கதாநாயகிகளின் குரலுக்கு சொந்தக்காரர்



நடிகை மற்றும் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி

“பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். கேரளா தான் சொந்த ஊர் என்றாலும் நாங்க ரொம்ப காலம் முன்பே சென்னையில் செட்டிலாயிட்டோம்.  அம்மா ஸ்ரீஜா, பாட்டி இருவருமே டப்பிங் ஆர்டிஸ்ட் தான். அப்பா ரவி சன் டிவியில் வரும் தமிழ் சீரியல்களை மலையாளத்தில் டப்பிங் செய்திட்டு  இருக்கார். டப்பிங் குடும்பத்தில் நான் மூன்றாவது தலைமுறை’’ என்று கடகடவென்று பேச ஆரம்பித்தார் ரவீனா ரவி.

தன் இரண்டு வயதில் டப்பிங் துறையில் காலடி எடுத்து வைத்தவர் ரவீனா. ஆரம்பத்தில் விளம்பரங்களில் பேச ஆரம்பித்தவர் அதன் பின் நயன்தாரா  முதல் சமந்தா வரை பல முன்னணி நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் குரல் கொடுத்துள்ளார். படத்தில் கதாநாயகிகளுக்கு மட்டுமே குரல் கொடுத்து  வந்தவர் ‘ஒரு கடாயின் கருணை மனு’ படம் மூலம் முதல் முறையாக வெள்ளித்திரையில் முகம் பதித்தார், அந்த படத்தில் தனக்கே குரல்  கொடுத்துள்ளார்.

‘‘அப்ப எனக்கு ஒன்றரை வயசு இருக்கும். பாட்டி, அம்மா எல்லாம் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதாலோ என்னவோ நான் ஒன்றரை வயசிலேயே நல்லா பேச  ஆரம்பிச்சிட்டேன். ஒரு முறை அம்மா ‘தொட்டாசிணுங்கி’ படத்திற்கு டப்பிங் செய்திட்டு இருந்தாங்க. நானும் அப்பாவும் டப்பிங் ஸ்டுடியோ வெளியே  இருந்தோம். உள்ள அம்மா பேசிட்டு இருக்க, நான் அப்பாகிட்ட தொட்டாசிணுங்கின்னு சொல்லிட்டு இருந்தேன். அந்த சமயம் அதியமான் சார் நான்  பேசுவதை பார்த்திட்டு ரேடியோ விளம்பரத்துக்கு என்னோட குரல் நல்லா இருக்கும்ன்னு சொன்னார்.

அது தான் என்னுடைய முதல் டப்பிங் அனுபவம். நான் மைக் முன்னாடி பேசினது தான் ரேடியோ விளம்பரத்தில் ஒளிபரப்பானது. அதன் பிறகு நான்கு  வயசில் இருந்து டப்பிங் பேச ஆரம்பிச்சுட்டேன். ராஜீவ் மேனன் சார் அவர்களின் விளம்பரங்களில் வரும் குழந்தை நட்சத் திரங்களுக்கு நான் தான்  டப்பிங் கொடுத்தேன். ‘உட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர்’ தான் என்னோட முதல் விளம்பரம். அந்த விளம்பரத்தை ஐந்து மொழியில் எடுத்தாங்க. ஐந்திலும்  நான் தான் அதில் வரும் சின்ன பொண்ணுக்கு குரல் கொடுத்தேன்.

அதன் பிறகு ஹார்லிக்ஸ், ஆரோக்கியா பால், பியர்ஸ் சோப்புன்னு நிறைய செய்ய ஆரம்பிச்சேன்’’ என்ற ரவீனா கல்லூரியில் படிக்கும் போது சினிமா  நடிகைகளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ‘‘பள்ளி காலத்தில் விளம்பரம் மட்டுமே தான் செய்து வந்தேன். சமுத்திரக்கனி சார் படம்,  ‘சாட்டை’யில் +2 மாணவிக்கான குரல் தேடிக்கிட்டு இருந்தாங்க. அந்த படத்தின் சவுண்ட் என்ஜினியர் ராஜசேகர் அவர்கள்தான் என்னை சிபாரிசு  செய்தார். ஆடிஷனுக்கு வரச்சொன்னாங்க. என்னோட குரல் செட்டாச்சு. அப்படித்தான் வெள்ளித்திரையில் என் குரல் பதிவானது.

மாலை நேர கல்லூரி என்பதால், காலையில் டப்பிங் முடிச்சிட்டு அப்படியே காலேஜுக்கு போயிடுவேன். அதன் பிறகு ‘555’ படத்தில் இரண்டு  ஹீரோயின்களுக்கும் பேசினேன். ஒரு பொண்ணுக்கு சாதாரண கதாபாத்திரம், இரண்டாவது பொண்ணு கொஞ்சம் போல்டான பொண்ணு. இரண்டு  பேருக்கும் குரலை கொஞ்சம் மாடுலேஷன் செய்து பேசினேன். அடுத்து ‘நிமிர்ந்து நில்’ படத்தில் அமலாபாலுக்கு பேசினேன். அதைப்பார்த்திட்டு ஷங்கர்  சார் அவரின் ‘ஐ’ படத்தில் எமி ஜாக்சனுக்கு பேச வாய்ப்பு கொடுத்தார்.

