நியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க!



- காஞ்சனா  ஜெயதிலகர்

அலட்டல் இல்லை. அலப்பரை இல்லை. இத்தனை கதைகள் எழுதிய எழுத்தாளராக இருந்தும் அமைதியாக இருக்கிறார் காஞ்சனா  ஜெயதிலகர். இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட சிறுகதைகளையும்  ஐம்பதிற்கும் மேற்பட்ட ஜனரஞ்சகமான நாவல்களையும் எழுதி, மக்கள்  மனங்களை கொள்ளை கொண்டிருக்கும் நிறை குடமான இவர் கொடைக்கானலில் வசித்து வருகிறார். தங்கள் எழுத்து அனுபவங்களை  எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு புன்னகையோடு ஒப்புக்கொண்டு பேட்டி அளித்தார்.

“பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில். அப்பா பொன்னுத் துரை கல்லூரியில் பிரின்ஸிபலாக இருந்தார். அம்மா ரமா  பாய் ஒரு மருத்துவர். தங்கையும் மருத்துவர் தான். என் வீட்டில் எல்லாருமே நன்கு படித்தவர்கள். அந்த காலத்திலே அம்மாவுடன் பிறந்த  அத்தனை சகோதரிகளும் நன்கு படித்து நல்ல வேலைகளில் இருந்தனர். அப்பா பக்கமும் அப்படித்தான். அதனால் எங்கள் வீட்டில் படிப்புக்கு  நிறைய முக்கியத்துவம் இருந்தது. வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். குளியலறை ஷெல்ஃபிலும் கூட புத்தகங்கள் தான். வாசிப்பின் மீது  எனக்கு இயல்பாக காதல் வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. சிறுவயது தொடங்கி இன்று வரை பெரும்பாலும் எந்நேரமும் கையில்  புத்தகங்களோடு தான் இருப்பேன். கையில் புத்தகம் இல்லாமல் என்னை பார்ப்பது அரிது. நிறைய புத்தகங்கள் வாசித்துக்கொண்டே இருப்பேன்.

நான் நிறைய வாசிப்பதைப் பார்த்துவிட்டு ஒரு கிறிஸ்தவ சிற்றிதழின் ஆசிரியர், தான் நடத்தி வந்த பத்திரிகைக்கு என்னை ஒரு கதை  எழுதி தரச் சொல்லிக் கேட்டார். நாங்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னால் அவர் கேட்டபடி கதை எழுதி தர  முடிந்தது. 14 வயதில் என் முதல் கதையை எழுதித் தந்தேன். அது எல்லாருக்கும் பிடித்திருந்தது. என் முதல் கதை அந்த கிறிஸ்தவ  இதழில் வெளியாகியது. அதன் பிறகு கொஞ்சம் இடைவெளி விழுந்தது. பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்தேன். பின்னர் கல்லூரியில்
ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கில இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் தமிழின் மீதும் பற்று இருந்ததால்  என்னால் தமிழில் நிறைய வாசிக்கவும் எழுதவும் முடிந்தது.

திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக நான் வசித்து வருவது கொடைக்கானலில். கணவர் வியாபாரம் செய்கிறார். திருமணத்திற்குப்  பின் கொடைக்கானலில் இருந்தபடி மறுபடியும் கதைகள் எழுத ஆரம்பித்தேன். இங்கு இத்தனை வருடங்கள் ஆகியும் இப்போதும் இன்னும்  ஒரே ஒரு புத்தகக்கடை தான் இருக்கிறது. அப்படி என்றால் அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்? கொடைக்கானல் ஒரு  காஸ்மோபாலிடன் சிற்றூர். இந்த சின்ன இடத்திலிருந்து கொண்டு இவ்வளவு எழுத முடிந்தது மிகப்பெரிய சந்தோஷம். ஒருநாள் என்  பெரியப்பா ‘எத்தனை நாளைக்குத் தான் குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுவதாக எண்ணம்’ என்று என்னை சீண்டினார். ‘இலக்கியப்  பத்திரிகைகளுக்கும் எழுது’ என்று சொன்னார். ‘நான் எழுதினால் போடுவார்களா?’ என்று கேட்டேன். ‘முயற்சி செய். போடுவார்கள்’ என்று  என்னை ஊக்கப்படுத்தினார்.

