என்ன செய்வது தோழி? அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்



அன்புத் தோழி, எல்லா பெண்களைப் போன்று எனக்கும் திருமண வாழ்க்கை குறித்த கனவுகள் இருந்தன. கல்லூரி முடித்ததும் கல்யாணம். என் எதிர்பார்ப்புகள் பொய்யாகவில்லை. என் கனவு வாழ்க்கை நிஜமானது. அன்பான கணவர். மாமியார் வீடும் இன்னொரு தாய் வீடாக இருந்தது. எனக்கு 12, 16 வயதில் இரண்டு பிள்ளைகள். பள்ளியில் படிக்கிறார்கள். எனக்கு வயது 38.

யார் கண்பட்டதோ... நிம்மதியாக போய் கொண்டிருந்த வாழ்க்கை திசை மாறிவிட்டது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு குடிப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அது கூட அவர் அம்மா, அப்பா இருக்கும் வரை எனக்கு தெரியாது. அவரும் காட்டிக் கொண்டதில்லை. அவர்கள் இறந்த ஓரிரு மாதத்தில் அடிக்கடி குடித்து விட்டு வருவார்.

கேட்டால் ‘ஆபீஸ்ல பார்ட்டி... ஃபிரண்டுங்க கட்டாயபடுத்துனாங்க’ என்பார். அன்பாக அறிவுரை சொல்வேன் கேட்டுக் கொள்வார். அடுத்த சில நாட்கள் இயல்பாக போகும். நானும் சரியாகி விட்டார் என்று நினைப்பேன்.  ஆனால் மீண்டும் ஆரம்பித்து விடுவார்.  வாரத்துக்கு 2, 3 நாட்கள் என்று இருந்தது தினசரியானது.

ஆரம்பத்தில் குடித்து விட்டு வந்தால் அமைதியாக ேபாய் படுத்துக்கொள்வார். நாம் பேசினாலும் அமைதியாக இருப்பார். ஆனால் ஒருகட்டத்தில் ரகளை செய்ய ஆரம்பித்தார். ‘அப்படித்தான் குடிப்பேன்’ என்று அடிக்க வருவார். அடித்து உதைக்கவும் ஆரம்பித்தார். நான் மட்டுமல்ல பிள்ளைகளும் அவரை பார்க்க அஞ்சுவார்கள்.

இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, எங்கள் இருவரின் இல்லற வாழ்க்கையும் இல்லாமல் போனது. வீட்டுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை. ஒருகட்டத்தில் குடும்பம் நடத்துவது, பிள்ளைகளுக்கு பணம் கட்டுவது எல்லாம் சிரமமாகி விட்டது. அதனால் கடந்த 2 ஆண்டுகளாக நானும் வேலைக்கு செல்கிறேன்.

இப்போது அதுவும் பிரச்னை.  ‘யாரை பார்க்க இப்படி மினுக்கிட்டு போறே’னு காலையில் ஆரம்பிக்கிற சண்டை ‘யார் கூட படுத்துட்டு
வர்றே’னு இரவில் முடியும்.  யார் கூட பேசினாலும் சந்தேகப்படுகிறார். சண்டைப் போடுகிறார். தினமும் சந்தேகமாகவும்,
சண்டையாகவும் போகிறது. இப்போதெல்லாம் ‘உண்மையாக இருந்தும் இவர் நம்பவில்லையே’ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

சில நாட்களாக என்னுடன் வேலை செய்யும் ஒருவரை மனம் விரும்புகிறது. அவர் என்னிடம் ஆறுதலாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்கிறார். அவரும் என்னை விரும்புகிறார். இருவரும் சொல்லிக் கொண்டதில்லை. அவரும் திருமணமானவர்தான். ஆனாலும் மனதுக்கு அது தடையாக இல்லை. நாங்கள் புதிய வாழ்க்கை அமைத்துக் கொள்ள போவதில்லை.  இதுவரை நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக பேசிக் கொள்வதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை.

ஆனால் இந்த விருப்பத்தால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா? என் பிள்ளைகளுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? கூடவே என் பெற்றோருக்கு தெரிந்தால் என்னவாகும்? என்ற பயமும் இருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் போதுதான் இந்த பயமெல்லாம் வருகின்றன. ஆனால் அலுவலகத்தில் அவரை பார்த்ததும் கணவர், பிள்ளைகள் எல்லாம் மறந்து போகிறது. அதுவே எனக்கு நிம்மதியை குலைத்து விட்டது. தூக்கமில்லாத இரவுகள் தொடர்கதையாகி விட்டன. திசை தெரியாமல் தவிக்கிறேன்.  

