என்ன செய்வது தோழி?அவர் மனைவி சரியில்லையாம்!



அன்புடன் தோழிக்கு,
நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். எனது கணவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வீட்டில் 2 பேர் சம்பாதிப்பதால் பொருளாதார ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை. வாடகை வீடுதான் என்றாலும் வசதியாகவே வாழ்கிறோம்.

எனது திருமணம் பெற்றோர் செய்து வைத்தது. கணவன், மனைவி இடையே வரும் வழக்கமான சின்ன சண்டைகள் மட்டும்தான் எங்களுக்கும் வரும். அது தவிர எந்த பிரச்னையும் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கை.அந்த மகிழ்ச்சி அலுவலகத்திலும் எதிரொலிக்கும். அலுவலகத்தில் எல்லோரிடமும் நான் ஜாலியாக பேசுவேன். சக ஆண் ஊழியர்கள் மட்டுமல்ல, பெண் ஊழியர்களும் என்னுடன் பேச விரும்புவார்கள். தனிப்பட்ட விவகாரங்களை கூட என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

எங்கள் மேலாளரும் ‘உன்கிட்ட பேசிட்டு இருந்தா மனசு ரிலாக்சாகி  விடுகிறது’ என்பார். சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி குறித்து குறை சொல்ல ஆரம்பித்தார். ‘என் மனைவி சரியில்லை. அடிக்கடி சண்டை போடுகிறாள். எவ்வளவு காசு கொடுத்தாலும் போதவில்லை என்கிறாள்’ என்று ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை, ‘என் மனைவி என்னை சந்தேகப்படுகிறாள். நான் அவளுக்கு உண்மையாக இருந்தாலும் என்னை சந்தேகப்படுகிறாள். ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாள். என்ன செய்வது என்று புரியவில்லை. உன்னிடம் பேசுவதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்’ என்று சொல்வார்.
அவரை பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.

அதனால் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி விட்டு வருவேன். அலுவலகத்தில் எல்லோரிடமும் அவருக்கு நல்ல பெயர். யாரிடமும் மேலாளர் என்ற ேதாரணையில் நடந்து கொள்ள மாட்டார். அப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு இது போன்ற நிலையா என்று வேதனையாக இருக்கும். எத்தனை பிரச்னை இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்.

அலுவலகத்தில் என்னிடம் மட்டுமே சொல்வார்.சில நாட்களுக்கு முன்பு,  அவர் மனைவி அடிக்கடி சண்டை போடுவதாகவும், அதுவும் சாப்பிட கூட விடாமல் சண்டை பிடிப்பதாகவும்’ சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அதை பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வழக்கம் போல் அவரிடம், ‘கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகி விடும்’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

அப்போது அவர், ‘நீங்களும் என்னை விட்டு போறீங்களா... எனக்குதான் யாருமில்லை’ என்று சொல்லி கண் கலங்கினார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எழுந்தவள் அப்படியே உட்கார்ந்து விட்டேன். ‘இல்லை சார் கஷ்டமான விஷயத்தை பேசிட்டே இருந்தால் வருத்தம்தான் அதிகமாகும்’ என்றதற்கு, அவரோ, ‘உங்களிடம் பேசினால் எனக்கு ஆறுதலாக தான் இருக்கு. உங்களை பார்த்தால்தான் எனக்கு நிம்மதியும், நம்பிக்கையும் வருது. ஆனால் நீங்கள் போறேன்னு சொல்றீங்க. என்மேல உங்களுக்கும் அன்பு இல்லைன்னு தெரியுது’ என்றார்.
அவர் வருத்தப்படுவதை பார்த்து பதறிப்போன நான், ‘அப்படியெல்லாம் இல்ல சார். உங்களுக்கு எப்போதும்  ஆறுதலா இருப்பேன்’ என்று சொல்லிவிட்டேன். ஏன் அப்படி சொன்னேன் என்று தெரியவில்லை.

ஆனால் அவரோ சட்டென்று என் கையை பிடித்துக் ெகாண்டார். கூடவே, ‘இந்த அன்பு எப்போதும் கிடைக்குமா’ என்றார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து கையை விடுவித்துக் கொண்டு வந்து விட்டேன். எனக்கு பதட்டமாக இருந்தது. அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று புரிந்தது. அதனால் அவர் அறைக்கு போவதை தவிர்க்க ஆரம்பித்தேன். ஆனால் அவர் எதையோ பறிகொடுத்தவர் போல் இருந்தார். எனக்கு பாவமாக இருந்தது.

