறோம்.

மற்றொரு பக்கம் டயட் என்ற பெயரில் எதையுமே சாப்பிடுவதில்லை. டயட் இருப்பது தவறில்லை. ஆனால் அந்த நேரத்தில் உட்கொள்ளும் உணவுகள் சமச்சீராக இருக்க வேண்டும்’’ என்றவர் சர்வதேச தங்கப் பதக்க விருது, ரிசர்ச் சயின்டிஸ்ட் விருது, சர்வதேச அறிவுசார் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

ப்ரியா