உணவே மருந்து-தத்தளத்தள தக்காளிப்பழமே…



தக்காளியில், மரபணுமாற்றம் செய்யப்பட்ட (Hibreed) மற்றும் நாட்டுத்தக்காளி, பெங்களூர் தக்காளி என பல வகைகளில் நம்மூரில் கிடைக்கிறது. சுவை வேண்டுமானால் மாறுபடுமே தவிர, அனைத்திற்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன.
பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம். இரும்பு போன்ற தாதுப்பொருட்களின்  முக்கிய ஆதாரமாக உள்ள தக்காளி நரம்புகள் மற்றும் தசைகளின் இயல்பான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். மேலும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி தக்காளியில் உள்ளது. நம் உணவில் வைட்டமின் சி இன் மூன்றாவது மூலமாகவும், வைட்டமின் ஏ-க்கு நான்காவது மூலமாகவும் தக்காளி உள்ளது. பீட்டா கரோட்டின், பைட்டோஸ்டெரால்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் தக்காளியில் மிகுந்துள்ளன.

நம் உடலானது, தொற்று நோய்கள் மற்றும் பிறநோய்களுக்கும் எதிரான போர்க்களமாக இருக்கிறது. இதுதவிர, இயல்பான உடல் செயல்பாடுகளான சுவாசம் அல்லது உடல் செயல்பாடு மற்றும் பிற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் (புகைத்தல்) போன்றவற்றின் மூலம், உடலில்  இருக்கும் ஆரோக்கியமான செல்களைத் தாக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் பொருட்களை உருவாக்குகின்றன. இந்த ஆரோக்கியமான செல்கள் பலவீனமடையும் போது, அவை இருதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு ஆளாகிறோம்.

தக்காளியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் - வைட்டமின்கள் சி மற்றும் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள்,  பீட்டா கரோட்டின், லைகோபீன் மற்றும் லுடீன் ஆகியவை  ஆரோக்கியமான செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இதனால் தக்காளி சில குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக செயலாற்றக்கூடிய சிறப்புகளைப் பெற்றுள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான பண்புகள்

லைகோபீன் ஒரு முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும், இது புற்றுநோய் உயிரணு உருவாக்கம் மற்றும் பிற வகையான சுகாதார சிக்கல்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுகிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை, தக்காளியில் உள்ள அதிக அளவு லைகோபீனைக் கொண்டு வெளியேற்றலாம், மேலும் தக்காளி இருக்கக்கூடிய லைகோபீன்   ஆன்டி-ஆக்ஸிடன்ட்டே அதன் செழிப்பான சிவப்பு நிறத்துக்கும் காரணமாகிறது. இயற்கையாக லைகோபீனை உற்பத்தி செய்துகொள்ளும் திறன் உடலுக்கு கிடையாது. எனவே, புற மூலங்கள் வழியாகத்தான்  இந்த முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்டை பெறவேண்டியிருக்கிறது. அந்த வகையில், மற்ற காய்கறி பழங்களைக் காட்டிலும், தக்காளியில் மட்டுமே அபரிமிதமான லைகோபீன் உள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது.

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள், நுரையீரல், வயிறு, மார்பக, வாய், விதைப்பை மற்றும் மலக்குடல் போன்ற பலவகையான புற்றுநோய்களிலிருந்தும் தப்பிப்பவர்களாக இருக்கிறார்கள். தக்காளியோடு, பூண்டையும் உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் அபாயங்களிலிருந்து விடுவிப்பதில், இன்னும் சிறப்பாக செயல்படும். லைகோபீன் தவிர மற்றும் தக்காளியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பயோஃப்ளவனாய்டுகளும் புற்றுநோய்க்கு எதிராக போரிடும் முகவர்களாக இருக்கின்றன.சமைக்காத தக்காளி மட்டுமல்ல, கெட்ச்அப், சாஸ் போன்ற சமைத்த அல்லது பதப்
படுத்தப்பட்ட தக்காளி பொருட்களும் புற்றுநோய் தடுப்புக்கான நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நல்லது

 தக்காளி உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றும் விளைவைக் கொண்டுள்ளது. தக்காளியில் இருக்கக்
கூடிய, குளோரின் மற்றும் சல்பர் இருப்பது கூட இதற்குக்காரணமாக இருக்கலாம். சில ஆய்வுகளின்படி, 100 கிராம் அளவிலான தக்காளியில் உள்ள 11 மி.கி கந்தகம், நச்சுத்தன்மையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளியில் உள்ள கந்தகம்  கல்லீரல்  பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

சிறந்த எனர்ஜி பானம்

தக்காளிச்சாறு ஒரு நல்ல எனர்ஜி டிரிங்காக வேலை செய்கிறது. இதிலிருக்கும் குறைந்த சீரம் மற்றும் பொட்டாசியம் விளையாட்டு வீரர்கள், உடனடி ஆற்றலை பெறுவதற்கு உதவுகிறது.  தக்காளி சாறில் இருக்கும்  தனித்துவமான  வைட்டமின் சி ஊட்டச்சத்து, கோடையில் வரக்கூடிய வியர்க்குரு, கட்டி போன்றவற்றை  குணப்படுத்த பயன்படுகிறது. சோர்வு மற்றும் மந்தநிலையிலிருந்து உங்களை மீட்டெடுக்க தக்காளி சாற்றை ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸாக பயன்படுத்தலாம்.