அதன் பிறகு ஒரு கதை எழுதி சிற்றிதழ் ஒன்றிற்கு அனுப்பி வைத்தேன். அந்த கதை அந்த இதழில் வெளிவந்தது மகிழ்ச்சியாக இருந்தது.  தொடர்ந்து சிற்றிதழ்களில் என் கதைகள் வெளி வந்தன. அடுத்து ஜனரஞ்சக இதழ்களிலும் கால் பதிக்க ஆரம்பித்தேன். என் கதைகள்  ஜனரஞ்சக இதழ்களிலும் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன. 1992ல் இருந்து ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுதி வருகிறேன்.  என் சிறுகதைகள் பெற்ற வரவேற்பை பார்த்த ராணி ஆசிரியர் அ.மா.சாமி, என்னை நாவல் எழுதச் சொல்லி எனக்கு 13 கடிதங்கள்  எழுதினார். நான் சிறிது தயங்கிய போது ‘சிறுகதைக்கு நாலு கதாபாத்திரம் என்றால் நாவலுக்கு எட்டு கதாபாத்திரம். சிறுகதைக்கு நாலு  பக்கம் என்றால் நாவலுக்கு 40 பக்கங்கள். இவ்வளவு தான்’ என சொல்லி உற்சாகமூட்டி என்னை நாவல் எழுத வைத்தார்.

1997ல் இருந்து நாவல்கள் எழுதிட்டு இருக்கேன்.  முதல் நாவல் ‘ராணி முத்து’ இதழில்  வெளிவந்தது. முதல் நாவல் முடிக்கும் முன்பே  எனக்கு இரண்டாவது நாவல் எழுதுவதற்கான கரு கிடைத்துவிட்டது. அது சுவாரஸ்யமான கதை என்பதால் அதை தொடராக போட  ராணியின் ஆசிரியர் விரும்பினார். ராணி புத்தகத்தில் அறிமுக எழுத்தாளர் எழுதும் புதிய தொடர்கதை என என் பெயர் போட்டு  உடனடியாக விளம்பரம் செய்தார் ஆசிரியர் அ.மா.சாமி. அந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றது. தொடர்ந்து பல மாத  நாவல்களும் தொடர் கதைகளும் எழுதி வருகிறேன். 21 வருஷமா எழுதிட்டு இருக்கேன். இதுவரை 64 நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட  சிறுகதைகள் எழுதி இருக்கேன். மெலடி பப்ளிகேஷன்ஸ் மற்றும் அருணோ தயம் பப்ளிகேஷன்ஸ் என் நாவல்களை புத்தகமாகக் கொண்டு  வந்திருக்கிறார்கள்.

இதுவரை பெரிதாக தடைகள் என்று எதையும் சந்தித்ததில்லை. அப்பா, அம்மாவுக்கு நான் எழுதுவதில் மகிழ்ச்சி, பெருமை. எந்தப்  பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை ஸ்மூத்தாகப் போய் கொண்டிருந்தது. பிள்ளைகளும் படித்து செட்டிலாகிவிட்டனர். இவை எல்லாம்  கடவுள் எனக்களித்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நான் எந்த பத்திரிகை வாசலிலும் போய் நின்று என் கதைகளை  பிரசுரிக்கச் சொல்லி எந்த ஆசிரியரையும் பார்த்துப் பேசியதில்லை. என் எழுத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகை ஆசிரியர்கள்தான் என்னை  எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இவ்வளவு கதைகள் நான் எழுதி இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் என்றால்  அது ஆங்கில எழுத்தாளர் அகத்தா கிறிஸ்டிதான்.

