செல்லுலாய்ட் பெண்கள்



எவர் க்ரீன் நவரச நாயகி மனோரம்யம்மா - 49

நாகஸ்வர வித்வான், நாடக நடிகை, மடிசார் கட்டிய மாமி, கிராமத்துப் பெண், குப்பத்துப் பெண், வேடுவப் பெண், பழங்குடியினப் பெண், ஆங்கிலோ - இந்தியன், கோடீஸ்வரி, அரசி, குப்பைக்காரி, காபரே டான்ஸர், துப்பறியும் நிபுணர், உளவாளி, ரௌடிப் பெண், பர்மா அகதி, விமானப் பணிப்பெண், ஈழத் தமிழ்ப்பெண், வயது முதிர்ந்த பெண்மணி, சத்துணவு ஆயா என்று அவர் ஏற்காத வேடங்கள்தான் உண்டா?

இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய அனைத்துப் படங்களிலும் மனோரமாவுக்கு ஒரு வேடம் நிச்சயமாக உண்டு என்று சொல்லும் அளவு அவரின் அனைத்துப் படங்களிலும் பெரும்பாலும் நடித்திருக்கிறார். சிவாஜிக்கு ‘நவராத்திரி’யில் ஒன்பது வேடங்களை அளித்தது போலவே, மனோரமா, நடிகர் சுருளிராஜன் இருவருக்கும் ஒன்பது வேடங்களை ‘கண்காட்சி’ படத்தில் அளித்தார் ஏ.பி.நாகராஜன். இருவரும் துப்பறியும் நிபுணர்களாக அந்த வேடங்களை ஏற்று நடித்தார்கள்.


உணர்வுகளின் கலவையான குணச்சித்திரம் பொருந்திய அம்மாக்கள்

ஆச்சியின் நகைச்சுவைப் பாத்திரங்களின் முடிவுக்குப் பின், உணர்வு பொங்கும் அம்மாக்களைக் கண் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். அந்தக் காலத்துக் கண்ணாம்பா, எம்.வி.ராஜம்மா, ருஷ்யேந்திரமணி, சாந்தகுமாரி, சீதாலட்சுமி, பண்டரிபாய் இவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் அம்மாக்களாக கதாநாயகி பாத்திரங்களுக்குச் சற்றும் குறையாத கனமான அம்மா வேடம் ஏற்றவர்கள். அந்த அம்மாக்களின் வரிசையில் கண்டிப்பாக ஆச்சிக்கும் தப்பாமல் ஓரிடம் உண்டு. 80களில் ஆரம்பித்த அம்மா, அக்கா, அத்தை, அண்ணி, பாட்டி - இவர்களின் பயணம் 2000ங் கள் வரையிலும் தொடர்ந்தன.

இக்காலகட்டத்து நாயகர்கள் அனைவருக்கும் அம்மாவாகி அன்பையும், கண்டிப்பையும் காட்டி நெகிழ வைத்தவர். நான்கு தலைமுறை நடிக, நடிகையருடன் தன் திரை வாழ்வைத் தொடர்ந்தவர். நடிப்பைப் பொறுத்தவரை தலைமுறை இடைவெளி என்பதையே அறியாதவர் ஆச்சி. நவீன காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டவர். பங்கேற்ற அனைத்துப் படங்களிலும் தன் வேடத்துக்கான நியாயத்தைச் சிறப்புறச் செய்திருக்கிறார்.

மைத்துனன் மீது அன்பும் கனிவும் கண்டிப்பும், மாமனாரிடம் மரியாதை இருந்தாலும் அவரது தவறினைத் தட்டிக் கேட்கும் மருமகள், அண்ணி என ‘உன்னால் முடியும் தம்பி’ யின் பொறுப்பான குடும்பத்தலைவி. இயக்குநர் கே.பாலசந்தரின் வார்ப்பான இந்த அங்கயற்கண்ணி பாத்திரத்திடம் எங்கு தேடினாலும், மனோரமாவின் சாயல் தென்படாதவாறு உருவாக்கப்பட்ட பாத்திரம் அது. பின்னாளின் பலவிதமான அம்மாக்களையும் குணச்சித்திரப் பாத்திரங்களையும் ஏற்பதற்கான முன்னோடி அந்தக் கதாபாத்திரம்.

