குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அவசியம்



குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த கேள்வியே பெரும்பாலான தாய்மார்களின் கவலையாக இருக்கிறது. என்னுடைய குழந்தை துறுதுறுவென  இருப்பான். நன்றாக சாப்பிடுவான், இப்போதெல்லாம் சரியாக சாப்பிடுவதே இல்லை. அவனுக்கு ஊட்டச்சத்து பிரச்னை ஏற்பட்டிருக்குமே, என்ன  மாதிரியான உணவுகள் கொடுப்பதன் மூலம் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து கிடைக்கும் என்கிற கேள்விகளோடு இருப்பவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்  உணவியல் நிபுணர் கோவர்த்தினி.

“குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.  உண்ணும் உணவு குறைவானதாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை தாய்மார்கள் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு  சரிவிகித உணவு (Balanced Diet) பழக்கத்தை பழகிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தொடர்ச்சியாக குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க  வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புசத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இருக்க வேண்டும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். ஊட்டச்சத்து இல்லாத உணவை சாப்பிட்டால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. அதனால்  ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து குழந்தைகள் விரும்புகிற வகையில் சமைத்து கொடுப்பது அவசியம். குழந்தைகள் வளர்ந்து  பள்ளிக்கு போகத்தொடங்கிய பின்னர் அந்த புது சூழ்நிலையால் புது நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் உணவு பரிமாற்றம், கடைகளில் வாங்கி  சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை (Junk foods, fast food) தேர்ந்தெடுக்க  விருப்பப் படுவார்கள்.

பெற்றோர் குழந்தைகள் விருப்பப்படுகிறார்களே என்று அவற்றை வாங்கி கொடுக்காமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.  பள்ளிக்கு செல்லும் குழந்தை கள் காய்கறிகள் மற்றும் பழங் களை அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு  பிடித்த மாதிரி உணவின்  வடிவத்தை மாற்று வதோ அல்லது பிடித்த காயுடன் இன்னும் சில காய்கறிகளை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடல்  பருமன் அதிகமாக இருந்தால், உணவை குறைவாக கொடுப்பதைவிட அவர்கள் உடற்பயிற்சி மற்றும் நார்சத்து மிகுந்த உணவை தர வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள்

1. புரதச்சத்து குறைபாடு.
2. வைட்டமின் ஏ குறைபாடு- XEXROPHTHALMIA & KERATOMALACIA.
3. ரத்த சோகை
4. ரிக்கெட்ஸ் (RICKETS) வைட்டமின் டி குறைபாடு.

சில குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி, திடமான உடலமைப்பு இல்லாமல் இருப்பார்கள். இவர்களுக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துள்ள  உணவுகளை கொடுப்பதன் மூலம் அவற்றை சரி செய்ய இயலும். குழந்தைகள் வளர வளர அவர்களின் உணவுப் பழக்கம் மாறுபடும். குழந்தைகளுக்கு  புரதச்சத்து நிறைந்த உணவு பொருட்களை கொடுப்பது அவசியமானது. இந்த மாதிரி ஊட்டச்சத்து உள்ள உணவு கொடுப்பதால் குழந்தைகளுக்கு  வரக்கூடிய நோய்களை தடுக்க முடியும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

1. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் - புரதச்சத்து, கொழுப்புச்சத்து உள்ளன.
2. முட்டை-புரதச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பி 6.
3. கறி, மீன் - புரதச்சத்து, வைட்டமின் பி2, பி12.
4. பருப்பு வகைகள் - புரதம், நார்சத்து, வைட்டமின் பி, கொழுப்புச் சத்து உள்ளன.
5. இனிப்பு பொருட்கள் நிறைய உண்ண வேண்டாம், அது பற்களை பாதிக்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
6. ZINC ஊட்டச்சத்து மிகவும் அவசியம். உடல் வளர்ச்சிக்கு குழந்தைகளை நன்றாக ஓடியாடி விளையாட விடுங்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு  நன்றாக பசி எடுக்கும்.

உணவுப் பாதுகாப்பு முறை

* உணவு கெட்டுவிட்டால் அந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
* உணவை தயாரிக்கும் போது சுத்தமான சூழ்நிலையில் சமைக்க வேண்டும்.
* சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு சாப் பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

வைட்டமின் குறைபாடுகள்

1. வைட்டமின் ஏ குறைபாடு - 3 வயது குழந்தை மற்றும் பள்ளி போகும் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படும். வைட்டமின் ஏ அதிகம்  உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடைமிளகாய், கேரட், முட்டை, மீன், பப்பாளி, மாம்பழம்,  கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமுள்ளது.
2. வைட்டமின் பி1 குறைபாட்டால்  பெரி-பெரி என்கிற சோர்வான நோய் ஏற்படும். இதயத்தை பலவீனமாக்கும்.  அரிசியை பாலிஷ் செய்வதால் அதில்  உள்ள ‘திமைன்’ சத்து நீக்கப்படுகிறது. இது வைட்டமின் பி1 குறைபாட்டினை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைதான்  சாப்பிட்டு வருகிறோம். அதற்கு ஈடாக கோதுமை, பீன்ஸ், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், வேர்க்கடலை, பால் போன்ற  உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
3. வைட்டமின் பி2 குறைபாடு- பெல்லாக்ரா நோயின் பாதிப்பு ஏற்படும். இதன் அறிகுறி உடல் எடை குறையும். வயிற்று போக்கு ஏற்படும். முகத்தில்  ராஷஸ் ஏற்படும். ஸ்டாபெர்ரி, புளுபெர்ரி, சூரியகாந்தி விதை, கீரை, காலிஃபிளவர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
4. வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் ஏற்படும். பற்களில் இரத்த கசிவை ஏற்படுத்தும். தக்காளி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு,  நெல்லிக்காய், கொய்யா, முட்டைகோஸ் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்.  
5. விட்டமின் டி குறைபாட்டால் ரிக்கட்ஸ் நோய் பாதிப்பு ஏற்படும். எலும்புகளின் சத்து குறைபாட்டால் ஏற்படும் இந்த நோயால் கால்கள் நேராக  வளராது. வயிற்று போக்கு, தலை வியர்க்கும் மற்றும் இரத்த சோகை ஏற்படும்.  உணவுகளில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், மீன், முட்டை,  சோயா சாப்பிடலாம்.  
6. இரும்புச் சத்து குறைபாட்டால், இரத்த சோகை பிரச்னை ஏற்படும். கீரை, பருப்பு வகைகள், கொட்டை  வகைகள், ஈரல், மீன் போன்றவற்றை  சாப்பிட்டால் சரியாகும்.

ஜெ.சதீஷ்