தமிழில் நான் வியக்கும் எழுத்தாளர் ராஜேஷ்குமார். 1500க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கிறார். என்னை ஒரு ஆசிரியர்  அடுத்தடுத்து நாவல்கள் எழுதச் சொன்ன போது ‘என்னால் முடியுமா?’ என்று யோசித்தேன். அவர் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் உழைப்பை  உதாரணம் சொன்னார். அன்று மாலையே ராஜேஷ்குமாரே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அது ஒரு இனிய  ஆச்சரியம் எனக்கு. ‘நானும் இன்று வரை கையால்தாம்மா எழுதுகிறேன். என்னால் எழுத முடியும் போது உங்களால் எழுத முடியாதா?’  என்று கேட்டு என்னை ஊக்கப்படுத்தி நிறைய பேசினார். அதன் பிறகு நிறைய எழுத ஆரம்பித்தேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத  நாள். இப்படி சக எழுத்தாளர்களும் அன்போடு தான் இருந்திருக்கிறார்கள். ரமணிச்சந்திரன் அக்காவின் நட்பு எனக்கு கிடைத்த சிறந்த வரம்.

எங்கே போனாலும் எல்லாவற்றையும் கூர்ந்து  கவனிப்பேன். யார் எது சொன்னாலும் அதையெல்லாம் மனதில் நன்கு உள்வாங்கிக்  கொள்வேன். அவற்றிலிருந்து என்னை அறியாமல் ஒரு கரு உருவாகும். ஒரு சமயம் அனுராதா ரமணனின் பேட்டி ஒன்றை பார்த்தேன்.  தனக்குத் தோன்றும் கருக்களை அவ்வப்போது தனது குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்வேன் என்று சொன்னார். அதைப்  பார்த்ததிலிருந்து நானும் அவ்வாறு செய்ய ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஜெய்ப்பூருக்கு ஒரு முறை ரயில்  பயணம் செய்திருந்தேன். அந்த பயணம் முடிவதற்குள் ஒரு நாவல் தயாராகிவிட்டது. பெரிதாக கதை உருவாக்கத்திற்கு என்று நான்  எப்போதும் சிரமப்பட்டதில்லை. எப்பயோ விதை போட்டிருப்போம். அது எந்த சந்தர்ப்பத்தில் மடல் விரியும் என்று சொல்ல முடியாது.  எப்போதோ மனதில் புதைத்து வைத்த ஒரு கரு திடீரென்று ஒரு கதையாக உருவெடுக்கும். நான் எப்பவும் சந்தோஷமா எழுதறேன்.  எழுதுவதை நான் அவ்வளவு விரும்புகிறேன்.

எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ‘குடும்பம், குழந்தைகள் இவற்றையும் பார்த்துகிட்டு இவ்வளவு எழுதிறீயே?’ன்னு என் அம்மா  உள்பட நிறைய பேர் ஆச்சரியமா கேட்பாங்க. அதுக்கு காரணம் எழுத்து மீதான என்னுடைய ஆர்வம் மற்றும் கடவுளின் கிருபை இது  இரண்டும் தான். எழுதிட்டு இருக்கும் போது ஒரு தொலைபேசி வந்தால் பேசிவிட்டு மறுபடி வந்து உடனே எழுத உட்காருவேன். அது  எனக்கு தொந்தரவு இல்லை. அந்த நிமிஷம் சில வேளைகளில் என் கதையில் சிறு மாற்றம் கூட என் மனதில் தோன்றும். அதை  ஏற்றுக்கொண்டு எழுத ஆரம்பித்துவிடுவேன். எனக்கு க்ரைம் நாவல்கள், காதல் கதைகள் மற்றும் மர்மக் கதைகள் எழுத பிடிக்கும்.சிறந்த சிறுகதைக்கான விருதை அமுதசுரபி, கலைமகள், ராஜம் மற்றும் மங்கையர் மலர் போன்ற இதழ்கள் எனக்கு வழங்கி இருக்கின்றன.  நான் படித்த கல்லூரியில் இந்த ஆண்டு எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருக்கிறார்கள்.