* மகனின் படிப்புக்காக சத்துணவு சமையலறை அடுப்புத் தீக்கு தன்னுடலைத் தின்னக் கொடுக்கும் ‘ஜென்டில்மேன்’ அம்மா.
* தன் பிள்ளைக்கு சொத்து கொடுப்பதில் தாயாதிகள் செய்யும் சூழ்ச்சிக்கு தன் கணவனே துணை போவது கண்டு கொதித்து, குளியலறையிலிருந்து, உடலில் சுற்றிய புடவையுடன் வெளிப்பட்டு பஞ்சாயத்தார் முன் ஆக்ரோஷமாக வாதிடும் ‘ராசுக்குட்டி’ யின் அம்மா.
* எடுத்து வளர்த்த தத்துப் பிள்ளை யானாலும் அன்பைக் கொட்டி, ஊடாக நகைச்சுவையையும் கலந்து கட்டி அளிக்கும் ‘அபூர்வ சகோதரர்கள்’ அம்மா.
* துருத்திக்கொண்டு வெளியில் தெற்றுப்பல் தெரியும் வாயை இழுத்து மூடியபடி கவுண்டமணி - செந்திலுக்கு ஈடு கொடுக்கும் நகைச்சுவையுடன், மகனுக்கு பதிலியாக விஷமருந்தும் முடிவுடன் பஞ்சாயத்து ஆலமரத்தடியில் காத்திருக்கும் ‘சின்னக் கவுண்டர்’ அம்மா.
* ஒற்றைப் பெண்ணாக மகனை வளர்த்து ஆளாக்கும் அம்மாக்கள் எப்போதும் ஆழ்ந்த உளவியல் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம்.

மகனுக்குத் திருமணமான பின்னும் மருமகளை மகனிடம் நெருங்க விடாமல், அவனைத் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடிய ஒரு அம்மாவை ‘நான் பெத்த மகனே’ படத்தில் கண் முன் காண்பித்தார். மருமகள் தற்கொலை செய்து கொண்ட பின், தான் தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்து திருந்துவதும், தான் வேண்டாமென்று நிராகரித்த பெண்ணே தன்னைப் புரிந்து கொண்டு தனக்காக வாதாடி வெற்றி பெறுவதைக் கண்டு பிரச்சனைகளை அணுகும் விதத்தைப் புரிந்து கொள்ளும் தாய் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தத் தாய் தமிழ்த் திரைக்கு முற்றிலும் வித்தியாசமானவள். பட்டியலிட முடியாத அளவு எத்தனை விதமான அம்மாக்களைக் கண் முன் நிறுத்தியவர் ஆச்சி.

நடிப்புடன் பாடலும் அவரது சொத்து

நாடக மேடைகளில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் பாடாத மேடையில்லை என்பதோடு, ‘தென்னாட்டு சுரையா’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவுக்குப் பாடல்களால் பிரபலம் அடைந்திருந்தார். அதன் நீட்சிதான் அவர் திரையில் பாடியதும். 60களில் வெளியான ‘மகளே உன் சமத்து’ படத்தில் ‘தாத்தா தாத்தா பொடி கொடு, இந்தத் தள்ளாத வயதிலா சடுகுடு ’ என்று ஆச்சி பாடிய பாடல்தான் திரையில் அவரது முதல் பாடல். இப்பாடலை அவர் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடினார். 70களில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் ‘வா வாத்யாரே வூட்டாண்டெ’ என்று மெட்ராஸ் பாஷையில் அமர்க்களமாக அவர் பாடிய பாடல் பட்டிதொட்டியெங்கும் அவரைப் பிரபலப்படுத்தியது.

‘திருமலை தென்குமரி’ ’பாடணுன்னு மனசுக்குள்ளே ஆச நெறையக்கீது’ இதுவும் மெட்ராஸ் பாஷையில் அவர் அசத்திய பாடல்தான். அதற்குப் பின் அவர் எத்தனையோ பாடல்களைப் பாடியிருந்தாலும்,‘நான் மெட்ராஸச் சுத்திப் பாக்கப் போறேன்’, ‘டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்று 90களில் மீண்டும் அவர் பாடிய இரண்டு பாடல்களும் அதே அளவு பிரபலமடைந்தன. எந்த மேடையில் அவர் ஏறினாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே பாடலைப் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் அவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்து கைதட்டி ரசித்தார்கள்.

