ஒரு லட்சம் புத்தகங்கள்!“உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக
உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்”
-கவிஞர் லாங்ஃபெலோ

எப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவதும், எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை நமக்கு எடுத்து விளக்குபவையும், எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவையும் புத்தகங்கள்.

“காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற சான்றோர்களின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. இவ்வாறு மனிதனின் வாழ்வில் மிகப்பெரும் பங்காற்றி வரும் புத்தகங்களின் சிறப்பினை அடுக்கிக் கொண்டே போகலாம்.  

இப்படிப்பட்ட புத்தகங்கள் பற்றி, மாணவர்களுக்குப் படிக்கும் போதே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எங்குத் தேடியும் தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பவர்களுக்காகவும், நூலகத்துறையின் சார்பில் செயல்படும் நூலகத்தின் பயன் பாட்டிற்காகவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

“பொறியியல், தொழிற்கல்வி, ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருடைய கல்வி மேம்பாட்டிற்கு இந்த புத்தகக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது” என்கிறார் இப்புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்திருக்கும் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி.

இது குறித்துக் கூறுகையில், “இப்பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெரும்பாலான புத்தக வாசிப்பு ஆர்வமுள்ள வாசகர்கள் புத்தகக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி பயன் பெற இக்கண்காட்சி மூலமாக அரிய வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளைச் சார்ந்த இயக்குநர்கள், பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இப்புத்தகக் கண்காட்சியினை கண்டு பல்கலைக்கழக நூலகத்திற்குத் தேவையான, அவசியமான புத்தகங்களைப் பரிந்துரை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் இக்கண்காட்சியினை அண்ணாப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்காக நிகழ்த்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-30 தேதிகளில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 55 ஸ்டால்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

அன்னம் அரசு

ஜி.சிவக்குமார்