சம்பவம் நடந்த 3வது நாள், அலுவலக வேலையாக அவரது அறைக்கு சென்றேன். அப்போது அவர், ‘என் மனைவி பிரச்னைகளை எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன். ஆனால் நீ பேசாமல் இருப்பதை தான் என்னால் தாங்க முடியவில்லை’ என்று சொல்லி வேதனைப்பட்டார். எனக்கும் கஷ்டமாக இருந்தது. ‘ஒரு ஃபிரண்டு மாதிரிதான் உங்ககூட பேசினேன். நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க’ என்றேன்.

உடனே அவர், ‘நானும் முதலில் அப்படிதான் என் பிரச்னைகளை  உன்னிடம் சொன்னேன். ஆனால்  பேச ஆரம்பித்த பிறகு, என் மனைவியின் கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் எனக்கு நீதான் ஆறுதலாக இருந்தாய். உன்னால்தான் இன்று நான் உயிரோடு  இருக்கிறேன். நீ எனக்கு ஆதரவாக இருப்பாய் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த கெட்டப் பேரும் வராது. ஆனால் எனது உணர்வை புரிந்து கொண்டால் போதும். உனக்காக நான் இருக்கிறேன் என்ற ஆறுதல் வார்த்தைகள் போதும். உன்னிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று பேசிக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில், ‘சரி சார்... உங்களுக்கு நான் என்றும் ஆறுதலாக இருப்பேன்.... வழக்கம் போல் பேசுவேன்’என்று சொன்ன பிறகுதான் பாவம் அவர் முகத்தில் சிரிப்பே வந்தது. அதன் பிறகு அடிக்கடி பேசுவோம். அவர் மனைவி பற்றி குறை சொல்வதை விட்டுவிட்டார். என் பெயரை சுருக்கி செல்லமாக அழைக்கிறார். உரிமையாக பேசுகிறார்.

இப்போதெல்லாம் எனக்கும் அப்படி அழைப்பது பிடித்திருந்தது. செல்போனில் பேசுவதில்ைல என்றாலும்  மெசேஜ் அனுப்பி கொள்கிறோம். சில நேரங்களில் என் வீட்டுக்காரருக்கு தெரிந்தால் என்ன நினைப்பாரோ என்று தோன்றும். ஆனால், ‘நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே.... கஷ்டப்படுபவருக்கு ஆறுதலாக தானே இருக்கிறோம். அதிலென்ன தவறு இருக்கிறது’ என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் விவரம் தெரிந்த அலுவலக தோழி, ‘வேண்டாம் தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக் கொள்ளாதே, உன் குடும்பத்தில் பிரச்னை வரும்’ என்று அடிக்கடி பயமுறுத்துகிறாள். அதை கேட்கும் போதெல்லாம் எனக்கும் பயமாக இருக்கிறது. அவரிடம் பேசாமல் இருந்தால் அவர் எதாவது செய்து கொள்வாரோ என்ற பயமும் இருக்கிறது.

அவரிடம் இருந்து விலக வேண்டும் என்று சில நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன். அது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் இப்போது கஷ்டமான விஷயம்தான். அதே நேரத்தில் பிள்ளைகள் மற்றும் கணவருக்கு தெரிந்தால் என்னவாகும் என்று பயமாக இருக்கிறது. என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை.... தடுமாற்றத்தில் தவிக்கிறேன் எனக்கு ஒரு வழிகாட்டுங்கள் தோழி.இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,
இந்த உறவு பிரச்னைக்குரியது என்பதை நீங்கள் உணர்ந்து உள்ளீர்கள். அதற்காகதான் இந்த கேள்வியை கேட்டு உள்ளீர்கள். அதுவே நல்ல ஆரம்பம் என்பதற்காக உங்களை பாராட்டுகிறேன்.பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இரக்க உணர்வு அதிகம். ஆனால் அந்த இரக்க உணர்வு பெரும்பாலும் ஆண்களுக்கு சாதகமாகத்தான் இருந்திருக்கிறது. பெண்களுடைய இரக்கத்தையும், பரிதாப உணர்ச்சிகளையும் பல ஆண்கள் பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

அதனால்தான் வாழ்க்கை பல நேரங்களில் கடுமையான சூழ்நிலைகளில்  நம்மை கொண்டு போய் வைக்கிறது. அந்த இக்கட்டான  நேரத்தில் முடிவெடுத்தாக வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறது. அதுபோன்ற சூழலில்தான் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்.

