சிறு தொழில்-டெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்!



‘சுடுமண் நகைகள்’ என்று சொல்லப்படும் டெரகோட்டா நகைகளுக்கு கல்லூரி பெண்கள் மட்டுமல்லாது இளம்பெண்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்புள்ளது. போட்டிருக்கிற டிரெஸ் கலரிலேயே அழகாக, நவநாகரிகமான கம்மல், நெக்லஸ்ன்னு போடலாம் என்பதால் டெரகோட்டா நகைகள் கலக்குகின்றன.

ஒருவருக்கு ஆர்ட் அண்ட் கிராஃப்ட்டில் ஆர்வம் இருந்தால், சிறிய முதலீட்டில் இத்தொழிலை ஆரம்பித்து சூப்பரான லாபம்  ஈட்டும் தொழிலாக செய்யலாம். இத்தொழிலில் கடந்த ஏழு ஆண்டுகளாக அனுபவ முள்ள ஓபு உஷா செந்தில் இத்தொழில் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட பல்வேறு தகவல்கள் இங்கே உங்களுக்காக…

‘‘கல்லிலே கலை வண்ணம் கண்டார்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அதுபோல ஒரு பெண் நினைத்தால் களிமண்ணில்கூட பல கலைப்பொருட்களை உருவாக்க முடியும். ‘‘சேலம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியூர் கிராமம் தான் எனது சொந்த ஊர். அப்பா கைத்தறி நெசவாளி.
பல வகையான வர்ணம் மற்றும் டிசைன்களில் பட்டுப்புடவைகளை உருவாக்குவார். சிறுவயதிலிருந்தே பலவகையான டிசைன்கள் மற்றும் வண்ணங்களை பார்த்து வளர்ந்தேன். கைவினைப் பொருட்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், பெற்றோர்கள் என்னை படிப்பு விஷயத்தை தவிர எதற்கும் அனுமதித்தது கிடையாது.

அதனால் எனது விருப்பத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். ஆனால் இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் கலையை என் தொழிலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் மேலோங்கி இருந்து வந்தது. இதற்கிடையில் படிப்பும் முடிந்தது. அதன் பிறகு எங்க வீட்டில் திருமணம் பேச ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றவருக்கு திருமணத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

‘‘என்னதான் அம்மா வீட்டில் பார்த்து பார்த்து வளர்ந்தாலும், ஒரு பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு முற்றிலும் மாறிடும். என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டது. 2011ம் ஆண்டு குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள் கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்று இருந்தேன்.

அங்குதான் டெரகோட்டாவில் ஜிமிக்கியை பார்த்தேன். ரொம்ப அழகாவும் கலைநயத்துடனும் இருந்தது. விலை கேட்ட போது ரூ.400ன்னு சொன்னாங்க. களிமண்ணால் செய்த பொருள், கீழே விழுந்தால் உடைந்திடும், அதற்கு இவ்வளவு விலையான்னு நினைச்சு வியந்தேன். ஆனால் அதில் உள்ள வேலைப்பாடு அதிகம் என்பதால், அதைக் கற்றுக்ெகாள்ள முடிவு செய்தேன்.

ஆனால் எங்கு எப்படி பயிற்சி எடுக்கணும்ன்னு எனக்கு முதல்ல தெரியல. ஒரு வருடம் கழிந்தது. அந்த சமயத்தில் தான் டெரகோட்டா நகைகளுக்கான பயிற்சி பற்றி தெரிய வந்தது. ஒரு வருடம் காத்திருந்ததால் உடனே பயிற்சி வகுப்பிற்குச் சென்றேன். ஆனால் எனக்கு கற்றுக்கொடுத்தவரோ சிறு குழந்தைகள் செய்யும் Air dey clay என்ற பொருளில் மட்டும்தான் கற்றுக்கொடுத்தார்.

அதனைச் செய்ய தேவையான உபகரணங்கள் பற்றி எதையும் எனக்குச் சொல்லித் தரவில்ைல. இதனால், நான் செய்த நகைகளுக்கும் கடைகளில் விற்கும் நகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது’’ என்றவர் கலை மேல் இருந்த ஆர்வத்தால், அதற்கான சரியான களிமண்ணை தேடி கண்டுபிடித்துள்ளார்.

‘‘பெரிய ஆய்வு மற்றும் தேடலுக்கு பிறகு எனக்கான களிமண்ணை நான் கண்டெடுத்தேன். வடிவமைக்கும் செயல் ஒன்றுதான், ஆனால் அதை செய்யக்கூடிய பொருள் தான் மாறுபடும்’’ என்றவர் களிமண்ணில் நகைகளை வடிவமைக்க ஆரம்பித்துள்ளார். ‘‘அதற்குறிய பொருளில் வடிவமைத்ததால் முழுமையான வடிவம் கிடைத்த போது திருப்தியாக இருந்தது.

