வலிகளே எனது வழிகாட்டி!



சமூக வலைத்தளம், இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை கையாளும் முறையில் தான் இருக்கிறது ஒவ்வொருவரின் வெற்றியும். அப்படி வெகுஜன மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பக்கத்தை கருவியாகக் கொண்டு ஆடை விற்பனையில் சாதித்திருக்கிறார் சென்னையை சேர்ந்த சண்முகப்பிரியா.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்தாலும் கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதில் உறுதியாக இருந்த சண்முகப்பிரியா M.S.W Hr பட்டப்படிப்பு படித்திருக்கிறார். படித்து முடித்த கையோடு வேலைக்கு சென்றவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்தான் தற்போது அவர் நடத்திக் கொண்டிருக்கும் “யுனீக் த்ரெட்ஸ்” (Unique Threads) ஆடை நிறுவனம்.

“என்னுடைய சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம். அப்பா சாதாரண கார்பெண்டர் வேலை செய்பவர். ரொம்ப கஷ்டப்பட்டுதான் அப்பா எங்களை படிக்க வைத்தார். படித்தது எல்லாம் சென்னையில் தான். படித்து முடித்தவுடனே எனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கொஞ்ச நாள் வேலைக்கு சென்று வந்தேன்.

படித்து முடித்துவிட்டதால் வீட்டில் திருமணம் பார்த்து முடிச்சாங்க. திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு போவதை நான் விடவில்லை. தொடர்ந்து வந்தேன். என்னுடைய கணவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவருடைய வாழ்க்கையும் சில காலம் தனியார் நிறுவனத்தின் சம்பளத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது...” நன்றாக சென்று கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் அதன் பிறகு தான் வலிகளை சந்திக்கத் தொடங்கி இருக்கிறார்.

“எங்களுக்கு முதல் குழந்தை பிறந்த சமயத்தில் என் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. குழந்தை பிறந்த 15 நாளில் குழந்தைக்கு கை எலும்பு உடைந்திருந்தது தெரியவந்தது.

இப்படி தொடர்ச்சியாக வாழ்க்கையில் பல சோதனைகள் வந்துகொண்டே இருந்தது. என் கணவரோ வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்றிடுவார். அதனால் என்னால் தொடர்ந்து வேலைக்கு போக முடியாமல் போனது. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு வீட்டில் இருந்து குழந்தையையும், மாமியாரையும் கவனித்து வந்தேன்.

குழந்தை பிறந்து 3வது மாதம் மாமியார் இறந்து விட்டார். அது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. சில நாட்கள் குழந்தையும் நானும் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டிய சூழல். ஓடிக்கொண்டே இருந்தவள் ஒரே இடத்தில் முடங்கியது வெறுமையை ஏற்படுத்தியது.

என் மாமியார் சைக்கிளில் புடவைகளை வியாபாரம் செய்துதான் என் கணவரையும், உடன் பிறந்தவர்களையும் படிக்க வைத்தார் என்று என் கணவர் அடிக்கடி சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். அந்த வார்த்தைதான் என் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கு காரணமாக இருக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது. வீட்டில் வேலைக்கு செல்லாமல் இருப்பது எனக்குள் ஒரு விரக்தியை ஏற்படுத்தியது.

அதே சமயம் குழந்தையை ேடகேரில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லவும் மனமில்லை. வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் என் மாமியாரின் வார்த்தைகள் என் மண்டையில் சம்மட்டி அடித்தது போல் ஒலித்தது’’ என்றவர் ஆடை நிறுவனம் துவங்கியதன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

“என் மாமியார் செய்து வந்த ஆடை வியாபாரத்தை நான் ஏன் செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. முதல்ல துணிக்கடை போடலாம்ன்னு முடிவு செய்தேன். சித்தப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். அவரோ ‘வேலைக்கு  போனா குழந்தையை பார்த்துக்க முடியாதுன்னு தான் வேலையை விட்டுட்டு இருக்க. கடை ஆரம்பிச்சாலும் உன்னால குழந்தைய எப்படி பார்த்துக்க முடியும்’’ன்னு கேட்டார். என்ன இருந்தாலும் என் மாமியார் செய்த துணி வியாபாரத்தை எப்படியாவது நான் எடுத்து நடத்தணும்ன்னு முடிவு செய்தேன்.

சென்னை பாரிசில் இருக்கும் குடோன் தெருவிற்கு சென்று மொத்த விலையில் புடவைகள் வாங்குவது குறித்து விசாரித்தேன். வீட்டில் இருந்தபடியே வியாபாரம் செய்யலாம்ன்னு முடிவு செய்தேன். முதலில் 25 ஆயிரத்திற்கு புடவையும், சல்வார் துணிகளும் வாங்கினேன். என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் இது குறித்து தெரிவித்தேன்.