உங்கள் மேலாளர் உணர்வுபூர்வமாக உங்களை சார்ந்திருப்பது போல் தெரியலாம். ஆனால் உண்மையில் அவர் உங்கள் இரக்க உணர்வை அவருக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவருக்காக பரிதாபப்படாமல், அவரை விட்டு விலகி இருப்பதுதான் சரியாக இருக்கும்.
ஏனென்றால் ஒருவர் தனது பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அவர் பிரச்னையை பேசி, உங்களையும் பிரச்னைக்குள் இழுத்து சென்றிருக்கிறார். இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலைக்கு வந்திருக்கிறீர்கள். அது எந்த நேரமும் சிக்கலை பெரிதாக்கலாம்.

அவருக்கு உள்ள பிரச்னைகளை அவர் மனைவியிடம் மனம் விட்டு பேசுவதின் மூலம்தான் சரி செய்ய முடியும். ‘மனைவி சந்தேகப்படுகிறார்’ என்று சொல்கிறார். மனைவியிடம் தன்னை சரியானவர் என்று நிரூபிப்பதற்கு பதில், மனைவியின் சந்தேகத்தை நிஜமாக்க முயல்கிறார். அப்புறம் எப்படி அவர் சரியானவராக இருக்க முடியும்.

மேலும் அவர் மனைவியின் தரப்ைபயும் விசாரித்தால்தான் உங்கள் மேலாளர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும்.
அதுமட்டுமல்ல அவர் மனைவியின் வாழ்க்கையை மட்டுமல்ல,  இன்னொருவரின் மனைவியின் வாழ்க்கையை நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உங்கள் கணவர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் மனைவியின் இது போன்ற நட்புகளை, உறவுகளை விரும்பமாட்டார்கள். நீங்கள் சொல்வது போல் இதுவரை எந்த தவறும் நடக்கவில்லை என்றாலும் கூட ஏற்க மாட்டார்கள்.

அதனால்தான் உங்கள் தோழி எச்சரிக்கை செய்திருக்கிறார். தயவுசெய்து அவர் சொல்வதை கேளுங்கள். நல்ல அறிவுரைகள் எப்போதும் ஆரம்பத்தில் கசக்கவே செய்யும்.  அவற்றை கடைப்பிடித்தால் நல்லதே நடக்கும்.உங்கள் மேலாளரிடம் அலுவலக சார்ந்த விஷயங்களை தவிர்த்து இனி வேறு விஷயங்களை பேசாதீர்கள். முடிந்தவரை அவர் அறைக்கு செல்வதை தவிருங்கள். வேறு வழியில்லாமல் செல்ல முயன்றாலும், அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பேசாதீர்கள்.

அப்படி பேசாமல் இருப்பது உங்கள் இருவருக்கும் முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஏனென்றால் உங்களுக்கும் அவர் மீது ஈடுபாடு இருப்பது தெரிகிறது. அதனால் இந்த பிரிவு கொஞ்ச நாட்களுக்குதான் கஷ்டமாக இருக்கும். இருவரின் எதிர்காலத்திற்கும் எது நல்லது என்பதுதான் முக்கியம். அதுதான் இருவருக்கும் நல்லது என்று சொல்லி புரிய வையுங்கள். அதில் நீங்கள் உறுதியாக இருங்கள்.

அப்படி அவர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்றால், மன நல மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்க சொல்லுங்கள். இல்லாவிட்டால், அவருக்கும், அவர் மனைவிக்கும் பொதுவான ஆட்கள், உறவினர்கள் மூலம் பேசி சரி செய்து கொள்ள ஆலோசனை சொல்லுங்கள். முக்கியமாக ஒருமுறை சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இது ஆரோக்கியான உறவு அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அதில் எப்போதும் உறுதியாக இருங்கள். கெஞ்சினாலும், பார்க்க பாவமாக இருந்தாலும் அந்த உறவை ஏற்றுக் கொள்ளாதீர்கள் . அதனால் இரண்டு தரப்புக்கும் நல்லது விளைய போவதில்லை. முடிந்தால்  இடமாற்றம் அல்லது வேலை மாற்றத்திற்கு கூட முயற்சி செய்யலாம்.

அன்பான கணவர்,  குழந்தைகள் என நல்ல குடும்பம், வசதியான வாழ்க்கை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதனால் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நல்ல  வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளாதீர்கள்.

இது உண்மைக்கும், உணர்ச்சிக்கும் இடையிலான போராட்டம். உணர்ச்சியை தூரத்தில் வைத்துவிட்டு உண்மையை உணர்ந்து முடிவெடுங்கள். இந்த முடிவை ஏன் எடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல முடிவெடுங்கள்.... நல்லதே நடக்கும்.... வாழ்த்துகள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...