மாறி வரும் சவுதி அரேபியா



பெண்கள் விமானம் ஓட்டி சாதனை படைக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் சமீபத்தில் தான் பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக  கடுமையான தண்டனை சட்டங்கள் அமலில் உள்ள இந்த நாட்டில் தூக்குத்தண்டனை என்பது சர்வசாதாரணம்.
பெண்களிடம் தகாத உறவு வைக்கும் ஆண்களுக்கும், கொலைக்குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் சவுதி அரேபியாவில் கசையடி வழங்குவது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. அது தான் அந்த நாட்டின் சட்டப்படியான தண்டனை.

மன்னராட்சி அமலில் உள்ள இந்த நாட்டில் அரசர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் முதல் முறையாக சினிமா தியேட்டர் திறந்து புதிய சாதனை படைத்துள்ளனர். தற்போது உலக நாடுகள் மற்றும் மனித உரிமை குழுக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கசையடி எனப்படும் பிரம்பால் அடிக்கும் தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வலிமையான கயிறுகள் மூலம் குற்றம் செய்தவர்களை பொது இடத்தில் வைத்து முதுகிலும் உடலின் பிற பகுதிகளிலும் தாக்குவார்கள். குற்றத்தை பொறுத்து ஆயிரம் கசையடி, 2000 கசையடி என்று எண்ணிக்கை மாறும்.

இன்னும் சில தண்டனைகளுக்கு இரும்பு கம்பிகள் கொண்டும், கூரான கருவிகளை கொண்டு தாக்குவதும் உண்டு. இப்படி பல வகையான கசையடி தாக்குதல் முறைகள் அந்த நாட்டில் பல்வேறு குற்றங்களை குறைத்துள்ளது. முன்னதாக 2015ல் தன்னார்வலர்  ரைப் படாவி என்பவருக்கு 1000 கசையடிகள்  தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால் இவர் கசையடி காரணமாக உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது.

இந்த தண்டனைகளை உலக சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கசையடி தண்டனை வழங்குவதை மொத்தமாக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக சிறை தண்டனை, அபராதம், சமூக சேவை செய்து தண்டனை விதிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தற்போது, சினிமா தியேட்டர், பெண்களுக்கு லைசென்ஸ் என்று நிறைய சீர்திருத்த சட்டங்களை இளவரசர் முகமது பின் சல்மான் அமல் படுத்தியது மட்டும் இல்லாமல், கசையடி தண்டனையை ஒழித்துள்ளதை குறித்து உலக நாடுகள் அவரின் திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளது.

கோமதி பாஸ்கரன்