பலர் இன்ஸ்டால்மெண்டில் வாங்க தொடங்கினாங்க. ஒரு புடவை எடுப்பதற்கு பத்து புடவைகளை பிரித்துவிட்டு சென்றிடுவார்கள். ஆனால் தொழில் ஆரம்பிக்கும் போதே இது போன்ற சிரமங்களை நாம் பெரிதாக பொருட்படுத்தக்கூடாது. ஆனாலும் கைக்குழந்தையையும் பார்த்துக்கொண்டு, துணிகளையும் சரிப்படுத்தி வைப்பதுன்னு இரண்டையும் செய்வது ரொம்பவே சிரமமா இருந்தது. அந்த நேரத்தில் தான் என் தோழி ஒருத்தியிடம் இது குறித்து பேசினேன். அவள் எனக்கு “உன்கிட்ட இருக்குற புடவைகள் மற்றும் சல்வார்களை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பு. நான் எனக்கு வேண்டியதை வாங்கிக்கிறேன்’’னு சொன்னாள்.

அவள் தேர்வு ெசய்த துணிகளை கொரியர் மூலம் அனுப்பி வைத்தேன். அவள் எனக்கு ஆன்லைன் முலம் பணம் செலுத்திவிட்டாள். அப்போது தான் ஆன்லைன் முறையிலும் தொழில் செய்யலாம் என்று தெரிந்து கொண்டேன். இரண்டே நாட்களில் என்னிடம் இருந்த எல்லா துணிகளையும் என் தோழி மூலமாகவே விற்றேன். அடுத்தடுத்து துணிகளை வாங்கி நான் படித்த ஸ்கூல், காலேஜ், வேலைப் பார்த்த நிறுவனங்களில் எனக்கு கிடைத்த நண்பர்கள் என அனைவரையும் வாட்ஸ் அப் குழு மூலமாக இணைத்து, விற்க தொடங்கினேன்.

என் நண்பர்கள், நான் போட்டோ எடுத்து அனுப்பும் துணிகளை லாபம் வைத்து விற்பது என என்னுடன் இணைந்து வேலை செய்ய தொடங்கினார்கள். இந்த முயற்சி நல்லா இருக்கேன்னு தோணுச்சு. அடுத்த கட்டமாக ஃபேஸ்புக் பேஜ் ஒன்று தொடங்கி அதிலும் முயற்சி செய்து பார்க்கலாம்ன்னு முடிவு செய்தோம்.

ஃபேஸ்புக் தொடங்கின பிறகுதான் என்னை போல் வீட்டில் இருந்து வேலை பார்க்கக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அவர் களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ‘வாட்ஸ் ஆப் ரீசெல்லர்’ குரூப் ஒன்றை உருவாக்கினேன். இதில் இணைகிறவர்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. நான் போட்டோ எடுத்து போஸ்ட் செய்யும் துணிகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விற்று கொடுத்தால் அவர்களும் லாபம் ஈட்டுமளவிற்கு வழி செய்தேன். இன்று எங்களுடைய குரூப்பில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீசெல்லர்கள் இணைந்திருக்கிறார்கள்.

25 ஆயிரம் பேர் பாலோவர்ஸ் இருக்காங்க. தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடியவர்கள், மற்ற நாடுகளில் இருக்கக்கூடியவர்கள் கூட வாடிக்கையாளர்களாகவும் ரீசெல்லர்களாகவும் இருக்கிறார்கள். எங்களுக்கென்று தனி பெயர் வேண்டும் என்று ‘யுனீக் த்ரெட்ஸ்’ (Unique Threads ) என பெயர் வைத்து நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்கள் அதிகமானதால் ஆடைகளை நேரடியாக தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் விற்று வருகிறேன்.

தொடங்கிய நான்கு ஆண்டுகளில் இதுவரை எந்த தொய்வும் இல்லாமல் வெற்றிகரமாக என்னுடைய பணி நடந்து வருகிறது. நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை பல பேருக்கு என்னால் உதவமுடியும், நிறைவான லாபத்தை ஈட்டமுடியும்ன்னு. ஆனால் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. வாட்ஸ் ஆப் நிறுவனம் கலிபோர்னியாவில் இருந்து என்னுடைய டேட்டா பேசை கவனித்து என்னைப் பற்றி டாக்குமென்ட்ரி மூவி எடுத்து கவுரவித்தனர்.

தொடர்ந்து இயங்குவதற்கான ஊக்கத்தையும் கொடுத்தனர். வீட்டில் இருந்து என்ன செய்ய முடியும் என்று யோசிப்பவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது” என்கிறார் சண்முகப்பிரியா.

ஜெ.சதீஷ்

கணேஷ்