குட்டீஸ்களுக்கான உல்லன் உடைகள்!



14 கிலோ மீட்டர் ஸ்கார்ப்… கணக் கில்லாத கிலோக்களில் உல்லன் நூல் என உலகிலேயே மிக நீளமான ஸ்கார்ப்பை உருவாக்கி கின்னஸ் சாதனை  புரிந்துள்ளார் சூளைமேடு ஐரின் எட்வின். உல்லனில் சாதனை மட்டுமல்ல சம்பாத்தியமும் பார்க்கலாம் என ஐடியாக்களை விவரித்தார்.

‘‘இந்த சாதனை யில் எனக்கு மட்டும் பங்கு கிடையாது. இது ஒரு குழுவா சேர்ந்து செய்த சாதனை. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.  ஸ்டெல்லா மேரிஸ்ல B.C.A, எத்திராஜ் கல்லூரியில MBA படிச்சேன். அப்பறம் அமேசான் ஷாப்பிங் நிறுவனத்துல வேலை. இடையில திருமணம்,  குழந்தை கமிட்மென்ட் வேலைய விட்டுட்டேன். எனக்கு சின்ன வயதுல இருந்தே இந்த கிராப்ட் வேலைகள்ல ஆர்வம் அதிகம்.

பிறந்தநாள்,  திருமணநாள் இப்படி எது வந்தாலும் என் கையாலேயே கார்ட் அல்லது ஆல்பம் பாக்ஸ் இப்படி எதாவது செய்துதான் கொடுப்பேன். அப்படித்தான் உல்லன் வேலைகளை ஆன்லைனில் கத்துக் கொண்டேன். டிரெஸ், ஷூ, ஹேண்ட்பேக், பர்ஸ், மொபைல் கவர் இப்படி எல்லாம் செய்யத்  துவங்கினேன். மேலும் வெறுமனே டிரெஸ்ஸா இல்லாம அதுல என்னால என்ன ஸ்பெஷல் கொடுக்க முடியும்னு யோசிச்சு குழந்தைகள் உடைகளில்  கார்ட்டூன், ஹெல்லோ கிட்டி மாதிரியான வடிவங்கள்ல செய்தேன்.

நான் செய்ததை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தேன். அப்படியே  பரவ இதையே ஏன் முழு நேர தொழிலா செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் அதன் பிறகு இந்த தொழிலில் முழு கவனம்  செலுத்தியுள்ளார். ‘‘ஒன்று இரண்டு உடைன்னா நமக்காக தைக்கலாம். ஆனா அதையே வெளியே கொடுக்கும் போது இலவசமா கொடுக்க முடியாது. காரணம் இந்த  நூலின் விலை அதிகம்.

அதனால் என்னுடைய இந்த வேலைப்பாட்டினை நண்பர்கள் மட்டும் இல்லாமல் முகநூல் பக்கம் மற்றும் சமூக  வலைத்தளங்களில் போஸ்ட் செய்தேன். இப்போ எனக்கு நேரமே இல்லாம ஆர்டர் குவிந்த வண்ணம் இருக்கு’’ என்ற ஐரின் உல்லன் வகைகள் பல  உள்ளதாக கூறினார். ‘‘உல்லனில் நிறைய வகை இருக்கு. நான் பயன்படுத்துறது காஷ்மீரி மற்றும் காட்டன் உல்லன். காஷ்மீர் உல்லன் உங்களுக்கே தெரியும். நாம ஸ்வெட்டருக்கு பயன்படுத்துவது. காட்டன் உல்லன் இன்னும் மென்மையா, ஆர்கானிக் வகையா  இருக்கும்.

இதன் விலை கொஞ்சம் அதிகம். இதில் உடைகள் பின்றது சுலபம். தையலுக்கு ஏற்ப நல்லாவே வளைஞ்சு கொடுக்கும். அதே போல  காஷ்மீர் உல்லனை நீங்க டிரை கிளீன் தான் கொடுக்கணும். காட்டன் உல்லனை நீங்க மெஷின்லயே கூட வாஷ் பண்ணலாம். காஷ்மீர் உல்லன் போல  இது நூல் நூலா பிரியாது. மேலும் நம்ம ஊர் வெயிலுக்கு காஷ்மீர் உல்லன் வெறும் மூணு மாசம்தான் போட முடியும்.

அதே காட்டன் உல்லனை நீங்க எப்போதும் பயன்படுத்தலாம்’’ என்ற ஐரின் ஒரு மொபைல் கவருக்கு ரூ.250 துவங்கி பெரியவர்களின் குர்தா கோட்,  ஜீன் டாப் ரூ. 2500  என சுமாராக ஒரு ஆடைக்கே ரூ.5000 வரை சம்பாதிக்கிறார். இந்த தொழிலில் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தால்  மாதத்திற்கு முப்பது முதல் நாற்பதாயிரம் வரை கூட சம்பாதிக்கலாம் என்னும் ஐரின் எட்வின் கின்னஸ் சாதனை பட்டியலிலும் தன் பெயரை பதிவு  செய்துள்ளார். ‘‘நான் இந்த உல்லன் டிசைன்களுக்காக நிறைய வாட்சப் குரூப், முகநூல் பக்கங்கள் எல்லாமே ஃபாலோ செய்வது வழக்கம்.

அப்படி ஒரு குரூப் மூலமாகத்தான் இந்த கின்னஸ் சாதனை பற்றி கேள்விப்பட்டேன். சுபஸ்ரீ நட்ராஜன் அவர்கள் கின்னஸ் ரெக்கார்ட் செய்யப்  போறதாகவும் அதுக்கு உல்லன் ஒர்க் தெரிஞ்ச பெண்கள் அணுகலாம்ன்னு வாட்சப் குழுவில் செய்தி வந்தது. அப்படி ஆரம்பிச்சு ஒரு குழுவா  அவங்கவங்க வீட்ல ஸ்கார்ப் செய்தோம். எனக்கே தெரியலை எவ்வளவு செய்தேனு. ஒவ்வொரு ஸ்கார்பா இணைத்து எம்.என்.எம் ஜெயின் கல்லூரி  மைதானத்தில் மெகா சைஸ் ஸ்கார்பா தைச்சோம்.

இதுக்கு முன்னாடி கின்னசில் 3 கி.மீ வரைதான் செய்திருக்காங்க. நாங்க 14 கி.மீ செய்திருந்தோம். இதுல கலந்துக்கிட்ட எங்க எல்லாருக்குமே  சர்டிஃபிகேட் கிடைச்சது. மொத்த ஸ்கார்ப்பையும் திரும்ப தனியா பிரிச்சு அப்படியே காஷ்மீர் பகுதியில் உள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு  டொனேட் பண்ணிட்டோம்’’ என்ற ஐரின் எட்வின் ஆன்லைனில் உல்லன் தைப்பதை கற்றுக் கொண்டு சம்பாதிக்கலாம் என்கிறார்.

ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்