நான்கு தலைமுறை இடைவெளியில் அவரது நடிப்பைப் போலவே அவரது பாடல்களும் ரசிக்கப்பட்டன. கதாநாயகிகளுக்கு பி.சுசீலாவின் குரல் பொருந்தியதைப் போல், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் மனோரமாவுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. தில்லாண்டோமரி, முத்துக் குளிக்க வாரீயளா இப்படி ஏராளமான பாடல்களைச் சொல்லலாம். திரையிலும் தொடர்ந்த நாடகக் காட்சிகள் பதினைந்து வயதில் ‘அந்தமான் கைதி’ நாடகத்தின் மூலம் மேடைக்குப் பின்னிருந்து தன் நாடகக் கலை வாழ்வைத் தொடங்கியவர், பின் மேடையேறி கதாநாயகியாகி அதன் வழியாகத் திரைப்படங்களையும் எட்டிப் பிடித்தார். எத்தனை வேடங்களை அவர் திரையில் செய்திருந்தாலும், நாடக மேடை மட்டும் அவரை எப்போதும் ஈர்த்துக்கொண்டே இருந்தது.

பல படங்களில் நாடக நடிகையாகவும், ஒற்றைக் காட்சியாக இடம் பெற்ற ஓரங்க நாடகங்களிலும் பங்கேற்றார். திரையிலிருந்து மறுபடியும் நாடகங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளையும் அவர் விரும்பி ஏற்றார். நாடக மேடைப் பின்னணியிலிருந்து வந்ததாலோ என்னவோ திரைப்படங்களில் நாடகக் காட்சிகள் இடம் பெற்றால் வெளுத்து வாங்கி விடுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் குழு மற்றும் - பத்மினி குழுவினர் செவ்வியல் இசை - நடனத்தின் பிரதிபலிப்பாக ஜொலித்தார்கள் என்றால் அடித்தட்டு மக்களைக் கவரத்தக்க நாடக நடிகராக, ஒற்றையாளாக மனோரமா வெளுத்து வாங்கினார்.

சொந்த வாழ்வின் துயரங்களை எல்லாம் மறைத்துக்கொண்டு மேடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் ஜில் ஜில் ரமாமணி, ரோஸ்ஸா ராணியாக தூள் கிளப்பினார். இயக்குநர் துரை இயக்கிய ‘ஒரு குடும்பத்தின் கதை’ படத்தில் ஆங்கிலோ - இந்தியப் பெண் வேடம். ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழ் அவர் நாவில் கொஞ்சி விளையாடும். அதே கெட் - அப்பில் அரிச்சந்திரன் நாடகத்தின் சந்திரமதியாக நடித்தால் எப்படியிருக்கும்? பாப் வெட்டிய தலை, கவுனுடன் லோகிதாசனை மடியில் கிடத்திக்கொண்டு ‘மவ்னே லோக்கிதாஸ்ஸா’ என அவர் கொச்சை மொழி பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது.

‘பின்னர் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம் முழுதும் பல நாடகங்கள், பலப் பல கேரக்டர்கள். நாடக நடிகையாக அவர் செய்த ஆர்ப்பாட்டமான நடிப்பு அசல் நாடகக் கலைஞர்களைப் பிரதிபலித்தது. ‘காசி யாத்திரை’ படத்தின் அம்பிகாபதி நாடகத்தில் அமராவதியாக நடித்தார். இவை அனைத்துமே நிஜத்தில் துயரம் தோய்ந்த முடிவினைக் கொண்ட சோக நாடகங்கள். ‘கல்யாணராமன்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் இணைந்து ‘மனோகரா’ நாடகத்தைச் சென்னைத் தமிழில் பேசி நடித்துக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.  

