சொந்தமா தொழில் துவங்க வேண்டுமா? ஆலோசனை அளிக்கிறார் அகிலா ராஜேஷ்வர்



ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரி என பல்வேறு துறைகளில் இருந்து மாணவர்கள் தங்களின் படிப்பை முடித்துவிட்டு வெளியேறுகிறார்கள். இவர்களில் எல்லாருக்கும் அவர்கள் நினைக்கும் வேலை கிடைக்கும் என்று கண்டிப்பாக சொல்லிவிட முடியாது.

 போட்டி நிறைந்த இந்த உலகில் திறமை உள்ளவர்கள் மட்டுமே அவர்கள் நினைக்கும் வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சிலர் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் மார்க்கெட்டிங், ஸ்விகி என்று கிடைக்கும் வேலையில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். மற்றும் ஒரு சிலர் யாரையும் நம்பி நான் இல்லை. என் திறமையே எனக்கு பலம் என்று சொந்தமாக தொழில் துவங்க முன் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்களில் எத்தனை பேர் சாதிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான்.

காரணம் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று இருந்தாலும், என்ன தொழில் செய்யலாம்... அதனை எவ்வாறு திறம்பட நிர்வகிக்கலாம், தங்களின் பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்யலாம்... என்ற சிந்தனை இருக்கும். இனி சிந்திக்க வேண்டாம்... அதனை செயல்படுத்தி தர நாங்க இருக்கிறோம் என்கிறார் டை அமைப்பின் நிர்வாக இயக்குனர் அகிலா ராஜேஷ்வர்.

‘‘டை (TiE), அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம். 1992ம் ஆண்டு கலிபோர்னியா, சிலிக்கான் வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவில் இருந்து பலர் அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வது வழக்கமாக இருந்தது. பலர் நிறுவனத்தில் வேலைப் பார்த்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் சொந்தமாக தொழில் செய்ய துவங்கினர். அதில் வெற்றியும் கண்டனர். குறிப்பாக இந்தியர்கள். என்னதான் வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்தாலும், போட்டி என்பது இருக்கத்தான் செய்யும்.

மேலும் தொழில் ரீதியாக பல சட்டச்சிக்கல்கள் முதல் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சந்தித்த பிரச்னைகளை மற்றவர்களும் சந்திக்க நேரிடும் என்பதால், வளரும் தொழில் அதிபர்களுக்காக அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக இந்த அமைப்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்களால் துவங்கப்பட்டது. தற்போது 18 நாடுகளில் 61 கிளைகள் என இந்த அமைப்பு பரந்து விரிந்துள்ளது. சென்னையில் கடந்த ஆறு ஏழு வருடமாக செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னையின் கிளை அதன் செயல்பாட்டில் சர்வதேச அளவில் முதலாம் இடத்தை பிடித்துள்ளது’’ என்றவர் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் விவரம், திட்டம் மற்றும் அதன் செயல்பாடு பற்றி விவரித்தார்.

‘‘முதலில் டையில் இணைய வேண்டும் என்றால் அதில் உறுப்பினராக தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களை மூன்று வகையாக பிரிக்கிறோம். சார்டர் மெம்பர்ஸ், ஏற்கனவே வெற்றிகரமாக தொழில் செய்து வருபவர்கள், மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள். அசோசியேட் மெம்பர்ஸ், புதிதாக தொழில் துவங்கியவர்கள்.

சார்டர் உறுப்பினர்கள் கொடுக்கும் உதவி மற்றும் ஆலோசனை பெறுபவர்கள். அகாடெமி இன்ட்டியூஷன்ஸ், கல்லூரி மாணவர்கள், தொழில் துவங்கும் எண்ணம் இருப்பவர்கள். இவர்களுக்கு எங்கள் உறப்பினர்கள் நேடியாக சென்று அவர்களின் எதிர்கால தொழில் குறித்து ஆலோசனை வழங்குவார்கள். எங்களின் அமைப்பில் ஏழு கல்லூரிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.  நாங்க மாதம் தோறும் சுமார் ஐந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதில் முக்கியமாக ஐந்து விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறோம்.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நெட்வொர்க் மிகவும் அவசியம். ஒருவரின் தொடர்புகள் விரிவடையும் போது தான் அவர்களின் தொழிலும் வளர்ச்சி அடையும். அவர்களின் தொடர்பு எல்லைகளை விரிவடைவதற்கு இந்த நிகழ்ச்சிகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் ஐந்து நிமிட உரையாடலின் போது கூட ஒருவருக்கான தொடர்பு ஏற்படும். மேலும் தெரியாத பல விஷயங்களை நாம் பகிர்ந்து கொள்ள முடியும்.