இதய ஆரோக்கியம்

லைகோபீன் உள்ள தக்காளி மற்றும் தக்காளி தயாரிப்புகளை எடுத்துக்கொள்வதால்,  இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்பதை மூலிகை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கும் நன்றாக பழுத்த தக்காளியை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம், இதயத்தமனிகள் கடினமாவதைத் தடுக்க முடிவதோடு, ரத்த அழுத்தத்தையும் சீராக பராமரிக்க முடியும்.

மற்றும் இதிலுள்ள பைட்டோஸ்டெரோல்ஸ் மூலப்பொருள் கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, மாரடைப்பு, இதயசெயலிழப்பு போன்ற ஆபத்துக்களிலிருந்து இதயத்தைப் பாதுகாக்கும் அமினோ அமிலமான ஃபோலிக் அமிலம் தக்காளியில் உள்ளது. மேலும், தக்காளியில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதயநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

கண் பாதுகாப்பு

தக்காளி மற்றும் தக்காளி சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்வது, உண்மையில் சீரம் லிப்பிட் ஆக்சிஜனேற்றத்தைத் தடுத்து, பார்வைக்  சிதைவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி  நிரூபிக்கிறது. கண்புரை நோய் என்பது பார்வை குறைபாடு
களில் பொதுவாக காணப்படுவது. மனிதனின் விழித்திரையில் சி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது கண்புரைநோய் வருகிறது. தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலில் வைட்டமின் சி ஐ அதிகரித்து, உடலின் பார்வை மண்டலங்களுக்கு செல்லும் ரத்த சப்ளையை அதிகரிக்க முடியும். இதனால் கண்புரை நோய் வருவதைத் தடுக்கலாம்.

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி

தக்காளி ஒரு ரைபோஃப்ளேவின் சிறந்த ஆதாரமாகும், இது ஒற்றைத் தலைவலி தாக்குதல்களைக் குறைக்க உதவுகிறது.தக்காளியில் மிகுந்திருக்கும் லைகோபின், சில சரும பராமரிப்பு க்ளன்சர்களில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் வீட்டிலேயே இந்த க்ளன்சரை தயாரிக்க முடியும்.  தக்காளியின் தோலை உரித்துவிட்டு, உள்ளே இருக்கும் சதைப்பகுதியை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப்பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறிவிடும்.

தக்காளி பல வகையான புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. தக்காளியில் மிகுந்திருக்கும் லைகோபீன், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கும் பணியைச் செய்வதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. லைகோபீன் ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும், இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்க திறம்பட செயல்படுகிறது. சமைத்த தக்காளி இன்னும் அதிகமான லைகோபீனை உருவாக்குகிறது, நம் நாட்டில் தக்காளி இல்லாத  சமையலே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தில் தக்காளி சூப், ரசம்,தொக்கு, மற்றும் சட்னி ஆகியவை மிகவும் பிரசித்திபெற்றவை.

தக்காளி வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. தக்காளி கணிசமான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் எலும்புகள் மற்றும் எலும்பு திசுக்களில் உண்டாகும் சின்னச்சின்ன பழுதுகளை சரிசெய்யவும், அவற்றை வலுப்படுத்தவும்  அவசியம்.

தக்காளி புகைப்பதால் நுரையீரலில் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது. தக்காளியில் கூமரிக் அமிலம் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் உள்ளன, அவை புற்றுநோயை உருவாக்கக்கூடிய, சிகரெட் புகையிலிருந்து உருவாகும் கார்சினோஜென்களிலிருந்து  உடலைப் பாதுகாப்பதில் வேலை செய்கின்றன.தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. இந்த இரண்டு  வைட்டமின்களோடு, பீட்டா கரோட்டினும் சேர்ந்து, சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்பட்டு ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன. ரத்த ஓட்டத்தில் ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பது ஆபத்தானது.

