50லும் வாழ்க்கை இருக்கு!...ஐம்பதுகளை தொடும் பல பெண்கள், வாழ்க்கையில் ஒருவிதமான வெறுமையையும் வெற்றிடத்தையும் சந்திக்கின்றனர். இந்த வயதில்தான் பிள்ளைகள் வளர்ந்து படிப்பு, வேலை, கல்யாணம் என தங்கள் கூடுகளை விட்டு பறந்து அவர்களுக்கென தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, ஐம்பதுகளில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் கூட பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதைப் பற்றி ஆழமாக புரிந்துகொள்ள, பிரபலமான உளவியல் ஆலோசகர் அபிலாஷாவை சந்தித்து விளக்கம் கேட்டோம்.

‘‘பெண்களுக்கு ஐம்பதுகளில் தான் உடல் உபாதைகள் வர ஆரம்பிக்கும். மெனோபாஸ் என்னும் மாதவிடாய் முடியும் காலமும் நெருங்கும். இதனால் அதிகமாக எரிச்சலுடனும் கோபத்துடனும் இருப்பார்கள். மனச்சோர்வும் மன அழுத்தமும் அதிகரிக்கும். மூட் ஸ்விங்ஸ், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளும் வரும். இது எல்லாம் சேர்ந்து 50 வயதை தாண்டும் பெண்ணின் மனதில் வெறுப்பும் பயமும் தொற்றிக் கொள்ளும். உடல் ரீதியான பிரச்சனைகள் என்று எடுத்துக்கொண்டால்... அதில் மிகவும் முக்கியமானது மெனோபாஸ். தூக்கமின்மை, எலும்புகள், முட்டிகளில் வலி, உடல் சோர்வு, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அடுத்து வயதாவதால் ஏற்படும் உடல் தளர்ச்சி, நடுக்கம், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், மறதி போன்ற உபாதைகள். இது அத்தனைக்கும் தீர்வு சரியான உணவும் உடற்பயிற்சியும்தான்.   

பள்ளி படிக்கும் போது பி.டி கிளாஸில் விளையாடியதோடு சரி, கல்லூரியில் கூட சில பெண்கள் ஸ்போர்ட்ஸில் இருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். உடல் பயிற்சியை வாரத்திற்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை என இல்லாமல், உணவை தினமும் உண்பதுபோல், உடற்பயிற்சியும் தினமும் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை எனக் குறை கூறாமல், தினம் 20 நிமிடம் நடக்கலாம். காய்கறிகள் வாங்க வெளியில் போகும் போது, உங்கள் தெருவை விட்டு பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்குச் சென்று வாங்கி வரலாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அன்றாட பழக்கங்களில் உடல் பயிற்சியையும் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும். நோய் வந்த பின் மருத்துவமனைக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவிடுவதை விட, தினமும் சத்தான உணவினை சாப்பிட வேண்டும். மரபணு வியாதிகளின் அறிகுறிகள் இருந்தால், அதை முன்னரே அறிந்து, அதற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு பழக்கங்களை நடைமுறைப்படுத்தி, ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம். முடிந்த வரையில் வீட்டிலேயே அடைந்து கிடக்காமல், தினமும் வெளியில் சென்று வர வேண்டும். இதை பழக்கமாக்கிக் கொண்டால் பல உடல் உபாதைகளை தடுக்கலாம்.  

இரண்டாவது உளவியல் ரீதியான சிக்கல்கள். பெண்கள் பலர் இன்றும் ஆண்கள் சார்ந்தே இருக்கின்றனர். தந்தை, அண்ணன், கணவர், மகன் என பெண்ணை சுற்றி எப்போதுமே ஆணின் துணை இருந்திருக்கிறது. ஐம்பதை கடக்கும் போதுதான், யாருக்காக வாழ்கிறோம், நமக்காக ஏன் வாழவில்லை போன்ற கேள்விகள் எழும். அதற்கான பதில் ஏமாற்றங்களே மிஞ்சும். தான் யாருக்கும் உதவியாய் இல்லை, எவரும் தன்னை கண்டுகொள்வதில்லை போன்ற எண்ணங்கள் மேலோங்கும். இதற்கு “Emptiness Syndrome” என்று மருத்துவமுறையில் கூறுவோம். அதாவது, கடமைகள் முடிந்து போனதும் துக்கமும், தனிமையும் தோன்றி பாடுபடுத்தும். அதன் வெளிப்பாடுதான் இது. இதை மருந்துகள் கொண்டு சரி செய்ய முடியாது, வழக்கமாக செய்து வரும் பழக்கங்களை மாற்றிக்கொண்டு, மனதை அமைதிப்படுத்த வேண்டும்’’ என்றவர் இந்த வயதில் தான் நமக்கு பிடிச்ச வேலைகளை செய்ய வேண்டும் என்றார்.‘‘நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களை நேரமில்லை என்ற ஒரே காரணத்தால் ஒன்று தள்ளி போட்டு இருப்போம் அல்லது நிராகரித்து இருப்போம்.

