சரும மென்மைக்கு கிளிசரின் சோப்!



பனிக்காலம் என்பது சருமத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலகட்டம். பிறந்த குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவருடைய  சருமத்தையும் குளிர் காலத்தில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் தோல் மருத்துவர் ரவிச்சந்திரன். மேலும்  குளிர்காலத்திற்கான சருமப் பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளித்தார்.

“பனிக்காலத்தில் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகும். நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவாக  உள்ளவர்கள் (Hypothyroid), நீரிழிவு நோயாளிகள், கொழுப்பைக் குறைக்க மாத்திரை எடுப்பவர்கள் (Lipid lowering Tablets) போன்றோருக்கு  இந்த சமயத்தில் சருமம் மிகவும் வறண்டு போகும். இதனை Xerosis  என்பார்கள். சருமம் வறண்டு போகும் போது அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். அந்த  இடத்தை சொரிந்து கொண்டே இருக்கும் போது நோய்த் தொற்று ஏற்பட்டு அங்கே புண்ணாகிவிடும்.

(Comorbility of dry skin). தலையிலும் சருமம் வறண்டு பொடுகு வரும். தோல் வறண்டு போவதால் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு  வயதானவர்கள் போல தோற்றம் ஏற்படும். சிலருக்கு சருமத்தில் படர்தாமரை பிரச்சனைகள் வரும். (பூஞ்சை தொற்று) குறிப்பாக நீரிழிவு நோயாளிகள்,  உடற்பருமன் உடையவர்கள்,  தன் உடலையும் ஆடைகளையும் அசுத்தமாக பராமரிப்பவர்கள் போன்றோருக்கு இந்த பிரச்னை வரும். இந்தியாவில்  இந்த படர்தாமரை பிரச்னை அதிகமாக இருக்கிறது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் திரும்ப திரும்ப வருகிறது.

அதாவது முன்னர் குறுகிய காலத்திற்கு சிகிச்சை எடுத்தாலே சரியாகி விடும். ஆனால் தற்போது படர்தாமரைக்கு நீண்ட காலத்திற்கு சிகிச்சை எடுக்க  வேண்டி வருகிறது. பொதுவாகவே அனைவரும் இந்த காலக்கட்டத்தில் தோலை பராமரிப்பது அவசியம். பனிக்காலத்தில் நல்லெண்ணெய் அல்லது  தேங்காய் எண்ணெய் போட்டு குளிக்கும் முன் உடலில் தேய்த்து ஊற வைத்து குளிப்பது நல்லது. ஆயில் மசாஜும் செய்து கொள்ளலாம். குளித்த பின்  மாய்ச்சரைசர் தடவுவது நல்லது. பெட்ரோலியம் ஜெல்லி, லிக்விட் ஃபேரபினையும் பயன்படுத்தலாம்.

சூப்பர் ஃபேட்டட் சோப், கிளிசரின் சோப் போன்றவற்றை இந்த சமயத்தில் பயன்படுத்துவது நல்லது. அதாவது மென்மை தன்மை கொண்ட சோப்  வகைகளை பயன்படுத்த வேண்டும். தலைமுடியும் வறண்டு போகாமல் இருக்க எண்ணெயை பயன்படுத்த வேண்டும். முகத்திற்கு சோப் ஃப்ரீ  க்ளன்ஸர் பயன்படுத்த வேண்டும். படர் தாமரைக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இரண்டிலிருந்து  மூன்று மாதங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. கொஞ்சம் சரியானவுடன் பாதியில் சிகிச்சையை நிறுத்துவது தவறு.

ஆன்டி ஃபங்கல் வித் ஸ்டீராய்டு கலந்த மருந்துகளை சிலர் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அவ்வாறு செய்வது பின் விளைவுகளை  ஏற்படுத்தும் மற்றும் தற்காலிக நிவாரணமாக மட்டுமே பயன்படும். உடல் மற்றும் உடைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். துவைத்த துணிகளை  வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்தவுடன் எடுத்து மடித்து வைக்கவேண்டும். ஹாஸ்டலில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் தங்கள்  உடைகளை அறைகளிலே காய வைக்கின்றனர். அது மிகவும் தவறு.

அதனால் காளான் சம்பந்தமான சருமப் பிரச்னை ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. உடை மற்றும் உடம்பில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள  வேண்டும். உடம்பில் ஈரத்தோடு ஆடைகளை அணியக் கூடாது. படர் தாமரை பாதிப்பு ஏற்பட்டவர்கள் தன் உடைகளை மற்றவர் உடைகளோடு சேர்த்து  துவைக்காமல் தனிப்பட்ட முறையில் துவைப்பது நல்லது. சோப் மற்றும் துண்டுகளை (டவல்) தனியாக வைத்துக்கொள்வதும் நல்லது. சிலருக்கு  கால்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சேற்றுப்புண் ஏற்படும்.

(Athlete’s foot or Tinea pedis). இது கொஞ்சம் கொஞ்சமாக கால் நகங்களுக்கும் கைகளுக்கும் பரவி விடும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு  அங்கே பாக்டீரியா தொற்று காரணமாக அரிப்பு அதிகமாக இருக்கும். சில சமயம் கால் வீங்கி விடும். சிலருக்குக் காய்ச்சல் கூட ஏற்படலாம்.   கால்களில் வெளியேறும் வியர் வையினால் காலுறை (சாக்ஸ்) நனைந்து விடும். தொடர்ந்து அதனையே பயன் படுத்தாமல் காலுறையை தினமும்  மாற்றுவது நல்லது. சுகாதாரமே அனைத்திற்குமான திறவுகோல்.

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் தங்கள்  உதடுகளை குளிர்காலப் பிரச்னைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். குளிர்காலங்களில் உதடுகளில்  வெடிப்பு ஏற்படாதவாறு லிப் பாம் தடவிக் கொள்ளலாம். தரமில்லாத லிப்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள்  ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது. எச்சிலால் உதட்டை ஈரப்படுத்த வேண்டாம்’’ என்றார்.

ஸ்ரீதேவி மோகன்