நிறைய பேர் உங்க கதைகளை மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்னு சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இதில் என்ன தேர்வா  வைக்கப் போகிறார் கள்னு கேட்பேன். ஆனால் நம் எழுத்துக்கு இத்தனை மதிப்பிருக்கு என்பது எத்தனை சந்தோஷம். என் எழுத்து நிறைய  அன்பான மனித மனங்களை எனக்கு வென்று கொடுத்திருக்கிறது. இனி நம் எழுத்து என்பது வெறும் மகிழ்ச்சியை மட்டும் அளிக்காமல்  வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் நடப்பில் நிகழும் நிகழ்வுகளை இனி என் எழுத்தில்  கொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இப்போது நிறைய இளம் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். முகநூலில் இப்போது எழுத வந்த பலர்  எனக்கு நண்பர்களாகி இருக்கிறார்கள். அது மகிழ்ச்சியான விஷயம் தான். ரொம்ப பெரிய பெரிய நாவலா எழுதறாங்க. நாவல் என்பது  பெரியதா நிறைய பக்கங்கள் கொண்டதா தான் இருக்கணும்னு இல்ல, சின்னதா இருந்தாலும் நச்சுன்னு இருக்கணும். கிரிஸ்பியா, படிக்க  ருசியா இருக்கணும். வந்த வார்த்தைகளே மறுபடி மறுபடி வரக்கூடாது. ப்ரபஷனல் டச் இருக்கணும். அதற்கு நிறைய வாசிக்கணும். நூறு  பக்கம் வாசித்தால் தான் ஒரு பக்கம் எழுத முடியும். அது எழுத்தானாலும் சரி, வேறு எந்த வேலையாக இருந்தாலும் சரி வேலை என்று  வந்துவிட்டால் முழு மனதோடு செய்ய வேண்டும். கொடுத்த வேலையை நிறைவாக செய்ய வேண்டும். சிந்தை, செயல் எல்லாம் அதிலே  கவனமாக இருக்க வேண்டும். முனைப்போடு இருக்கணும்.

இன்றைக்கு பெண்கள் ‘மீடூ’ வரை வந்துட்டாங்க. அது பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் ரொம்ப அக்ரஸிவ்வாக இருக்க  வேண்டியதில்லை. அது ஆணோ பெண்ணோ யாருடைய கையும் ஓங்கி இருக்க வேண்டியதில்லை. கைகள் கோர்த்திருந்தால் தான் இரண்டு  பேருக்கும் வெற்றி. கிவ் அண்ட் டேக் பாலிஸி இருக்கணும். உடன் பயணிக்கும் மனிதர்கள் ரொம்ப முக்கியம். யாரையும் எடுத்தெறிந்து  பேச வேண்டாம். சமமான பாதை இருந்தால் பயணம் சொகுசாக இருக்கும். உடன் இருப்பவர்களோடு பிரச்னை ஏதுமில்லாமல் இருந்தால்  வாழ்க்கை சுகமாக இருக்கும்.கல்யாணம் ஆன உடன் ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்பார்கள். அதாவது ஆரம்பத்தில்  எல்லாம் நல்லா இருக்கும். அதன் பிறகு தான் பிரச்னை என்று. ஆனால் உண்மையில் கல்யாணம் ஆன முதல் சில வருடங்கள் தான்  கஷ்டம். சரியான புரிதல் இருக்காது.

எனவே அந்த சில வருடங்களை பக்குவமாக கையாண்டால் பின்னர் வாழ்க்கை சுலபமாக பிடிபட்டுவிடும். உலகத்தில் எத்தனையோ ஆண்,  பெண் என்று இருந்தாலும் நமக்கென்று கிடைத்தவர்கள் தான் நமக்கு கிடைத்த துணை. அந்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று நடத்த  வேண்டும்.எங்கப்பாவுடைய போர்டு மீட்டிங்கிற்கு அம்மா பார்த்து பார்த்து அவ்வளவு நேர்த்தியா உணவு ஏற்பாடு செய்வாங்க. அம்மா  ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால் உடன் இருக்கும் மருத்துவர்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும்  அப்பா அழகாக செய்து கொடுப்பார். இரண்டு பேரிடமும் ஈகோ மோதல் இல்லாமல் இருந்ததால்தான் அவர்களுடைய 50 வருட வாழ்க்கை  இனிமையாக இருந்தது.  நமக்கென்று நியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையோடு ஓடுங்க, வாழ்க்கை இனிமையாக இருக்கும்” என்கிறார்  தன் அடுத்த நாவலுக்கான வேலையில் முனைப்போடு.

-ஸ்ரீதேவி மோகன்
படங்கள்:கண்ணன்