சமந்தா, நயன்தாரான்னு எல்லா முன்னணி நடிகைகளுக்கும் பேச ஆரம்பிச்சேன். இது வரை 75 படங்களுக்கு பேசி இருக்கேன்’’ என்றவர் ஒவ்வொரு  கதாநாயகிகளுக்கு பேசுவதில் ஒரு அளவுகோல் இருக்கும் என்றார். ‘‘ஒருவருடைய குரலை அப்படியே இமிடேட் செய்தா அது மிமிக்கிரி.  டப்பிங்கில்  அப்படி செய்ய முடியாது. நாம நம்முடைய குரலில் தான் பேசணும். ஆனா அது கதாநாயகிகள் பேசுவது போல் இருக்கணும். ஒவ்வொரு  கதாநாயகிகளும் பேசும் போது ஒரு அளவுகோல், அவர்களுக்குன்னு ஒரு டோன் மற்றும் குரல் வித்தியாசம் இருக்கும்.

அது பேசும் போது தானா வந்திடும். இதை புரிந்துகொண்டாலே போதும். நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் டப்பிங் பேச முடியும். எல்லா  வற்றையும் விட அவங்க ஷூட்டிங்கில் பேசி இருப்பது போல உதடு அசைவிற்கு போல நாம பேசும் வாக்கியங்கள் ஒத்துப் போகணும். பேசும் போது  மாடுலேஷன்ல ஏத்தி இறக்கமா பேசணும். அந்த மாடுலேஷன், ஷூட்டிங்கின் போது எடுக்கப்படும் பைலட்டில் இருக்காது. சீனுக்கு ஏற்ப நாமதான்  பேசணும். சில சமயம் எப்படி வேணும்ன்னு இயக்குனர் சொல்லுவார். பேச பேச நமக்குமே பழகிடும்.

டப்பிங் மூலமா ஒரு காட்சியை அதிகப்படுத்தவும் முடியும், ஒன்னுமே இல்லாம செய்யவும் முடியும். டப்பிங்கில் பேசும் முன் பைலட்டில் ரொம்பவே  சாதாரணமா தான் இருக்கும். டப்பிங்கிற்கு பிறகு அந்த காட்சிக்கு வேறு முகம் கிடைக்கும். சில படங்கள் ஒரே நாளில் டப்பிங் முடிந்திடும். சிலது  இரண்டு நாளாகும். பாஸ்கர் த ராஸ்கல் படத்தில் நயன்தாராவுக்கு பேச மூணு நாளாச்சு. அம்மா பேச வேண்டிய படம். அம்மா தான் என்னை  நயன்தாராவுக்கு பேச வச்சாங்க. முதல்ல சின்ன பொண்ணு அந்த போல்டான கதாபாத்திரத்தை செய்ய முடியுமானு யோசிச்சாங்க. ஆனா பேசினேன்’’  என்றவர் நடிக்க வந்தது ஒரு விபத்து என்றார்.

‘‘டப்பிங் பேசிட்டு இருக்கும் போது, நிறைய பேர் ஏன் நடிக்கக்கூடாதுன்னு கேட்டாங்க. நான் ரொம்ப கூச்ச சுபாவம். டப்பிங் பேசும் போதே நான்  ரொம்பவே வெட்கப்படுவேன். டப்பிங் அறைக்குள் யாரையுமே விடமாட்டேன். ஏன் லைட்டை கூட அணைச்சிட்டு தான் பேசுவேன்னா பாருங்க. சில  சமயம் இயக்குனர் இருப்பார். அப்ப கொஞ்ம் கஷ்டமா இருக்கும். என்னோட இந்த கூச்ச சுபாவத்தை போக்க மும்பையில் அனுபம்கேரின் நடிப்பு  பள்ளியில் சேர்ந்து மூணு மாசம் பயிற்சி எடுத்தேன். நடிப்பு தவிர டான்ஸ், மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் இருந்தது.

டயலாக் படிக்க தயக்கம் இருக்காது, ஆனா நடிக்க சொல்லும் போது பயமா இருக்கும். ரொமான்ஸ் சீன் இருக்கும், அடுத்து  அழணும், முகத்தில்  எக்ஸ்பிரஷன் காட்டணும். ரொம்பவே கஷ்டமா இருந்தது. எல்லாரும் ஹிந்தியில் பேசுவாங்க. நான் மட்டும் ஆங்கிலத்தில் பேசி நடிப்பேன். அப்புறம்  கொஞ்சம் ஹிந்தி பேச கத்துக்கிட்டேன். அந்த உலகம் வேறு. அங்க சினிமாவில் என்டரி ஆகுறது அவ்வளவு சுலபமில்லை. பின்னணி இருக்கணும்.  அப்பதான் சமாளிக்க முடியும்’’ என்றவர் ‘கிடாவின் கருணை மனு’ பட வாய்ப்பு பற்றி விவரித்தார்.