ஏனெனில், ஒரு டெரகோட்டா நகையினை அவ்வளவு எளிதில் அழகாக்கிவிட முடியாது. ஒரு நகையினைச் செய்ய குறைந்தது 6 நாட்கள் ஆகும். முதலில் நகையின் வடிவத்தை களிமண்ணில் செதுக்கி அதை நிழலில் உலர்த்தி, வெயிலில் காய வைத்து, பின்னர் தீயில் சுட்டு எடுக்க வேண்டும். அதன்பிறகு தான் அந்த நகைகளின் மீது வண்ணம் தீட்ட முடியும். ஒரு டெரக்கோட்டா நகை அழகாக வருவது சாதாரண விஷயம் கிடையாது.

மனதை ஒருமுகப்படுத்தி எந்த டென்ஷனும் இல்லாமல் செய்ய வேண்டும். சின்னதா ஒரு தப்பு பண்ணினாலும் அதன் முழு அழகும் கெட்டுப்போய் விடும். அதனால் அதில் என்னென்ன புதுமைகள் செய்ய முடியும் என்று பெயிண்டிங் வகுப்புகளுக்குச் சென்று கற்றுக்கொண்டு, அதன் நுணுக்கங்களை நகைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய நகைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

அழகான என் நகைகளை பார்த்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாங்க ஆரம்பித்தார்கள். வெளியேவும் விற்க ஆரம்பிச்சேன். அதற்காக முகநூலில் `D Terracotta’ என்ற பக்கத்தை என் கணவர் செந்தில் உருவாக்கித் தந்தார்.

அதன் மூலம் சென்னை மட்டும் இல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், கர்நாடகா போன்ற இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆர்டர் வர ஆரம்பித்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர் குவிந்தது’’ என்றவர் கஸ்டமர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் நகைகளை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.

‘‘டெரகோட்டா நகைகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அவர்களின் உடைக்கு ஏற்ப வடிவமைத்து தரச் சொல்லிக் கேட்பார்கள். அதற்கு ஏற்ப செய்து வருகிறேன். தற்போது, பிறந்தநாள் நிகழ்ச்சி உள்ளிட்ட பல சுப விசேஷங்களுக்கு டெரகோட்டா நகைகளை ரிட்டர்ன் கிஃப்ட்டாகவும் கேட்கிறார்கள். மேலும் இதனை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறேன். அதனால் என்னிடம் நிறைய பெண்கள் இதை வாங்கி அதை அவர்கள் மற்றவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் என் மூலம் கிடைக்கிறது என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. என்னுடைய நகைகளின் டிசைன்களை இணையத்தில் பார்த்த சின்னத்திரை நடிகைகள் பலர் ஆர்டர் அளித்து வருகிறார்கள்.

சின்னத்திரை நடிகை ரக்சிதா அவர் நடிக்கும் தொடரில் உடைகளுக்கு ஏற்ப வடிவமைத்து தருகிறேன். அவரை தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர் மஹதி, சின்னத்திரை நடிகைகள் நீலிமா, ஸ்வேதா, உஷா, நிஷா கணேஷ், பவித்ரா ஜனனி, ஸ்ருதி சண்முகப்பிரியா, திகா போன்றவர்களுக்கும் வடிவமைத்துத் தருகிறேன்.

முதலில் நான் மட்டுமே செய்துகொண்டிருந்தேன். தற்போது பல ஊர்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் ஆர்டர் வருவதால், தனி ஒரு ஆளாக என்னால் இயங்க முடியவில்லை. அதனால் நான்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து நியமித்து இருக்கேன். திருமணத்திற்கு முன்பு என்னை பாதுகாப்பாக நடத்துவதாகக் கருதி அவங்க என்னை எதற்குமே அனுமதித்தது இல்லை.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு எனது குடும்பத்திலுள்ள அனைவரும் என்னுள் இருந்த திறமையைப் பார்த்து உன்னால் முடியும், நீ கண்டிப்பாக இந்தத் துறையில் மிகப்பெரிய சாதனை செய்வாய் என்று ஊக்குவித்ததால் இன்றைக்கு இந்த அளவில் வளர்ந்து நிற்கிறேன். எனது மாமியார் எனக்கு சொல்லும் ஒரே அறிவுரை ‘‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’’ என்ற பழமொழி தான். நான் இந்தத் தொழிலுக்கு செய்த முதலீடு ரூ.10,000. தற்போது வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறேன்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை. சோதனைகளையும் சாதனைக்கான படிக்கட்டுகளாக மாற்றத் துடிக்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்தே செய்வதற்கு சிறந்த தொழில் இந்த டெரகோட்டா நகைகள். விற்பனை மட்டும் இல்லாமல் பயிற்சியும் அளித்து வருகிறேன். என்னிடம் கற்றவர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே அவர்களுக்கான ஒரு வருமானத்தை சம்பாதித்து வருகிறார்கள்’’ என்றவர் India Bussiness Award 2018 - ``Best Terracotta Pottery & Desinger Article” Collection என்ற விருதைப் பெற்றுள்ளார்.