மௌனம் ஏற்படுத்திய மாற்றம்!



‘‘பெண்கள் கற்பனைத் திறன் நிறைந்தவர்கள். பக்கத்து வீட்டு பாட்டியிடம் ஒரு கதை கேட்டா போதும், அதை கற்பனையுடன் பேச ஆரம்பிப்பாங்க. அவங்க சொல்ல சொல்ல அது நம்முடைய மனத்திரையில் ஓட ஆரம்பிக்கும். அந்த கற்பனை எழுத்தா மாறினால், எல்லா பெண்களாலும் எழுத முடியும்’’ என்கிறார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் உமா மகேஸ்வரி. இவர் பிரியம்வதா என்ற புனைப்பெயரில் ‘மௌனப் பெருங்கடல்’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

‘‘பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் கடலூரில், 2003ல் சென்னைக்கு வந்தேன். சின்ன வயசில் எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும். அப்ப எனக்கு ஒன்பது வயசு இருக்கும். அப்பத்தான் நான் முதன் முதலில் புத்தகம் படிக்க ஆரம்பிச்ேசன். விளையாட தோழியர்கள் யாரும் இல்லாத போது எங்க வீட்டு பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு சென்று படிக்க ஆரம்பிச்சேன். நான் அங்க போக ஆரம்பிச்சதும், ஒரே மாதத்தில் சிறுவர்களுக்கான கதைகள் அனைத்தையும் படித்து முடித்திருந்தேன். நூலகருக்கும் எனக்கு என்ன புத்தகம் படிக்க கொடுப்பதுன்னு யோசிக்க ஆரம்பிச்சார். புத்தகங்களை படிக்க ஆரம்பிச்ச போது தான் எனக்கு எழுத்தின் ருசி தெரிய ஆரம்பிச்சது. அது எனக்கு பிடித்து இருந்தது.

 எங்க வீட்டில் நாங்க மூன்று பெண்கள். பெரிய அக்காவுக்கும் எனக்கும் 11 வயசு வித்தியாசம். நான் பள்ளி படிக்கும் போது அவங்க வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க நிறைய புத்தகம் படிப்பாங்க. காலச்சுவடு, ஜெயகாந்தன்னு... அதனால வீட்டில் எப்போதும் புத்தகங்கள் சிதறி இருக்கும். அக்கா, இலக்கிய புத்தகங்கள் மட்டும் இல்லாமல் மற்ற புத்தகங்களும் படிப்பாங்க. இலக்கிய கருத்தரங்கிற்கும் போவாங்க. நானும் அவங்களுடன் வாசகர் வட்டத்திற்கு மற்றும் கருத்தரங்கிற்கு போவது வழக்கம். அந்த முதிர்ச்சி பெற்ற நண்பர்களின் வட்டம் தான் என்னை மேலும் பல புத்தகங்களை வாசிக்க தூண்டியது.

எங்க வீட்டில் எங்களுக்கு நிறைய சுதந்திரம் உண்டு. அதுக்கு காரணம் அப்பா தான். அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர். எங்களை தைரியமா வளர்த்தாங்க. 30 வருஷம் முன் பெரிய அக்கா வேலைக்கு போன போது, பெண்கள் வேலைக்கு போவதை எங்க ஊரில் தப்பா தான் பார்த்தாங்க. ஆனா அவர் மத்தவங்க பேசுவதை பத்தி யோசிக்கல. அவரும் நிறைய படிப்பார்.

அவருடைய தூண்டுதல்  தான் எங்களை புத்தகம் படிக்க தூண்டியது. புத்தகம் படிக்க எங்க வீட்டில் எப்போதுமே தடை விதிச்சதில்லை. புத்தகம் படிச்சு வந்த நான் எப்போது எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல. நான் எழுதின கட்டுரைகளை பத்திரிகைக்கு எழுதி அனுப்ப ஆரம்பிச்சேன். அப்ப நான் +2 படிச்சிட்டு இருந்த சமயம். என்னுடைய கட்டுரை புத்தகத்தில் பிரசுரம் ஆன போது, அது மேலும் என்னை மோடிவேட் செய்தது. புத்தகம் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை விட நான் எழுத ஆரம்பித்த பிறகு பலமடங்கு பெருகியது.

அது எனக்கு பிடிச்சு இருந்தது. என்னுடைய கல்லூரியிலும் எனக்கான மேடையை அளித்தது. கல்லூரியில் ‘மாணவர் மலர்’ என்ற இதழுக்கு நான் ஆசிரியராக இருந்தேன். அதில் கதை கட்டுரைகள்ன்னு நிறைய எழுதினேன். எழுத்தின் மேல் என்னுடைய ஆர்வம் கூடிக் கொண்டே போனது’’ என்றவர் சுமார் பத்து வருடங்களாக எழுதாமல் இருந்துள்ளார்.

‘‘என் வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான திருப்பம், மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் நான் கலந்து கொண்டது தான். பெண் ஆளுமைகள் மற்றும் எழுத்தாளர்கள் எல்லாம் சேர்ந்து மலேசியாவில் ஒரு மாநாடு நடத்தினாங்க. அதில் நான் எழுதிய கட்டுரை இடம் பெற்றது. மாநாட்டில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைச்சது. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிச்சு இருந்தாலும், எனக்கான ஒரு அடையாளத்ைத அந்த மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடக்கும் போது எனக்கு திருவிழா போல இருக்கும். அலுவலக வேலையை முடிச்சிட்டு கண்காட்சிக்கு எப்ப போவேன்னு இருக்கும். அங்கு போகும் போது, பல எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எனக்கான ஒரு அடையாளம் அந்த கூட்டத்தில் இருக் காது. அது எனக்குள் எப்படியாவது ஒரு புத்தகம் எழுதி வெளியிடணும்ன்னு தோணும்.

