முத்துப்பல் சிரிப்பல்லவோ



பல் பாதுகாப்பு குறித்து பெருமளவில் நாம் யாரும் யோசிப்பதே இல்லை. சருமத்திற்கும், தலைமுடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் பற்களுக்கு கொடுப்பதில்லை. காலையில் எழுந்து பல் துலக்குவதோடு அதன் பராமரிப்பு முடிந்துவிடுகிறது என்று எண்ணுகிறோம்.
இத்தகைய அலட்சியத்தாலே பல் சொத்தை, பல் வலி என பல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. விளைவு தாங்க முடியாத வலியை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது. பெரும்பாலும் வலி வந்த பிறகே மருத்துவர்களை நாடுகிறோம். பற்களை எப்படி பாதுகாப்பது? பல் சொத்தை உள்ளவர்கள் என்ன மாதிரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் பல் மருத்துவர் டாக்டர் விவேக் நாராயணன்.

‘‘பற்களை பாதுகாப்பதில் நாம் எந்த அளவிற்கு ஈடுபாடாக இருக்கிறோம் என்பது இங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. நாம் எந்த வகையான டூத் பேஸ்ட் பயன்படுத்துகிறோம்... அது ஆரோக்கியமானதா என்று யோசிப்பதே இல்லை. விளம்பரத்தை பார்த்து எல்லா வகையான டூத் பேஸ்ட்டுகளையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மருத்துவரை ஆலோசித்துஅவரவர் பற்களின் தன்மையை பொருத்து டூத் பேஸ்ட்டு பயன்படுத்துவதே எப்போதும் நல்லது.

பல் கூச்சம் உள்ளவர்கள் அதற்கான டூத் பேஸ்ட்டை வாங்கிப் பயன்படுத்துதல் வேண்டும். விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகளுக்குக்கூட தேவையற்ற டூத் பேஸ்ட்டுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். அது நாளடைவில் குழந்தைகளின் பற்களில் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. குழந்தைகளுக்கென்று விற்கப்படும் டூத் பேஸ்ட்டுகளை பார்த்து வாங்கி பயன்படுத்துதல் வேண்டும்.

பல் முளைக்கும் தருவாயில் இருக்கும் குழந்தைகள் சிலருக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், பால் கொடுத்தபின் வெதுவெதுப்பான நீரில் மிருதுவான காட்டன் துணியை நனைத்து, குழந்தைகளின் தாடைகளை சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பால் கட்டியாகி பற்களின் வேர்களிலே நின்று விடும்.

விளைவு இதுவே குழந்தைகளுக்கு சீக்கிரமாக சொத்தை பல் ஏற்பட காரணமாக அமைகிறது. சொத்தையான பல் விழுந்து மீண்டும் வளரக்கூடியது தானே என நினைத்து, பெற்றோர்கள் கவனக் குறைவாக செயல்பட்டால், சொத்தை வேர் வரை சென்று இளம் வயதிலேயே வேரின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதன் மீது வளரும் பற்கள் வலுவாக இல்லாமல் வலியை ஏற்படுத்துவதோடு, விரைவிலேயே ஆடத் தொடங்குகிறது.

வலி வந்த பிறகு மருத்துவர்களை நாடுபவர்கள், வலிக்கான வேர்களை பற்றி யோசிப்பதே இல்லை. பெரும்பாலும் பல் சொத்தை பிரச்சனை உள்ளவர்கள் ரூட் கெனால் சிகிச்சைதான் தீர்வு என நினைக்கிறார்கள். உண்மையில் அது தீர்வு இல்லை. சொத்தைப் பல் உள்ளவர்கள் அதனுடைய பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்று முதலில் பார்க்க வேண்டும்.

சாதாரணமாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு நவீன முறை சிகிச்சைகள் தற்போது இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளலாம். பல் சொத்தையின் தன்மை அதிகரித்து வேர்வரை பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் மட்டுமே ரூட் கெனால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரூட் கெனால் சிகிச்சை பெற்றவர்கள் டூத் கேப் போடுவது மிகவும் அவசியம். பெரும்பாலும் ரூட் கெனால் சிகிச்சைக்கு பதிலாக பாதிக்கப்பட்ட பல்லை எடுத்துவிட்டு பக்கத்தில் இருக்கும் பல்லின் துணையோடு வேறு பல் பொருத்துவதுதான் சிறந்த முறையாகும். அது வாழ்நாள் வரை அவர்களுக்கு எந்த பிரச்சனையும்ஏற்படுத்தாது.

ரூட் கெனால் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், சிகிச்சை முடிந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பல் நிலையாகும் வரை பல் கூச்சத்தை ஏற்படுத்தும் உணவுகளையும், கடினமான உணவுகளையும் தவிர்த்து மிருதுவான மென்மையான உணவுகளை உண்ணுதல் வேண்டும்.

தினமும் காலை மற்றும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு என, இரண்டு வேளையும் பல் துலக்குதல் முக்கியம். வாரத்தில் மூன்று நாட்களுக்கு இதமான சுடுநீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தல் அதை விட சிறந்தது. இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது பற்களில் இருக்கும் கிருமிகள் அழிந்து பற்கள் நீண்ட நாட்கள் பார்க்க பளிச்சென்று தெரிவதோடு, முத்துப்பல் சிரிப்பல்லவோ எனச் சொல்லாமல் சொல்லும்.’’

மகேஸ்வரி நாகராஜன்