மலை ரயிலில் தேனிலவு கொண்டாடிய இங்கிலாந்து தம்பதியினர்



சுற்றுலா செல்ல காரை வாடகைக்கு பிடிப்போம், அதிகபட்சம் பஸ்சை வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றுவதை பார்த்திருக்கிறோம். இங்கிலாந்தை சேர்ந்த  ஒரு புதுமண தம்பதி ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து தங்களின் தேனிலவை அதில் கொண்டாடி அசத்தியுள்ளனர். ‘‘எங்க இருவருக்கும் இந்தியா  பிடிக்கும். அதனால்தான் எங்களின் தேனிலவை கொண்டாட இந்தியாவிற்கு வந்தோம்’’ என்கிறார் கிரஹம் வில்லியம் லினென்.

இவர் தன் காதலி சில்வியா பிலாசிக்கை இரண்டு வாரம் முன்பு கரம் பிடித்துள்ளார். ‘‘எங்களின் நண்பர் ஊட்டியில் 28 வருடமாக வசித்து வருகிறார்.  அவர் எப்போதும் ஊட்டியின் அழகை பற்றி எங்களிடம் கூறுவார். மலைக்கு நடுவே இயற்கை காட்சிகளை கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டு  செல்லும் நீராவி ரயிலின் அழகே தனி என்று அவர் எப்போதும் எங்களிடம் சொல்வார். அப்போதே நான் முடிவு செய்தேன் எங்களின் தேனிலவு  இங்குதான் என்று.

அதனாலயே ஒரு ரயிலையே வாடகை எடுத்து எங்களின் தேனிலவை கொண்டாட முடிவு செய்தோம்’’ என்ற கிரஹம் இதற்காக ரூ.2.85 லட்சம்  கொடுத்து தனி ரயிலை புக் செய்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு 3 பெட்டிகள் கொண்ட அந்த  சிறப்பு மலை ரயில்  கிரஹம், சில்வியா தம்பதியை ஏற்றிக்கொண்டு மலைக்கு நடுவே வனப்பகுதியை கிழித்துக்கொண்டு செல்ல தயாரானது.

இயற்கையின் அழகை அதன் ரம்மியமான ஓசையை கேட்டபடியே இருவரும் தங்களின் பயணத்தை துவங்கினர். வழியில் பாலங்கள், 13 மலைக்  குகைகள், வனங்களை கடந்து புகையை கக்கிக் கொண்டு சென்றது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த அழகை ரசித்தபடியே அந்த தம்பதியினர்  வழிநெடுக சுற்றித்திரிந்த யானைகளின் பிளிறலையும் கேட்க தவறவில்லை.

பல் சக்கரத்தால் இயங்கும் இந்த நீராவி எஞ்சின் ரயிலில் அவர்கள்  இருவர் மட்டுமே தேனிலவை கொண்டாடினர்.  இன்ஜினியராக  பணியாற்றும்  கிரஹம் தனது காதல் மனைவி சில்வியாவை முதன் முதலில் ஒரு நீராவி ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்து காதல் வயப்பட்டுள்ளார்.  அதனால் தான் தேனிலவுக்கு ஊட்டி மலை ரயிலை தேர்வு செய்ததாக தனது காதல் மனைவியை அணைத்தபடி உற்சாகமாக தெரிவித்தார்.

பா.கோமதி