பெண் மைய சினிமா-அடிமைப்பெண்



ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமானது குழந்தைப்பருவம். சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. குழந்தைப்பருவத்தில் நடந்த ஒரு கொடிய நிகழ்வு எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது என்பதை ஆழமாக சித்தரிக்கிறது ‘அடிக்ட்டேட்’ திரைப்படம்.
அதே நேரத்தில் ஒரு விஷயத்துக்கு அடிமையாகி  மனம் போன போக்கில் செல்வதால் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறும் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம். அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் என்ற பெண்மணி எழுதிய நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைக்குள் செல்வோம்.

நல்ல கணவர், இரண்டு குழந்தைகள், மாளிகை போல வீடு என வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள் ஜோ. அவள் வேலைக்குப் போய்த்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் அவள் குடும்பம் இல்லை. இருந்தாலும் சுய விருப்பத்திற்காக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறாள்.

அது கலைஞர்களை ஊக்குவிக்கும் நிறுவனம். இதுபோக இல்லை என்று அவள் ஏக்கம் கொள்வதற்கு எதுவுமில்லை. அத்தனையும் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அத்துடன் கணவனும் குழந்தைகளும் ஜோ மீது மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள். அவளது வீட்டினுள் மகிழ்ச்சி ததும்புகிறது. இருந்தாலும் ஜோவுக்குள் ஏதோ ஒரு போதாமை.

குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் குழந்தைகளுடனும் கூட அவளால் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் கணவனுடனான தாம்பத்யத்தில் கிடைக்கும் திருப்தி அவளுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் எதையோ இழந்ததைப் போல இருக்கிறாள். நாட்கள் வேகமாக நகர்கிறது. வியாபாரம் சம்பந்தமாக ஒரு ஓவியக் கண்காட்சிக்குச் செல்கிறாள். அங்கே இளம் ஓவியன் ஒருவன் அவளுக்கு அறிமுகமாகிறான்.

வாட்ட சாட்டமான அந்த ஓவியனால் ஈர்க்கப்படுகிறாள் ஜோ. முதல் சந்திப்பிலேயே ஓவியன் மீது ஜோவிற்கு காதல் மலர்கிறது. இருவரும் காதல் ததும்ப உரையாடுகின்றனர். குழந்தைகள், கணவர் என குடும்பத்தை மறந்து மனம் போன போக்கில் செல்கிறாள். இரவு நேரங்களில் வெளியே வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு ஓவியனைக் காணச் செல்கிறாள். ஓவியனுடன் படுக்கையையும் பகிர்ந்துகொள்கிறாள்.

ஆரம்பத்தில் இந்த உறவு ஜோவை மகிழ்ச்சிபடுத்துகிறது. நாளடைவில் கணவருக்குத் தெரியாமல் இன்னொருவருடான உறவு ஜோவைக் குற்றவுணர்க்குள் தள்ளுகிறது. அவளின் அமைதி பறிபோகிறது. அலுவலகத்தில் சரியாக இயங்க முடியவில்லை. இருந்தாலும் அவளால் புதுக்காதலனை விட முடியவில்லை. குடும்பம், கணவன், குழந்தைகள் தான் முக்கியம் என்று ஓவியனுடன் பிரேக்-அப் செய்துகொள்ளலாம் என்று முடிவுக்கு வருகிறாள்.

ஆனால், அவனைப் பற்றிய நினைவுகள் ஜோவை அலைக்கழிக்கிறது. திரும்பவும் ஓவியன் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் அங்கே சென்ற நேரம் ஓவியன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கிறான். அதிர்ச்சியடையும் ஜோ நிலைகுலைந்து போகிறாள். இதிலிருந்து விடுபடவும் ஆசுவாசம் அடையவும் இன்னொரு நபரைத் தேடிச் செல்கிறாள். அந்த நபருடனும் படுக்கையை பகிர்ந்துகொள்கிறாள். இடையில் ஓவியன் ஜோவைத் தொந்தரவு செய்கிறான். இவையெல்லாம் எதுவும் ஜோவின் கணவருக்குத் தெரிவதில்லை.

ஒரு நாள் புதிதாக ஜோ சந்தித்து உறவு வைத்துக்கொண்ட நபர், அவளின் வீடு தேடி வந்துவிடுகிறான். அப்போதுதான் தான் அகப்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்கிறாள் ஜோ. இரண்டு காதலர்களிடமிருந்து விலகவும், மீண்டும் கணவனுடன் இணையவும் ஆலோசனை வேண்டி ஒரு மன நல மருத்துவரைச் சந்திக்கிறார். ஆனால், அவரிடம் தனது கடந்த காலத்தைப் பற்றி ஜோ சொல்லாத நிலையிலும், ஜோவை அவர் ‘பாலியல் உணர்வுகளுக்கு அடிமையானவள்’ என்று சொல்கிறார்.

இதற்கிடையில் ஜோவுக்கும் ஓவியனுக்கும் இடையிலான விஷயம் அவளது கணவருக்குத் தெரிய வருகிறது. கணவருடன் ஜோவுக்கு கொஞ்சம் விரிசல் ஏற்படுகிறது. மனமுடைந்து போகிறாள். இதற்கிடையில் அந்த ஓவியன் ஜோவைத் தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான். பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜோவின் வாழ்க்கை என்ன ஆனது? அவள் மீண்டும் கணவனுடன் இணைந்தாளா? என்பதே மீதிக்கதை.

இறுதியில் ஜோ மன நல மருத்துவரிடம் தனக்கு குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த கொடுமையைச் சொல்கிறாள். ஜோவிற்கு பத்து வயதாக இருந்தபோது மூன்று சிறுவர்கள் ஜோவை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். அந்தச் சம்பவம் தான் அவள் பாலியல் உணர்வுக்கு அடிமையானதுக்கு முக்கிய காரணம் என்று மன நல மருத்துவர் சொல்கிறார்.

அதே நேரத்தில் இதிலிருந்து வெளிவந்து இயல்பாக இருக்க முடியும் என்றும் மருத்துவர் சொல்கிறார். இன்றும் ஜோவைப் போல பல பெண்கள் ஏதோவொரு விஷயத்துக்கு அடிமையாகி மனம் போன போக்கில் சென்று தங்களின் வாழ்க்கையை இன்னலுக்கு இட்டுச் செல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்தப் படம் ஒரு பாடம். 2014-இல் வெளியான இப்படத்தின் இயக்குனர் பில்லி வுட்ரப்.

த.சக்திவேல்