அடுத்து மென்டரிங். பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு சென்று படிக்கலாமா? அல்லது வேலைப் பார்த்துக் கொண்டே மேல் படிப்பு படிக்கலாமா...ன்னு நாம் குழம்பும் போது, பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது உறவினர்கள் என நம்முடைய நலனில் அக்கறை உள்ளவர்கள்  நமக்கு ஆலோசனை கூறுவார்கள். அதே போல் தான் தொழில் முனைவோர் தங்களின் தொழில் சார்ந்த பிரச்னைகள் மற்றும் குழப்பங்களுக்கு ஆலோசனை அளிப்பவர்களை மென்டர் என்று அழைப்போம்.

சிலருக்கு பொருளை மார்க்கெட்டிங் செய்ய சிக்கலாக இருக்கும். ஒரு சிலர் நிதி பிரச்னையில் இருப்பாங்க. சிலர் அடுத்து எவ்வாறு தங்களின் தொழிலை எடுத்து செல்லலாம் என்று குழம்பி இருப்பாங்க. இது போன்ற நிலையில் ஒருவர் ஆலோசனை செய்யும் போது, நமக்கு தெளிவு ஏற்படும். தற்போது எங்க அமைப்பில் 200க்கும் மேற்பட்ட மென்டர்கள் உள்ளனர். இவர்கள் பல துறையை சேர்ந்தவங்க. ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப நாங்க மென்டரை தேர்வு செய்து, அவர்களை உறுப்பினர்களுடன் இணைப்போம்.

சிலர் குறிப்பிட்ட மென்டரிடம் ஆலோசனை பெற விரும்புவார்கள். அதற்கான ஏற்பாடும் செய்து தருவோம். நாடு முழுக்க மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் எங்களின் அமைப்பு செயல்பட்டு வருவதால், உலகில் எங்க அமைப்பில் உள்ள மென்டர்களை எங்களின் உறுப்பினர்களின் பிரச்னைக்கு ஏற்ப இணைக்க தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கின் போதும் எங்களின் உறுப்பினர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க நாங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதாவது எங்களின் இணையத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம்... அதற்கான நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். அல்லது அவர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இணைந்து ஆலோசனை வழங்குகிறார்கள்.

மூன்றாவது கல்வி. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதை துவங்கும் முன், அது குறித்த அறிவு இருப்பது அவசியம். அப்பதான் அந்த தொழிலில் உள்ள மேடு பள்ளங்களை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும்.

கல்வியை தொடர்ந்து இன்குபேஷன். ஒரு தொழிலில் உள்ள சிக்கல்கள், போட்டிகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். கடைசியாக நிதி. நாங்க பண உதவி செய்ய மாட்டோம். ஆனால் நிதி உதவி செய்யும் நிறுவனம் மூலம் அவர்களுக்கு தேவையான உதவியினை பெற்றுத் தருகிறோம்’’ என்றவர் பெண்களுக்காக டை விமன் என்ற பிரிவினை துவங்கி இருப்பதாக தெரிவித்தார்.

‘‘பெண்களும் இப்போது எல்லா துறையிலும் தங்களுக்கான அடையாளத்தை நிலைநாட்டி வருகிறார்கள். ஆண்களுக்கு சமமாக இவர்களும் தொழில் செய்ய துவங்கியுள்ளனர். தொழில் என்றால் அதில் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளை விட இவர்கள் பாலியல் ரீதியாகவும் சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறோம். பிசினஸ் பிளான் மற்றும் சொல்லித் தருவது இல்லாமல், விடா முயற்சி, வீடு மற்றும் தொழில் இரண்டையும் சமமாக சமாளிக்கும் திறன்... அனைத்து குறித்தும் ஆலோசனை வழங்குகிறோம்.

அடுத்து டை கேட்டலிஸ்ட். ஒரு தொழில் செய்பவர்கள், சுய முன்னேற்றத்தில் முதலீடு  செய்தால் தான் அவங்க தொழில் முன்னேற்றம் அடையும். எப்படி வேண்டும் என்றாலும் தொழில் செய்யலாம் என்பதை விட இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் தங்களுக்கு என ஒரு விதியினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் நாம் மாற வேண்டும்.

அப்போது தான் நம்மை சுற்றி இருப்பவர்கள் மாறுவார்கள். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதனை படிப்படியாகத்தான் முன்னேறி கொண்டு வரவேண்டும். அகல கால் வைத்தால் நாம் பாதாளத்தில் தான் தள்ளப்படுவோம். இதை புரிய வைப்பது தான் எங்களின் முக்கிய வேலையே’’ என்றவர் மாணவர்களையும் தொழில் முனைவோராக மாற்றும் எண்ணம் உள்ளதாக கூறினார்.

‘‘ஏற்கனவே சொன்னது போல், மாணவர்களுக்கும் சுயதொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இனி வரும் காலத்தில் சொந்தமாக தொழில் செய்வது தான் ஒருவரின் வாழ்க்கையை செழிப்பாக மாற்றி அமைக்கும்’’ என்றார் அகிலா ராஜேஷ்வர்.

ஷம்ரிதி