அந்த வேலைகளை எல்லாம் இப்போது தேடிப் பிடித்து செய்ய ஆரம்பியுங்கள். முதலில் பொறுமையாக பட்டியல் இடுங்கள். இந்த வயதில் நேரம், பணம், ஆரோக்கியம் மூன்றுமே இருக்கும். அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு மேல் உங்கள் ஆசைகளை காலங்கடத்தினால், ஆரோக்கியம் போய்விடும். பள்ளி, கல்லுரி களில் ஒன்றாக படித்த நண்பர்களை தேடிப்பிடித்து சந்தியுங்கள். உங்கள் உறவை மறுபடியும் புதுப்பித்துக் கொண்டு தொடர்பில் இருங்கள். பயணம் செய்யுங்கள், அதுவும் மகன் வீடு, மகள் வீடு என்று இல்லாமல், சுற்றுலா செல்லுங்கள். முடிந்தவரையில் இளைஞர்களுடன் பழகுங்கள், அவர்களின் துடிப்பு, நமக்கு உற்சாகம் தரும்.   மூன்றாவதாக பணம். ஐம்பது வயதுக்கு மேல் என்ன செலவு இருக்கப் போகிறது, பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று பொருள் ரீதியான திட்டம் போடாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. இந்த வயதில் தான் பணம் மிக முக்கியம். பணம் முழுக்க குழந்தைகளுக்காக செலவு செய்துவிட்டு முதுமையில் வறுமையில் வாடும் நிலமை கொடுமையானது. கிடைக்கும் குறைந்தபட்ச வருமானத்தையும் பிள்ளைகளுக்காக செலவு செய்துவிடுகின்றனர். எப்போதும் ஒரு சிறிய பங்கை தனக்கென சேர்த்து வைப்பது மிக முக்கியம்.

குழந்தைகள் வளர்ந்து அவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள், அதுக்கு பக்க பலமாக நின்று, அனுபவங்கள் மூலம் ஆலோசனை வழங்கினாலே போதும். அவர்கள் வாழ்க்கையை கையில் எடுத்துக்கொண்டு நீங்கள் வாழ வேண்டாம். 50களில் தான் மரணத்தின் பயம் நம்மை தொற்றிக் கொள்ளும். இதை “Death Phobia” என்று சொல்லுவோம். ஐம்பது வயதை தொடுபவர்களுக்கு, தங்கள் மரணத்தைவிட, கணவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலையே அதிகம் இருக்கும். ஐம்பது வயதில் மரணத்தைக்கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. அதற்கு நேரம் இருக்கு, இது சந்தோஷமாக இருக்க வேண்டிய கோல்டன் டேஸ். ஐம்பது வயதை கடந்தவர்களுக்கு தேவை ஒரு ‘காது’ தான். அவர்கள் சொல்வதை நாம் செவி கொடுத்து கேட்டாளே போதும். பெண்களின் மெனோபாஸ் நேரங்களில் அவர்களை அனுசரித்து போக வேண்டும்.

