சொரயாவின் கண்ணீர் கதை



பெண் மைய சினிமா

சில திரைப்படங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டாலே போதும் வாழ்நாளுக்கும் மறக்காது. அந்தளவுக்கு அந்தப்  படத்தின் காட்சிகளும், கதையும் நம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். அவை கொடுக்கும் அதிர்ச்சியிலிருந்து மீள்வது அவ்வளவு  எளிதல்ல. அப்படி உலகையே அதிர வைத்த ஒரு படம் தான் ‘The Stoning of Soraya M.’உலகெங்கிலும் பெண்களுக்கு நிகழ்கின்ற அநீதிகள்  ஏராளம். குறிப்பாக ஈரான் போன்ற இஸ்லாமிய தேசங்களில் சொல்லவே தேவையில்லை. அந்த அநீதிகள் பெரும்பாலும் வெளி உலகிற்கு  தெரியாமலேயே மூடி வைக்கப்படுகின்றன. அப்படி மூடி வைக்கப்பட்ட ஒரு அநீதியை உலகம் முழுவதுக்கும் தெரிவிப்பது தான் இந்தப்  படத்தின் மையம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. ஈரானில் எண்ணெய் வளங்கள் நிரம்பிய ஒரு குக்கிராமம்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் ரொம்பவே பின்தங்கியது அந்த கிராமம். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்குக் கூட கணவனிடம்  முறையாக அனுமதி கேட்கவேண்டிய சூழல். கணவன் எவ்வளவு பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு ஜாலியாக  இருக்கலாம். மனைவி அதைப் பற்றி எதுவும் கேட்கக்கூட முடியாத ஒரு சூழல். இதையெல்லாம் கேள்விப்பட்டு அங்கே என்ன நடக்கிறது  என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஒரு பத்திரிகையாளன் அந்தக் கிராமத்திற்கு வருகிறான். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  பத்திரிகையாளன் அவன். கிராமத்திலிருக்கும் யாருமே அவனைக் கண்டுகொள்வதில்லை. குடிக்க தண்ணி கூட கொடுப்பதில்லை. அவன்  திக்குமுக்காடி என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்துப் போகிறான்.

அப்போது இளம் பெண் ஒருத்தி பத்திரிகையாளனை நோக்கி வேகமாக ஓடிவருகிறாள். அவளை எல்லோரும் ‘பைத்தியகாரி’ என்று ஏளனம்  செய்கிறார்கள். பத்திரிகையாளனும் அவளை ஆரம்பத்தில் அப்படித்தான் நினைக்கிறான். அவளைவிட்டு விலகிச் செல்கிறாள். ஆனால்,  அந்தப் பெண்ணோ விடாப்பிடியாக அந்தப் பத்திரிகையாளனைப் பின் தொடர்ந்து செல்கிறாள். மனமிறங்கிய பத்திரிகையாளன் அவள்  என்னதான் சொல்லவருகிறாள் என்று கேட்கத் தொடங்குகிறான்.அவள் பைத்தியகாரி இல்லை. ஏதோவொரு சம்பவம் கொடுத்த  அதிர்ச்சியில் அப்படி மிரண்டுபோயிருக்கிறாள் என்பதை பத்திரிகையாளன் உணர்கிறான். அந்த இளம் பெண் சொரயா என்ற பெண்ணின்  கதையை பத்திரிகையாளனிடம் சொல்ல ஆரம்பிக்கிறாள். அவள் சொல்வது அப்படியே காட்சிகளாக திரையில் விரிகிறது.

பைத்தியகாரி என்று மற்றவர்களால் ஏளனமாகப் பார்க்கப்படும் அந்த இளம் பெண்ணின் உறவுக்காரப் பெண் தான் சொராயா. அழகும்  தோற்றப்பொலிவும் கொண்ட சொரயாவிற்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவளின் கணவன் பணத்தாசை பிடித்தவன்.  சொராயாவை ஓர் அடிமைபோலவே நடத்துகிறான். கணவனால் வெளியே சொல்லமுடியாத பல துன்பங்களுக்கு ஆளாகிறாள் சொரயா.  இந்த நிலையில் சொராயாவின் கணவனுக்கு பதினான்கு வயதான ஒரு சிறுமியின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதற்கு காரணம் அந்தச் சிறுமி  பெரும் பணக்கார வீட்டுப் பெண். அந்தச் சிறுமியை திருமணம் செய்துகொள்ள திட்டம் தீட்டுகிறான். அதற்காக பல வழிகளில் முயற்சி  செய்து பார்க்கிறான். முதலாவதாக சொரயாவை விவாகரத்து செய்ய நினைக்கிறான். ஆனால், குழந்தைகளின் நலன் கருதி எல்லாத்  துன்பங்களையும் தாங்கிக்கொண்டு விவாகரத்துக்கு மறுப்புத் தெரிவிக்கிறாள் சொரயா.

கணவனால் சொரயாவை நேராக எதிர்க்க முடிவதில்லை. வலுகட்டாயமாக விவாகரத்தும் பெற முடியவில்லை. அதனால் மகன்களை  சொரயாவிற்கு எதிராக திருப்புகிறான். ‘சொரயா நடத்தை கெட்டவள். அவளுக்கு மற்றவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவள் எனக்கு  உண்மையாக இல்லை...’ என்று புரளியைக் கிளப்புகிறான். எல்லோரும் அதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். மனைவி இன்னொருவருடன்  உறவில் இருந்தால் அவளின் அனுமதியின்றி விவாகரத்து செய்துகொள்ளலாம். அந்தச் சிறுமியைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்பது  அவனின் எண்ணம். ஊர்கூடி சொரயாவை விசாரிக்கிறது. தவறே செய்யாத சொரயா நடத்தை கெட்டவள் என்று குற்றம் சுமத்தப்படுகிறாள். 

கல்லாலேயே அடித்து கொல்வது அவளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை. மகன் உட்பட ஊரே சொரயாவை கல்லால் அடிக்கிறது. அவளின்  ரத்தம் நிலமெங்கும் பரவிக்கிடப்பதோடு படம் நிறைவடைகிறது.இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு படம். 1990-ம் வருடம் ஈரானுக்குச் சென்ற பிரெஞ்ச் பத்திரிகையாளர் ஒருவர்  அங்கே ஒரு பெண்ணை கல்லாலேயே அடித்துக் கொன்ற நிகழ்வைக் கேள்விப்பட்டு அதை ஒரு நாவலாக எழுதினார். அந்த நாவல் ஈரானில்  தடைசெய்யப்பட்ட ஒன்று. அதைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாவல் வெளியான பிறகே இப்படியொரு  தண்டனை இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறது என்பது பரவலாக உலகிற்கு தெரியவந்தது. சம்பவங்களை நேரில் பார்ப்பதைப் போன்ற  அனுபவத்தை தரும் இப்படத்தை இயக்கியவர் Cyrus Nowrasteh.

-த.சக்திவேல்