என்ன செய்வது எனக்கு வழிச் சொல்லுங்கள்?

இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

அன்பான குடும்பம், அழகான வாழ்க்கை சீரழிந்த வேதனை, வலிகளுக்கு  காரணம்  கணவரின் குடிப்பழக்கம்தான் என்று புரிகிறது. அவரது குடிப்பழக்கத்தை சரி செய்ய ஆரம்பத்திலேயே முயன்று இருக்கலாம். அப்படி செய்திருந்தால் அந்த பிரச்னை உங்கள் வாழ்க்கையை திசை மாற்றியிருக்காது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை.  அவருக்கு சிகிச்சை அவசியம்.  அதற்கான சிகிச்சை மையங்கள் மூலம் அவரை குணப்படுத்த முயற்சிக்கலாம்.

இனியாவது முடிந்தால்  அவரை மனநல மருத்துவரிடமோ, ஆலோசகரிடமோ அழைத்துச் செல்லுங்கள். தீராத சந்தேகம் மனநோயின் அடையாளம்.  அதனை சரி செய்ய முயற்சிப்பது அவசியம். தொடர்ந்து  குடிப்பதால் அவரது உடல்நிலையில்  ஏதாவது பாதித்திருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது கட்டாயம்.

அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும், சிகிச்ைசக்கு உட்படுத்தவும் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதில் வெற்றிப் பெற்றுவிட்டால் உங்கள் கேள்விகளுக்கு அவசியம் இருக்காது.கூடவே உங்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். ஆறுதல் தேடிதான் அலுவலக நண்பரிடம் பேச ஆரம்பித்து இருக்கிறீர்கள். நீங்கள் வேறு எதையும் அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்பது புரிகிறது. அளவற்று கிடைத்து வந்த அன்பு திடீரென கிடைக்காமல் போனால், மனம் அதைத் தேடி அலைபாய்வது இயல்பு.

ஆனால் அதையும் மீறி, ‘அவரை பார்த்ததும் கணவர், பிள்ளைகள் என எல்லாம் மறந்து போகிறது’ என்பதெல்லாம் கவனிக்க வேண்டிய அறிகுறி. அது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்னைகளுக்கு தலைகுனியும் சூழல்தான் இன்று சமூகத்தில் உள்ளது. அதை விட முக்கிய பிரச்னை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தவறான முன்னுதாரணம் ஆகி விடுவீர்கள்.

உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் ஈர்ப்பு, அலுவலக  நண்பரின் குடும்பத்தையும் பாதிக்கும். பக்கத்தில் இருந்தும் உங்கள் கணவரால் எந்த பலனும் இல்லாமல் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தவிக்கிறீர்கள். கணவரே இல்லாமல் போனால் அவரின் மனைவியும், பிள்ளைகளும் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதையும் யோசியுங்கள்.

அவர் திருமணம் ஆகாதவராக அல்லது தனித்து வாழ்பவராக இருந்து… நீங்களும் தனித்து வாழ்பவராக இருந்தால் திருமணம் மூலம் ஆறுதல் தேடுவது நியாயமாக இருக்கும். அதுவும் உங்கள் பிள்ளைகள் அவர் ஏற்றால், உங்கள் பிள்ளைகள் அவரை ஒத்துக் கொண்டால் சரி.  ஆனால் ஒரு குடும்பத்தை பிரித்து மகிழ்ச்சியை தேடும் ஆளில்லை நீங்கள். கணவர் இருந்தும் இல்லாத சூழலின் வலியும் வேதனையும் உணர்ந்தவர் நீங்கள்.

எனவே ஆண்-பெண் நட்பு தவறில்லை. ஆனால் அது அடுத்தக் கட்டத்துக்கு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி முடியும் என்றால், அவரும் நட்புடன் மட்டும் இருப்பார் என்றால் அந்த  நட்பை தொடரலாம். அவரின் ஆறுதல் வார்த்தைகளை அனுமதிக்கலாம்.
இல்லாவிட்டால் தவிர்ப்பது மிக நல்லது.

முடியாவிட்டால் வேறு வேலைக்கு மாற முயற்சிக்கலாம். உங்கள் கணவரை எப்படி சிகிச்சைக்கு உட்படுத்துவது என்பது குறித்தும்,  உங்கள் பிரச்னைகளை சொல்லி வழி காணவும் முதலில் நீங்கள் ஒரு மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகுங்கள். கட்டாயம் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கவலை வேண்டாம்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...