ஒரு குழந்தையும் அரக்கனும்



பெண் மைய சினிமா

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு வினாடியும் உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும். உங்கள் தோற்றத்தில் கவனம்  இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளைக் கடந்துபோகும் போது உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது. உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள்  வெளிப்படக்கூடாது. நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம். ஆனால், குழந்தை உங்களைக் கவனிக்கும்.

உங்களது மோசமான நடத்தை, மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும். களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும்.  கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை, ஒரு குழந்தைக்குள் விழுந்து முளைவிடும். ஒரு குழந்தையின் முன்னால் நீங்கள்  உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமற்போனதால் மற்றவர் மீது தீவிர நேயம் கொள்ள முடியாமற் போனதால் ,ஒரு பண்பாட்டை  உருவாக்கிக்கொள்ள முடியாமற் போனதால் அந்தக் குழந்தையின் மனதை சீர்குலைத்து விடுகிறீர்கள்.
 - தஸ்தயேவ்ஸ்கி

குழந்தைகள் தான் காண்கின்ற காட்சிகளை, பார்க்கின்ற திரைப்படங்களைத் தவறாக புரிந்துகொள்ளும் போதும், தான் பார்ப்பதை, கேட்பதையெல்லாம்  உண்மையென நம்ப ஆரம்பிக்கும் போதும் அவர்களின் மனதுக்குள் நிகழ்கின்ற அலைக்கழிப்புகளை, போராட்டங்களை அற்புதமாக சித்தரிக்கிறது ‘The  Spirit of the Beehive’. ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த காலகட்டம். ஓர் அழகான குக்கிராமம். அங்கே ஒரு பண்ணை வீட்டில்  வசித்து வருகிறாள் ஆறு வயதான சிறுமி அனா. கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவள்.

அவளுக்கு ஏழு வயதான இஸபெல் என்ற ஒரு அக்கா இருக்கிறாள். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அனாவின் தந்தை வயதானவர். அவர்  தேனீ வளர்ப்புத் தொழில் செய்துவருகிறார். தொழில் மற்றும் தேனீயைப் பற்றி எழுதுவதிலேயே எப்போதும் மூழ்கி கிடக்கிறார் அவர். அம்மா ஓர் இளம்  பெண். திருமணத்துக்கு முன்பு அவளுக்கு ஒரு காதலன் இருந்திருக்கிறான். அவன் போருக்குச் சென்றுவிட்டதால் இப்போது என்ன ஆனான் என்று  அவளுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவனை அவளால் மறக்க இயலவில்லை.

அதனால் அவனுக்கு கடிதம் எழுதுவதிலும் பதிலுக்காக காத்துக்கிடப்பதிலும் மூழ்கிக்கிடக்கிறாள் அனாவின் அம்மா. இரண்டு அடுக்கு பெரிய வீட்டில்  அப்பா ஒரு பக்கம், அம்மா இன்னொரு பக்கம், மகள்கள் இருவரும் வேறொரு பக்கம் என்று பிணைப்பில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள்  வாழ்ந்துவரும் கிராமத்தில் உள்ள சினிமா கொட்டகையில் ‘ப்ராங்கன்ஸ்டைன்’ என்ற திகிலான ஹாலிவுட் படத்தை திரையிடுகிறார்கள். அனாவும்,  இஸபெல்லும் தனியாக அந்தப் படத்தைப் பார்க்கிறார்கள். படத்தில் வருகிற அரக்கன் ஒருவன் எதிர்பாராத விதமாக ஒரு சிறுமியைக் கொலை  செய்துவிடுகிறான்.

அந்த அரக்கனை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். இந்தக் காட்சியை உன்னிப்பாக கவனிக்கும் அனாவின் மனது பாதிக்கிறது.  படம் முடிந்த பிறகு, ‘‘அவன் ஏன் அந்த சிறுமியைக் கொன்றான்? அவனை ஏன் அவர்கள் கொன்றார்கள்..?’’ என்று இஸபெல்லை அனா நச்சரிக்கிறாள்.  ‘‘யாரும் சாகவில்லை. சினிமா என்பது போலி...’’ என்று அனாவை சமாதானப்படுத்துகிறாள் இஸபெல். இருந்தாலும் அனாவின் மனது  திருப்தியடைவதில்லை. ‘‘உனக்கு எதுவும் தெரியவில்லை...’’ என்று இஸபெல்லைப் பார்த்து கோபப்படுகிறாள் அனா.