ஆனால் நான் பார்த்த வேலையில் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. என்னதான் வேலையில் இருந்தாலும், தினமும் ஒரு புத்தகமாவது படிச்சிட்டு தான் படுப்பேன். கடந்த ஆறு வருஷமா ஒரு புத்தகத்தை கூட நான் கையால் தொடவில்லைன்னா பாருங்க. காரணம் ஐ.டி வேலை ஒரு மெஷின் வேலை.

கற்பனை திறனுக்கு அங்கு இடம் கிடையாது. பனிச்சுமையும் அதிகம். ஒரு கட்டத்தில் பணத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம். பணம் மட்டுமே சம்பாதிச்சு என்ன செய்ய போகிறோம். அந்த வெறுமை என்னை ரொம்பவே அழுத்த ஆரம்பிச்சது. எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த புத்தகத்தை 12 நாளில் தயாரிச்சேன்’’ என்றவர் தன் புத்தகத்தில் உள்ள கவிதை தொகுப்பு பற்றி விவரித்தார்.

‘‘வாழ்க்கையில் பல முக்கியமான கட்டங்களை மௌனமாக கடந்து விடுகிறோம். அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நமக்கு அப்போது தெரியாது. ஆனால் ஒரு குரல் மட்டும் நம்முடைய ஆழ்மனதில் ஒலித்துக் கொண்ேட இருக்கும்.

அந்த மௌனத்தின் குரல் தான் என்னுடைய கவிதை தொகுப்புகள். நான் மௌனமாக இருக்கிறேன் என்றால், வெளியே பேசாத, தீர்க்கப்படாத விஷயங் கள் உள்ளுக்குள் இருக்கும். அதை எழுத்து மூலம் வெளிப்படுத்தி இருக்கேன். ‘மௌனப் பெருங்கடல்’, 81 கவிதைகள் கொண்ட தொகுப்பு.

இதில் எல்லாமே கலந்து இருக்கு. நான் சந்தித்த சம்பவங்கள், நபர்கள், என்னை சுற்றி இருப்பவர்கள்... என என்னுடைய அனுபவங்கள் மட்டும் இல்லை, ஒரு பாட்டியின் தனிமை முதல் குழந்தை வரை எல்லாரையும் இதில் இடம் பெற செய்து இருக்கேன். நான் கட்டுரைகள் எழுதி இருந்தாலும் முதலில் ஒரு கவிஞரா என்னை அறிமுகம் செய்ய விரும்பினேன்’’ என்ற உமா குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை என்றார்.

‘‘இன்றைய தலைமுறை யினருக்கு புத்தகம் படிப்பது மிகவும் அவசியம். நாம அவர்களுக்கு இந்த புத்தகம் தான் படிக்க வேண்டும் என்று திணிக்க வேண்டாம். அதற்கான சூழலை உருவாக்கினால் போதும். அதற்கு பெற்றோர்கள் தினமும் ஏதாவது ஒரு புத்தகம் படிக்க வேண்டும். உங்களை பார்த்து வளரும் குழந்தைகள் அவர்களாகவே புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அம்புலிமாமா பிடிக்கலாம் அல்லது தி.ஜானகிராமன் கூட பிடிக்கலாம். அவர்களின் ரசனையை மாற்ற முடியாது. ஆனால் புத்தகங்கள் அவர்களை நல்லவழிப்படுத்தும்.

குழந்தைகளை புத்தகங்கள் வழி நடத்துவது போல் பெண்களும் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வது மிகவும் அவசியம். 24 மணி நேரம் ஒரு நாள். ஏழு மணி நேரம் தூக்கம். எட்டு மணி நேரம் வேலை. ஐந்து மணி நேரம் குடும்பத்திற்கு செலவு செய்தாலும் நான்கு மணி நேரம் இருக்கும்.

அதில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் உங்களுக்காக செலவு செய்யுங்கள். பெண்கள் என்னதான் படிச்சு வேலைக்கு போனாலும் இப்படித்தான் இருக்கணும்ன்னு நமக்கு நாமே சில வரைமுறைகளை விதைச்சு இருக்கோம். அதை உடைத்து எறிந்து தான் வரணும்ன்னு இல்லை.

அந்த வரைமுறையிலும் நமக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முடியும். இதை ஃபெமினிசம் என்று தவறான பார்வையில் பார்க்கிறாங்க.  ஆண் சிகரெட் குடிக்கிறான் நானும் குடிப்பேன். அவன் மது அருந்துகிறான் அதனால் நானும் அருந்துவேன். இது தான் இன்றைய ஃபெமினிசமாக உள்ளது. ஃபெமினிசம் அது அல்ல. நான் தனி ஆள். எனக்கான தனி அடையாளம் உண்டு. ஒரு பெண்ணை பற்றிய முழு விவரங்கள் ஆண்களுக்கு சரியான முறையில் போய்ச் சேரணும்.

சக உயிரிடம் அவ்வளவு வக்கிரம் வேண்டுமா? இவ்வளவு இழிவு செய்யணுமா? பெண்கள் மேல் இருக்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாறணும். அவர்களை தவறாக பார்க்காமல், அவர்கள் நிலையில் இருந்து பார்க்க  ஒவ்வொரு ஆணும் கற்றுக் கொள்ளணும்’’ என்ற உமாமகேஸ்வரி அடுத்த ஆண்டில் சிறுகதை தொகுப்புகளை வெளியிட இருப்பதாக கூறினார்.

ப்ரியா அருண்