அரிச்சந்திரன், அம்பிகாபதி, மனோகரா நாடகங்களையோ படங்களையோ பார்த்து யாராவது விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோமா? ஆனால், நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இக்காட்சிகள் அரங்கைக் குலுங்க வைக்கும் காட்சிகளாகத் திரையில் மாறியிருந்தன. வள்ளித் திருமணம் நாடகத்தில் வள்ளியாகப் பல படங்களில் நடித்தார். அதிலும் ‘விளையாட்டுப்‘பிள்ளை’ படத்தில் தினைப்புனம் காக்கும் காட்சியில் ‘சோ… சோ…’ என்று அவர் பறவைகளை விரட்டும்போது அரங்கம் சிரிப்பலை களால் அதிரும். ஏனென்றால் அந்தக் காட்சியில் வேடனாக நடித்தவர் சோ.

அரசியல் பிரபலங்களுடன் இணைந்து நடித்த ஆளுமைப் பெண்

மனோரமா தன்னைப் பற்றி பெருமையுடன் குறிப்பிடுவது போல தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகள், பின்னர் முதலமைச்சர்களான  அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி போன்றவர்களுடன் நாடகத்திலும், தமிழ்த் திரையுலகிலிருந்து தமிழகத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் நாடகம், திரைப்படங்களிலும் நடித்தவர். அதுபோலவே, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களில் பங்கேற்றவர். ஆந்திர முதல்வரான என்.டி.ராமாராவுடன் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை மனோரமாவுக்கு உண்டு.

பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டவர்

தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் சொந்தக் குரலில் பேசி நடித்தவர். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மட்டுமே 3000 நாடகங்களில் நடித்திருக்கிறார். எஸ்.எஸ்.ஆர். தனக்குத்தானே சொந்தமாக ஒப்பனை செய்து கொள்வதில் வல்லவர். அந்தத் திறமை அவரிடமிருந்து மனோரமாவுக்கும் வந்து சேர்ந்தது. பல நேரங்களில் தானே ஒப்பனை செய்து கொள்வது தனக்கு உதவியாக இருந்தது என்றும் மனோரமா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நல்ல உடைகள், அணி மணிகளைத் தேர்வு செய்து கொள்வதிலும் அவர் திறமையாகச் செயல்பட்டவர். முறையாக நடனம் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும், பல படங்களில் மிகச் சிறப்பாக ஆடி நடித்தவர். இப்படி பல திறமைகளையும் சொந்த முயற்சியால் கற்றுத் தேறியவர். நகைச்சுவை நடிகர்களுடன் மட்டுமல்லாமல் இவருக்கு முந்தைய நகைச்சுவை நடிகைகள் பிந்தைய நடிகைகளுடனும் இணைந்து கும்மாளமான நடிப்பை வழங்கினார். அவர் காலத்து நாயகிகள் அனைவருடன் தோழியாக, சகோதரியாக நடித்தவர்.

செட்டிநாடு ஏற்றுக் கொண்ட ஆச்சி

’காப்புக்கட்டிச் சத்திரம்’ என்றொரு நாடகம், அப்போது வானொலியில் மிகப் பிரபலம். இதை எழுதியவர் சுகி சுப்பிரமணியம். அந்த நாடகத்தில்தான் முதல் முறையாக ஆச்சி என்ற பாத்திரமேற்று நடித்தார். சிறு வயதில் செட்டி நாட்டுப் பகுதியில் வளர்ந்ததால், செட்டியார் வீட்டுப் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் அவருக்கு நன்கு பரிச்சயமானவை.

பேச்சு வழக்கும் இயல்பாகவே மாறிப் போனது. இந்த நாடகம் தந்த வெற்றியின் வீச்சு ஆச்சி என அழைக்கும் அளவு மனோரமாவை செட்டி நாட்டு மக்கள் மத்தியில் மதிப்புடன் உயர வைத்தது. தன் அம்மாவுடன் செட்டியார் வீடுகளில் சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் உதவியாக இருந்து உயர்ந்தவர் மனோரமா. அவரைப் பொறுத்தவரை இது மதிப்பு மிக்க ஒரு விளிச்சொல். திரையுலகிலும் மனோரமாவுக்கு முன்னரும் பின்னரும் வேறு எவரும் ஆச்சி என்றழைக்கப்படவில்லை. இது தவிர சென்னை தொலைக்காட்சியில் ‘அல்லி ராஜ்யம்’, ‘அன்புள்ள அம்மா’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.  

