கிச்சன் டிப்ஸ்



* சுட்ட எண்ணெயில் கசடு அதிகமாக இருக்கும். மூன்று, நான்கு உருளைக்கிழங்குத் துண்டங்களை அதில் பொரித்தெடுத்தால் எண்ணெய் சுத்தமாகி விடும்.

* மிளகாய்ப்பொடி, தனியா, சீரகம் போன்ற மசாலா சாமான்களை ஒருமுறை நன்கு வறுத்துவிட்டுப் பின்னர் பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

* தோசைக்கல்லை அடுப்பில் போட்டுக் காய்ந்ததும் அப்பளத்தைப் போட்டு ஒரு சுத்தமான துணியைச் சுருட்டிக்கொண்டு அப்பளத்தை ஒத்தி எடுங்கள். இரண்டுபுறமும் இப்படியே செய்தால் கருகாமல் சுட்ட அப்பளம் கிடைக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* தக்காளி சரியாகப் பழுக்காமல், காயாக இருந்தால் ஒரு பாலிதீன் பையில் போட்டு, கட்டி வைத்தால் மறுநாள் நன்றாகப் பழுத்து விடும்.

* ரசம் தயாரிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்தால் ரசம் நல்ல மணமுடனும், ருசியுடனும் இருக்கும்.

* புளிக்குழம்பு செய்தால் 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டுத் தாளித்தால் மணமும், ருசியும் சூப்பராக இருக்கும்.

* காய்ந்துவிட்ட பிரட்டை இட்லி பாத்திரத்தின் ஆவியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் சாஃப்டாகி விடும்.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* ஜாம் தயாரிக்கும்போது கூடவே இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரை தேக்கரண்டி கிளிசரின் சேர்த்தால் அதிகமான அளவு சீனி சேர்க்க வேண்டிய  நிலை ஏற்படாது. ஜாம் கெட்டியாகி விட்டால் அதனை பாத்திரத்தோடு சிறிது நேரம் சுடுநீரில் வைத்திருங்கள். இளகி விடும்.

* வழக்கமாகச் செய்யும் வாழைக்காய் வதக்கல் கறியிலேயே மூன்று பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கிச் சேர்த்து 2 பிடி வெந்த துவரம்பருப்பு, சிறிது தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்குவதற்கு முன் சிறிது கடலை மாவு தூவி புரட்டி விட்டு எடுத்துப் பரிமாறினால் வாழைக்காய் பிடிக்காதவர்கள்கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

* ஜவ்வரிசி வடாம் துகள்கள் இருந்தால் அவற்றைப் பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுடுங்கள். சுவை பிரமாதமாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* அல்வா தயாரிக்கும்போது இறுதியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் அல்வா பக்குவமாக உருப்பெறும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக இருக்கும்.

* தேங்காயைத் துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்துவிடும்.

* இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து, மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

* காய்கறிகள் காய்ந்து போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகளின் தன்மை மாறி புதியதாக இருக்கும்.
- கவிதா சரவணன், ரங்கம்.

* தேங்காயை உடைத்து அடுப்பின் குறைந்த தீயில் தேங்காய் மூடியை நெருப்பில் இரண்டு நிமிடங்கள் சுழற்றி எடுக்கவும். பிறகு கத்தியால் கீறினால் முழுக்கொப்பரையும் அப்படியே ஓட்டை விட்டு வெளியே வந்துவிடும். பிறகு பல் பல்லாக கீரி பலகாரங்களுக்கு உபயோகிக்கலாம்.

* பனீர், சீஸ் துண்டுகள் உபயோகித்து பலகாரம் செய்து முடித்ததும் மீதியுள்ள துண்டுகளின் மீது லேசாக எண்ணெய் தடவி அலுமினிய ஃபாயிலில் சுற்றி வைத்தால் அவை புதிதுபோல இருக்கும்.

* குலோப்ஜாமூன் செய்தவுடன் மீதி இருக்கும் பாகில் எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிது உப்பும் கலந்து வைக்கவும். தேவையான போது ஜூஸ் போல்
சாப்பிடலாம்.
- எஸ். மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

* துருவுவதற்கு முன் ஸ்க்கிரப்பரில் சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும்.

* தோசை மாவில் வெந்தயப்பொடி சேர்த்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
- ந.செண்பகா, திருநெல்வேலி.

* உளுந்து வடைக்கு உளுந்து அரைக்கும்போது அதனுடன் ஒருபிடி முட்டைக்கோஸையும் சேர்த்து அரைத்து வடை சுட்டால் வடை பெரிதாகவும்,
சுவையாகவும் இருக்கும்.
- ரெ.கயல்விழி, தேனி.

* தயிரில் வரமிளகாய் காம்பை கிள்ளிப்போட்டு வைத்தால் தயிர் புளிக்காமலிருக்கும்.

* எலுமிச்சம்பழ ரசத்திற்கு துவரம்பருப்புக்குப் பதிலாக பாசி பருப்புச் சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகமாகயிருக்கும்

* முளைக்கீரை தண்டுகளை வீணாக்காமல், அதை பொடியாக நறுக்கிப் பொரியல் செய்தால் மிகச்சுவையாக இருக்கும்.
- ஆர். கீதா, திருவான்மியூர்.

* எள்ளைப் போட்டு வைக்கும் பாட்டில்களில் சிறிது நெல்லைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

* தேனீர் நல்ல வாசமாக இருக்க ஒரு கோப்பைத் தேனீரில் ஒரு சிட்டிகை சாப்பாட்டு உப்பைச் சேர்க்க வேண்டும்.
- கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை.

வெந்தய இட்லி

தேவையான பொருட்கள்

அரிசி - 2 கப், தேங்காய் - 2 கப்
(துருவியது), வெந்தயம் - 2 டீஸ்பூன், தயிர் - 6 டேபிள்ஸ்பூன், வெல்லம் - 5 டேபிள்ஸ்பூன் (பொடியாக தட்டியது), உப்பு தேவையான அளவு.

செய்முறை

வெந்தய இட்லி செய்வதற்கு முதலில் அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெந்தயத்தைப் போட்டு, அதில் தயிரை ஊற்றி நன்றாக கலந்து ஊற வைக்கவும். மிக்ஸியில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்துள்ள வெந்தயக் கலவையை போட்டு நன்கு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்துள்ள அரிசியை தனியாக அரைத்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் வெல்லத்தை கலந்து, மாவை புளிக்க வைக்கவும். பிறகு மாவில் உப்பு சேர்த்து இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

சரும பிரச்னையை போக்கும் கருஞ்சீரகம்

*கருஞ்சீரகத்தை பொடி செய்து, அதில் ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் சிறிது தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்களை கரைத்து அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.

*கருஞ்சீரகப்பொடியை தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

*கருஞ்சீரகப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது.

*ஜீரண சம்பந்தமான பிரச்னைகளை போக்குவதோடு இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது. மேலும் எலும்புகளுக்குள் இருக்கும்  மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தைப் பெருக்கும்.
- சு.கண்ணகி, வேலூர்.