2015ல் ‘யட்சன்’ படத்துக்காக ஏ.வி.எம்மி ல் டப்பிங் பேசிட்டு இருந்தேன். அப்ப என்னோட போட்டோ ஷூட் எடுத்தாங்க. அதன் பிறகு பட  ஷூட்டிங்கிற்கான எந்த சுவடும் இல்லை. ஒரு வருடம் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. 40 நாள் தொடர்ந்து  ஷூட் ராஜபாளையத்தில். கிராமத்து  பொண்ணு, படிச்ச பொண்ணு, சாதாரணமா இருந்தா போதும்ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு கேமரா பார்த்தா உதரும். இந்த படத்தில் டயலாக்கே  இல்லை. எக்ஸ்பிரஷன் தான்’’ என்றவர் ஷூட்டிங் ஸ்பாட்  அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒரு மஞ்சள் நிற புடவை தான் காஸ்ட்யூம். முப்பது பேர் இருந்தாலும், நான் மட்டும் கூட்டத்தில் பளிச்சின்னு தெரிவேன். ஷூட்டிங் காட்டுப்  பகுதியில் கேரளா பார்டர்ன்னு சொன்னதும் மலை அருவி, ஆறுன்னு நானும் குஷியாயிட்டேன். அங்க போய் பார்த்தா பொட்டல் காடு. ஒரு செடி கூட  இல்லை. 40 நாள் வெயில்ல தான் ஷூட்டிங். வீட்டுக்கு வந்த போது எனக்கே என்னை அடையாளம் தெரியல. என் நிறத்தில் இருந்து 20 மடங்கு  குறைந்து இருந்தேன். சன் பர்ன்(sun burn)னு சொல்லுவாங்க.  சருமத்தில் எது போட்டாலும் எரியும்.

தயிர், மஞ்சள் மட்டுமே போட்டு என் பழைய சருமத்தை கொண்டு வர நான் பட்ட பாடு…’’ என்றவர் அதன் பின் ஒரு மலையாள படத்தில்  நடித்துள்ளார். ‘‘டப்பிங் பொறுத்தவரை ஏ.சி அறைக்குள் போனோமா, பேசினோமான்னு வந்திடலாம். நடிப்பு அப்படி இல்லை. டயலாக்  இல்லைன்னாலும், நடிக்கணும். மேக்கப் போடணும். என் ஷாட் வரும் வரை காத்து இருக்கணும். போன சீனோட தொடர்ச்சி பார்க்கணும். இப்படி  நிறைய இருக்கு. ஒரு படம் நடிச்சாச்சுன்னு அடுத்தடுத்த படங்களில் நான் உடனே கமிட் ஆகல.

‘கிடாயின் கருணை மனு’வின் தாக்கம் எப்படி இருக்குன்னு பார்க்க நினைச்சேன். இப்ப தமிழில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ மற்றும் இரண்டு  படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கேன். இவ்வளவு நாள் மத்த நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தேன். எனக்கு நானே குரல் கொடுக்கும் போது,  ரொம்பவே வித்தியாசமா இருக்கு. அம்மா இன்னும் டப்பிங் செய்திட்டு தான் இருக்காங்க. அவங்க குரல் என்னை விட யங்கா இருக்கும். பாகுபலியில்  அனுஷ்காவுக்கு அம்மா தான் குரல் கொடுத்தாங்க’’ என்றவர் குரலுக்காக பிரத்யேக மெயின்டனென்ஸ் எல்லாம் எடுப்பதில்லையாம். ‘‘கடவுள்  கிருபையால் எனக்கும் அம்மாக்கும் ஐஸ்கிரீம் சாப்பிட்டா கூட குரல்ல பிரச்னை ஏற்படாது.

இரண்டு பேரும் பாரபட்சம் பார்க்காம ஐஸ்கிரீம் சாப்பிடுவோம். டப்பிங் பேசும் போது கத்துகிற மாதிரி சீன் இருந்தா மட்டும் சூடு தண்ணீர்  குடிச்சுக்குவோம். எல்லா துறையிலும் போட்டி நிறைந்துவிட்டது. டப்பிங்கும் விதிவிலக்கல்ல. நாம எப்படி பேசுறோம் என்பதை பொருத்து தான்  வாய்ப்பு வரும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை டப்பிங் கூட ஆடிஷன் மூலமா தான் தேர்வு செய்றாங்க. ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்கு 35 பேர்  ஆடிஷனுக்கு போனோம். நான் 35வது ஆள். குரலை பொறுத்தவரை இயக்குனரின் முடிவு தான். அவர் மனதில் உள்ள குரலை நாம கொடுக்கணும்.  ‘ஐ’யில் எமிக்காக பேசினேன். இப்ப 2.0 படத்தில் எமிக்கு தமிழ், தெலுங்கு இரண்டிலும் பேசி இருக்கேன்’’ என்றார் ரவீனா ரவி.

ப்ரியா
படங்கள்: ஆண்டன் தாஸ்