தங்கையை ஆற்றுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ‘‘அது ஸ்பிரிட். நாம அது கூட ஃப்ரண்ட்டாகிட்டா நம்ம கூட அதுவும் பேசும். ஊருக்கு ஒதுக்குப்  புறத்துல இருக்குற பாழடைந்த வீட்டுல தான் அந்த ஸ்பிரிட் இருக்கு...’’ என்கிறாள் இஸபெல். அனாவும் அதை நம்புகிறாள். இஸபெல்லும், அனாவுக்கு  இடையே நடக்கும் உரையாடல்கள் எதுவுமே அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அம்மா காதலனுக்குக் கடிதம் எழுதுவதிலும், அப்பா தேனீ  வளர்ப்பதிலுமே மூழ்கிக்கிடக்கிறார். பள்ளி முடிந்த பின் மாலை வேளையில் இஸபெல்லும் அனாவும் ஸ்பிரிட்டைப் பார்க்க அந்த வீட்டுக்குச்  செல்கிறார்கள்.

அங்கே யாருமே இருப்பதில்லை. பக்கத் திலும் ஒருத்தர் கூட இல்லை. பிறகு அனாவே தனியாக அந்த வீட்டுக்கு நாலைந்து முறை செல்கிறாள்.  அப்போதும் அங்கே யாருமே இல்லை. அவளின் மனம் ஸ்பிரிட்டைப் பற்றிய நினைவுகளிலும், அவன் ஏன் கொலை செய்தான் என்பதிலுமே  சுழல்கிறது. ஒரு நாள் ராணுவ வீரன் ஒருவன் காலில் அடிபட்டு அந்த வீட்டில் தஞ்சமடைகிறான். அப்போது அனா அங்கே வருகிறாள். அந்த ராணுவ  வீரனை ஸ்பிரிட் என்று நம்புகிறாள். அவன் பசியில் வாடுவதைக் கண்டு ஆப்பிள் தருகிறாள்.

பள்ளிக்கூடம் கூட போகாமல் தினம் தினம் அங்கே வருகிறாள். குளிரில் அந்த ராணுவ வீரன் நடுங்குவதைப் பார்த்து தந்தையின் கோட்டை  திருடிவந்து கொடுக்கிறாள். இந்தச் சம்பவங்கள் எதுவும் அனாவின் பெற்றோருக்கு மட்டுமல்ல, இஸபெல்லுக்குக் கூட தெரிவதில்லை. அனா பள்ளியில்  இருக்கும் சமயத்தில் அந்த ராணுவ வீரன் எதிராளிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறான். அவனிடமிருந்த கோட்டை கைப்பற்றி விசாரிக்கும்போது அது  அனாவின் தந்தையுைடயது என்று தெரியவருகிறது. அனா தான் கோட்டை எடுத்துக்கொண்டு போய் ராணுவ வீரனுக்குத் தந்தாள் என்பதை தந்தை  அறிகிறார்.

பள்ளி முடிந்து ராணுவ வீரன் இருக்கும் இடத்துக்கு அனா வருகிறாள். அவன் கொல்லப்பட்டதை அறிந்து கவலைப்படுகிறாள். தந்தை அங்கே  இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். ‘‘ஏன் அவனிடம் என் கோட்டை கொடுத்தாய்...’’ என்று அனாவிடம் தந்தை கோபப்படுகிறார். எதுவும்  பேசாமல் அங்கிருந்து ஓடிவிடுகிறாள் அனா. மாலையில் அவள் வீட்டுக்குத் திரும்புவதில்லை. அனாவைக் காணாமல் எல்லோரும் தேடுகிறார்கள்.  அவள் காட்டுக்குள் தன்னந்தனியாக உறங்கிக்கிடக்கிறாள்.

அவளை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறார்கள். ‘‘அவளின் மனம் ஏதோவொன்றால் அதிர்ச்சியடைந்துள்ளது...’’ என்கிறார் மருத்துவர்.  அனா யாருடனும் பேசாமல் எப்போதுமே மௌனமாகவே இருக்கிறாள். இஸபெல்லிடம் கூட அவள் பேசுவதில்லை. வீட்டில் யாருமே இல்லாத போது  ஜன்னலுக்கு அருகில் வந்து கண்களை மூடி திரைப்படத்தில் பார்த்த அந்த அரக்கனுடன் பேசுவதைப் போல அனா கற்பனை செய்து பார்க்கிறாள். இருள்  கவ்விய படம் நிறைவடைகிறது.

ஸ்பானிய மொழியாக இருந்தாலும் நம் சூழலுக்கும் இந்தப் படம் பொருந்திப்போகிறது. அனாவாக நடித்த சிறுமியின் நடிப்பு அற்புதம். இன்றைக்கு  நம்மைச் சுற்றி நிகழ்பவைகள் எல்லாம் குழந்தைகளின் பிஞ்சு மனதை பாதிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படம்  இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது. 1973-ல் வெளியான இப்படம் இன்று உலகின் தலை சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.  இதன் இயக்குனர் விக்டர் எரைஸ்.

த.சக்திவேல்