எனக்கு 100 குழந்தைகள்!



நடிகை பிரணிதா

நடிகை ஹன்சிகா குழந்தைகளை தத்து எடுத்தது போல, நடிகை பிரணிதா ஒரு பள்ளியை தத்து எடுத்துள்ளார். 2017ல் பெங்களூரில் முதல் முறையாக அரசுப் பள்ளிக்கு தன்னார்வு ஆசிரியராக சென்றவர்,  கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை தத்து எடுத்துள்ளார். பிரணிதா பற்றி அறிமுகம் தேவையில்லை. தமிழில் ‘உதயன்’ என்ற படம் மூலம் அறிமுகமானாலும்.‘சகுனி’,‘மாஸ்’ படம் கோலிவுட்டில் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் இவர், நேரம் கிடைக்கும் போது தன்னால் முடிந்த சேவையை செய்து வருகிறார்.

மாணவர்களுக்கு பாடம்?

‘டீச் பார் சேஞ்ச்’ என்ற அமைப்பின் பிராண்ட் அம்பாசிடரா 2017ம் ஆண்டு செயல்பட்டு வந்தேன். இந்த அமைப்பு மூலம் கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கணும். ஒரு நாள் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அந்த அமைப்பின் அம்பாசிடரா இருந்ததால, என்னையும் வகுப்பு எடுக்க சொன்னாங்க. எனக்கு குழந்தைகளுடன் பழகுவது ரொம்ப பிடிக்கும்.

யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன். பெங்களூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆங்கில பாடம் எடுத்தேன். அங்க போன போது ரொம்பவே ஷாக்கிங்கா இருந்தது. காரணம் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் தெரியல. அரசுப் பள்ளியில் ஒரு பாடம் சரியான முறையில் சொல்லிக் கொடுக்க போதிய வசதிகள் இல்லைன்னு அப்பத்தான் எனக்கு தெரிந்தது. இவங்களுக்கு ஏதாவது ஒரு முறையில் உதவணும்னு அப்ப முடிவு செய்தேன். ஆனா அதுக்கான வழி தெரியல என்றார் கண்கள் விரிய.

தத்து எடுக்க காரணம்?

ஒரு வருஷம் கழிச்சு எனக்கு ‘சேவ் த கவர்மென்ட் ஸ்கூல்’ என்ற அமைப்பில் இருந்து அழைப்பு வந்தது. பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்யணும்னு நான் ஒரு பேட்டியில் பேசி இருந்ததை பார்த்து என்னை அணுகினாங்க. இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தணும் என்பது தான். எனக்கும் அந்த எண்ணம் இருந்ததால், சரின்னு சொல்லிட்டேன். அரசு பள்ளிகள் நாடு முழுக்க உள்ளன. கர்நாடகாவில் மட்டும் எத்தனை? அதன் தரம் என்ன?

அடிப்படை தேவைகள் என்ன என 1000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து ஆய்வு செய்தோம். 1000 பள்ளியை ஆய்வு செய்த போது ஹசன் மாவட்டத்தில் அலூர் என்ற நகரத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி அதில் இடம் பெற்று இருந்தது. நான் எதுவுமே யோசிக்கல. அந்த பள்ளியை தத்து எடுக்கணும்ன்னு முடிவு செய்திட்டேன். என் அப்பாவின் சொந்த ஊர் ஷாந்திகிராமா. கர்நாடகா, ஹசன் மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம். ஆனா நாங்க பெங்களூரில் செட்டிலாயிட்டோம். என்னதான் பெங்களூரில் வசித்தாலும் என்னோட வேர் அங்க தான்.

5 லட்சம்?

ஆமா, தத்து எடுத்துட்டேன். அதற்கான வளர்ச்சிப் பணிக்கு நான் தானே பொறுப்பு எடுத்துக்கணும். ஸ்பான்சர்ஸ் வாங்கலாம். ஆனா அது உடனடி தீர்வு கிடையாது. நிறைய பேரிடம் பேசணும். அவங்க சம்மதிக்கணும். அதன் பிறகு தான் நன்கொடை வரும். அது வரைக்கும் காத்து இருக்க முடியாது. அதனால வளர்ச்சிப்பணியை ஆரம்பிக்க முதல்ல என்னுடைய பணமா இருக்கட்டும்னு முடிவு செய்தேன்.
 
என்ன மாற்றம் கொண்டு வரப்போறீங்க?

நான் தத்து எடுத்த பள்ளியில் ஒண்ணாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை என 100 மாணவர்கள் படிக்கிறாங்க. இவ்வளவு பேர் இருந்தும் அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்ல. குறிப்பா பெண்களுக்கான கழிப்பறை. இதனால அந்த பள்ளிக்கு பெண் குழந்தைகள் படிக்க வருவதில்லை. பாதி அரசுப் பள்ளிகளை மூட முக்கிய காரணம் அடிப்படை வசதிகள் இல்லாதது தான். அதை சீர் செய்ய நினைச்சேன். முதல்ல சுகாதாரமான கழிப்பறை கட்டப்போறேன்.

பெண்களுக்கு கல்வி அவசியம். நகரத்து வாழ்க்கை மிகவும் வசதியானது. இங்கு இருக்கிறவங்க யாருக்குமே அந்த வசதியை பத்தி கவலைப்படுவதில்லை.
கிராமத்தில் சரியான சாப்பாடு வசதி இல்லை. பள்ளி இருந்தும் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் இல்லை, கழிப்பறை இல்லை, ஆய்வு கூடம் இல்லை... இதை எல்லாம் ஒன்று ஒன்றா செயல்படுத்தணும். நான் தத்து எடுத்த பள்ளி ஒரு மாடலா அமைக்கணும்.

அதை பார்த்து, மற்றவர்களும் அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்காக முன் வரணும். என்னை பார்த்திட்டு கன்னட இயக்குனர் ஒரு பள்ளியை தத்து எடுத்து இருக்கார். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு பள்ளியை தத்து எடுத்துக் கொண்டால் அரசுப் பள்ளியும் தரமாக இருக்கும் என்ற பிரணிதா காசு கொடுத்தாச்சுன்னு ஒதுங்கிக் கொள்ளாமல், வாராவாரம் பள்ளிக்கு சென்று அதற்கான முன்னேற்றத்தை பார்த்து வருகிறார். தொடரட்டும் இவரின் பணி.

- ப்ரியா