கோலம் போடலாம் துணிப்பை தைக்கலாம்..... மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம்



பல பண்டிகைகள், விழாக்கள், அலங்காரங்கள் அனைத்திலும் முதலிடம் வகிப்பது குத்துவிளக்கும், அழகான வண்ணக் கோலமும் தான். அடையாளங்கள் தான் எத்தனை விதம். கோல மாவில் ஆரம்பித்து, மாக்கோலம், கலர் கோலம், பூக்கோலம், நவதானியக் கோலம், ட்ரை ஃபுரூட்ஸ்  கோலம் என பல வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.பெரிய பெரிய வீடுகளிலிருந்து இன்று நம்மில் பலபேர் சிறிய வீடுகளிலும், ஃபிளாட்டிலுமாய் வசிக்கிறோம். அழகான பெரிய கோலம் போட போதுமான இடவசதி இல்லை. ஆனால் நம்மால் முடிந்தவரை கோலம் போட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஒவ்வொரு தினத்தையும், பண்டிகையையும் இந்த வகையான கோலத்திற்கு ஏற்றாற்போல் இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலர் உபயோகிப்பது OHP Sheet Rangoli (ரங்கோலி). பல வகையான கண்ணாடி கற்கள், முத்துக்கள், Gold ball chain போன்று பல பொருட்களைக் கொண்டு பலவிதமான அழகிய கோலங்களை தயாரித்து சந்தைப்படுத்துவதில் மிக மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்தான் சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா. இவர் தன் தாயார் மற்றும் சித்தியுடன் சேர்ந்து அழகிய OHP கோலங்கள் தயார் செய்வதில் வல்லுநர். இவரது கோலங்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

‘‘இந்தப் பொருள் தயாரிப்புக்கு இடவசதி என்று பார்த்தால் வீட்டில் வரவேற்பறையே போதுமானது. அதைவிட Dining Table மிகவும்  பொருத்தமாகும்.  முதலீடு என்று பார்த்தால் கிட்டத்தட்ட ரூ.2000 போதும்.  இதில் சுமார் 30 முதல் 35 கோலங்கள் செட் தயார் செய்யலாம். ஒரு நாளைக்கு 1 டிசைனும், அதனைச் சுற்றி 4 Placementsம்தான். ஒவ்வொரு கோல செட்டையும் ரூ.200 முதல் ரூ.500 வரை விலை நிர்ணயித்து வியாபாரம் செய்யலாம். நிகர லாபம் ரூபாய் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

தேவைப்பட்டால் சீஸன் நேரங்களில் மேலும் இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தலாம். நார்மலாக நாம் போடக்கூடிய கோல டிசைன்களையே இதற்கு பயன்படுத்தலாம். கலர் செய்து செய்யக்கூடிய கோலங்களுக்கு கிளாஸ் கலர்ஸ் உபயோகிக்கலாம். பெரிய பெரிய வீடுகளிலிருந்து இன்றைய நாட்களில் நம்மில் பலபேர் சிறிய வீட்டிலோ அல்லது ஃபிளாட்டிலோ வசிக்கும் நிலைமையில் உள்ளோம். ஆகவே அப்படி இருக்கும்போது இந்த மாதிரியான OHP Sheet Rangoli கோலங்களை வாங்கி ஒவ்வொருவரும் மிக அழகான  பண்டிகைகள், விழாக்கள் என்று அனைத்தையும் விடாமல் கொண்டாடி வருகிறோம்.

வெறும் கோலம் மட்டுமே தயார் செய்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்த கட்டமான இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் Tote bag / Shopping bag / Water bottle bag / Cell phone pouch / Hand pouch / Hand napkin / table rumer என்று பலவிதமான தயாரிப்புகளை காதி துணி அல்லது காடா துணியில் தைத்து அதில் தன் கைவண்ணத்தையும் பதியுமாறு பெயின்ட் செய்து சந்தைப்படுத்துகிறார். இந்தத் தொழிலுக்கு முதலீடு சுமார் 3000 ரூபாய் போதும்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 பைகள் தைத்து பெயின்ட்டும் செய்ய முடியும். செலவு பைக்கு  ஸ்டாண்டர்டு சைஸான  12க்கு 14 இஞ்ச் பைக்கு  15 ரூபாய் செலவாகும். பெயின்ட் செய்ய கூடுதலாக 20 ரூபாய், ஆக ஒரு பைக்கு 35 ரூபாய் செலவாகும். அதனை 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கலாம். வீட்டில் தையல் மிஷின் உள்ளவர்கள் பைகளைத் தாங்களே தைக்கலாம். இல்லாதவர்கள் தையற்காரரிடம் அளவுகள் கொடுத்து தைத்து வாங்கிக் கொள்ளலாம். மாத இறுதியில் தோராயமாக நிகர லாபமாக ரூ.20000 முதல் 25000 வரை சம்பாதிக்கலாம்.


சென்னையில் மாதம் ஒரு முறை எக்ஸ்போ மற்றும் கண்காட்சிகள் நடப்பது வழக்கும். அங்கும் ஸ்டால்கள் அமைத்து சம்பாதிக்கலாம். இப்போது பல ஃபேன்சி கடைகளிலும் இது போன்ற வண்ண கோலங்கள் மற்றும் பைகளை விற்பனை செய்கிறார்கள். அது போன்ற கடைகளை தேர்வு செய்து, அவர்களிடம் ஆர்டரின் பேரில் மொத்தமாக விற்பனை செய்யலாம். இதன் மூலம் நமக்கு எப்போதும் ஆர்டர்கள் இருந்த வண்ணம் இருக்கும்.  நண்பர்கள் மூலமும் மார்க்கெட்டிங் செய்யலாம். பை பை பிளாஸ்டிக் ( Bye bye plastic)என்று சொல்லிவிட்டு நாம் செய்த செயலை  நாமே களைந்தெடுக்கும் வகையில் இனி காதி துணி பையையே உபயோகிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு நாட்டின் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கலாம்.

- தோ.திருத்துவராஜ்