இது இரண்டு ஆண்டுகள் தொடரலாம். Perimenopausal. Menopause, Postmenopause என அவர்கள் சில நிலைகளை கடந்த பின், மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி ஆரோக்கியமாக குடும்பத்தை கவனிப்பார்கள். ஆனால் அதற்கு முன் இந்த மெனோபாஸ் நேரங்களில் அவர்களை கவனித்து பழைய நிலைக்கு திரும்ப குடும்பம் பக்க துணையாக இருக்க வேண்டும். “உங்களுக்கு வயதாகிவிட்டது. வெளியே போக வேண்டாம்” என்று பெரியவர்களை தடுக்க வேண்டாம். அவர்கள் அன்றாடம் விரும்பி செய்கிற வேலைகளை தொடர்ந்து செய்யட்டும். ‘‘உதவி வேண்டும் என்றால் கேளுங்கள். பத்திரமாக இருங்கள்” என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக இருந்தாலே போதும். ஐம்பது வயதை மகிழ்ச்சியாக வரவேற்க எப்போதும் அப்டேட்டா இருங்க. செல்போன், கம்ப்யூட்டர், மால், ஹோட்டல் என எல்லா விஷயத்தையும் ஒரு கை பாருங்க. வாட்ஸ் அப் - ஃபேமிலி குரூப்பில் சேர்ந்து உங்கள் பேரன், பேத்தியின் கலாட்டாக்களை ரசியுங்கள். உலகம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. அதனோடு சேர்ந்து ஓட முடியாவிட்டாலும், பின்னாடி நடந்தாவது செல்லுங்கள்.

“Pet Therapy” மன நிம்மதி தரும். உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணி ஏதாவது வளர்க்கலாம். அதனோடு பேசி பழகி புதியதாய் இன்பமாய் வாழலாம். பணத்தேவை ஏற்பட்டால், அதை எந்த தயக்கமுமின்றி பிள்ளைகளிடம் கேளுங்கள். வாய்விட்டு கேட்பதில் எந்த தயக்கமும் வேண்டாம். கொஞ்சம் நம்பிக்கையுடன் மருமகளை புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து வாழுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிடித்த உடை அணிந்து, சுற்றுலா தளம் சென்று வாருங்கள். உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இந்த வயதில் கிடையாது. சேர்த்து வைத்த பொருளை இப்போதாவது உங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஐம்பது வயதை தொடுவதே ஒரு வரம்தான். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த கம்பீரமான வயதை அனைவரையும் கூட்டி கொண்டாடுங்கள்” என்றார் மனநல ஆலோசகரான அபிலாஷா. என்னதான் கலாச்சாரம், பண்பு என மற்ற நாடுகளில் இருந்து நம்மை முன் நிறுத்திக் கொண்டாலும், Global AgeWatch Index 2015 நடத்திய, முதியோர்கள் வாழ சிறந்த நாடுகள் என்ற ஆய்வு பட்டியலில் இந்தியா வகிக்கும் இடத்தை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

இந்தியா 71 ஆம் இடத்தில் உள்ளது. பல நாடுகள் “சீனியர் சிட்டிஸன் ஃப்ரெண்ட்லி”யாக இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள  ‘மால்’ களில் பெரியவர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் உணவகங்கள் 50% சலுகைகளை முதி யோருக்கு அளிக்கின்றன. சீனாவில் பெரியவர்களை இளைஞர்கள் மதிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அவர்கள் பெற்றோரை பார்க்க பிரத்யேகமாக விடுமுறை அளிக்கிறது. மருத்துவமனை வசதிகளும் சலுகைகளும் மட்டும் இல்லாமல், ஸ்காட்லாந்தில் இவர்களுக் கான முன்னெச்சரிக்கை தீர்மானங்கள் உள்ளன. இப்படி பல நாடுகளில் பெரியவர்களை கொண்டாடுகிறார்கள். நம்மால் சமூகத்தை பெரிதாக மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நாம் ஒவ்வொருவரும் குடும்பத் தில் இருக்கும் முதியவர்களை கொண்டாடி அனுசரித்தாலே போதும். அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.’’  

-ஸ்வேதா கண்ணன்

தோழி அந்தரங்கம்

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதிலும்  ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம். இந்நிலை இனி வேண்டாம். ‘அந்தரங்க’ பிரச்னையை நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்.நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம் விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம் தோழி’ உங்கள் இரு கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறாள்.
அச்சம்  வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள். காப்பாற்றி கரை சேர்ப்பாள். பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும் உங்களை விடுவிக்க காத்திருக்கிறாள். தயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. தேவை பிரச்னைக்கு தீர்வு தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி காத்திருக்கிறாள்!