ஏனெனில் இது உயிரணு சேதத்திற்கு வழிவகுக்கும். நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியில்,  அதிகமான பீட்டா கரோட்டின் உள்ளது. சமைக்கும்போது, வைட்டமின் சி- மற்றும் பீட்டா கரோட்டினை அழித்துவிடும் என்பதால் தக்காளியை பச்சையாக சாப்பிடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்  என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தக்காளி கூந்தல் பராமரிப்புக்கும் நல்லது. தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ தலைமுடியை பளபளப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க சரியாக வேலை செய்கிறது. கூடுதலாக, இது  கண்கள், சருமம், எலும்புகள் மற்றும் பற்களிலும் பல அதிசயங்களை செய்கிறது.

தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ பார்வைத்திறனை மேம்படுத்துகிறது. இரவு நேர குருட்டுத்தன்மையை போக்க தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.நீரிழிவு நோயாளிகளுக்கும் தக்காளி நல்லது. இதிலிருக்கும் மதிப்புவாய்ந்த தாதுப்பொருளான குரோமியம் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.

ஒரு நடுத்தர அளவு தக்காளி 11 கலோரிகளைக் கொண்டுள்ளது, அதன் எடையில் 95 சதவீதம் தண்ணீர் மற்றும் 4 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த அம்சங்கள், அதன் டையூரிடிக் சக்தி மற்றும் சோடியம் உள்ளடக்கம் குறைவாக இருப்பதால், எடை இழப்பு உணவு திட்டம் மற்றும் எடை கட்டுப்பாட்டில் இது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தக்காளி சாப்பிடுவதால், அது  தாய்ப்பாலில் லைகோபீனின் செறிவு அதிகரிக்கும்.  குறிப்பாக இவர்கள் பச்சைத்தக்காளி சாப்பிடுவதைவிட, சமைத்ததே சிறந்தது. தக்காளி சாஸ், சூப், ரசம் போன்ற தக்காளி தயாரிப்புகளை சாப்பிடுவது
லைகோபீனின் செறிவு அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வைட்டமின் சி  மற்றும்  லைகோபீன் உள்ளடக்கம் இருப்பதால் தக்காளியை மதிப்புமிக்க நோயெதிர்ப்பு ஊக்கியாக பயன்படுத்தலாம். குறிப்பாக ஆண்களுக்கு, தக்காளி, காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றைத் தவிர்க்க உதவுகிறது. இந்த பொதுவான நோய்கள், நம் உடலில், லைகோபீன்
மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டு குறைபாடுகளினால் வருவதாக  பரவலாக நம்பப்படுகிறது. தக்காளி பழச்சாறுகள் குடிப்பது சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்க உதவுகிறது.

மனிதனின் தினசரி வைட்டமின் கே  தேவையை 18 சதவீதம் தக்காளி வழங்குகிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் கே எலும்பில் உள்ள முக்கிய கொலாஜன் அல்லாத புரதமான ஆஸ்டியோகால்சினை செயல்படுத்துகிறது. ஆஸ்டியோகால்சின் எலும்புக்குள் கால்சியம் மூலக்கூறுகளை கனிமப்படுத்துகிறது.தக்காளியை அவரவரின் உடல்நிலைக்கு ஏற்ப சமைத்தோ, பச்சையாகவோ தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது பலவிதங்களிலும் நன்மை பயக்கும்.சமையல்கலை நிபுணர் நித்யா நடராஜன் தக்காளி தொக்கு செய்யும் முறையை இங்கே விளக்குகிறார்.

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்

நன்றாக பழுத்த தக்காளி  - 1 கிலோ
பூண்டு  - 10 -  15 பல் (பொடியாக நறுக்கியது)
கடுகு -  தாளிக்க
பெருங்காயத்தூள் -  ¼ டீஸ்பூன்
புளி - 1 (எலுமிச்சை அளவு)
மிளகாய் பொடி  - 1 ½ டேபிள் ஸ்பூன் (காரம் தேவைக்கேற்ப)
மஞ்சள்தூள்  - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை  - 1 கைப்பிடி
வெந்தயம் -  1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

புளியை ஊறவைத்து புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை மேலே உள்ள கடினமான தோல் பகுதியை நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதில் மஞ்சள்தூள், வரமிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளி, பின் அதற்குத் தேவையான புளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து அது பாதியாக சுண்டும் வரை (எண்ணெய் பிரியும் வரை) செய்து இறக்கி நன்கு ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் 2 முதல் 3 வாரம் வரை உபயோகிக்கலாம்.

இந்த தக்காளி சீசனில் விலை குறைவாக இருக்கும்போது இதை செய்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எதனோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.இதைத் தவிர, தக்காளி சூப் அல்லது சாலட்டுகளில் தக்காளி சேர்த்தும் சாப்பிடலாம். சளி, இருமல் தொந்தரவுக்கும் நல்லது.

மகாலட்சுமி