ஆச்சி மனோரமாவால் விருதுகள் பெருமை பெற்றன

தேசிய விருது முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான விருதினை ‘தில்லானா மோகனாம்பாள்’ பெற்றது. சிறந்த துணை நடிகைக்கான விருதினை ஜில் ஜில் ரமாமணி பாத்திரமே பெற்றுத் தந்தது. மீண்டும் 1988ல் ‘புதிய பாதை’ படத்துக்காகத் தேசிய அளவில் சிறந்த துணை நடிகை விருதினைப் பெற்றார். கலைமாமணி விருது, சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதினை தமிழக அரசு பலமுறை வழங்கியிருக்கிறது.

அவை தவிர, என்.எஸ்.கிருஷ்ணன் விருது, அறிஞர் அண்ணா விருது, எம்.ஜி.ஆர்.விருது, சிவாஜி கணேசன் விருது, ஜெயலலிதா விருது என்று அத்துணை பெருமை மிகு விருதுகளையும் பெற்றவர். ஆயிரம் படக்ங்களுக்கு மேல் நடித்ததற்கான கின்னஸ் ரெகார்ட் அவார்ட், 2002 ஆம் ஆண்டில் பத்ம விருது எல்லாமே அவரைத் தேடி வந்தன. விருதுகளால் அவர் புகழ் பெற்றாரோ இல்லையோ, விருதுகள் அவரால் புகழ் பெற்றன.

மண வாழ்வு அளித்த தோல்வியும் திரையுலகம் தந்த வெற்றியும்

திரையுலகில் நடிக்க வந்த சில ஆண்டுகளில், நாடகத்துறையில் உடன் நடித்த நடிகர் ராமநாதனுடன் ஏற்பட்ட காதல் 1964ல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், இரண்டே ஆண்டுகளுக்குள் ஒரு குழந்தை பிறந்தவுடன், ஒரு சில மாதங்களில் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது பெரும் சோகம். இந்த விஷயத்தில் அவருடைய தாயார் இராமாமிர்தம் எடுத்த தீர்க்கமான முடிவையே அவரின் மகள் மனோரமாவும் எடுத்தார்.

அவருடைய தாயாருக்கு உறவுகளிடமிருந்து கிடைக்காத உதவியும் ஒத்தாசையும் தாயாரின் மூலமாக மனோரமாவுக்குக் கிடைத்தது பெரும் வரம். திருமண வாழ்க்கையில் தோல்வி கண்டு, கையில் குழந்தையுடன் பிழைப்புக்காகவும் வாழ்வாதாரம் வேண்டியும் திரைத்துறைக்கு நடிப்பதற்காக வந்த ஒரு சில நடிகைகளில் மனோரமாவும் ஒருவர். திருமண வாழ்க்கையில் வெற்றி பெற்றிருந்தால்,

மனோரமாவின் வாழ்க்கை ஒருவேளை நாடக நடிகையாக, பிரபலமற்ற திரை நடிகையாக ஒரு சிறு வட்டத்துக்குள் முடிந்து போயிருக்கலாம். ஆனால், திருமண வாழ்வு தந்த தோல்வியே மற்றொரு வெற்றிக்கான வாசலைத் திறந்து விட்டது. மிகுந்த வீம்புடன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வைராக்கியத்தை அவருக்குள் ஏற்படுத்தி, உலகறிந்த திறமை மிக்க நடிகையாக அவரைப் புடம் போட்டு அடையாளம் காட்டியது. நடிகர் இராமநாதன் திரையுலகில் பெறாத புகழையும் பெருமையையும் மனோரமா இரட்டிப்பாக அறுவடை செய்தார்.

நோய்மையில் சிக்கிய இறுதிக்காலம்

இறுதியில் கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் சில ஆண்டுகள் கால்கள் மடக்க முடியாத அளவு மூட்டு வலியால் அவதியுற்று படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கியே வீட்டுக்குள் இருந்தார். தன் 78 ஆம் வயதில் 2015 அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார். எந்த ஒரு பெண் நடிகரின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்காத அளவு பெரும் மக்கள் திரளுக்கு நடுவே அவரது உடல் மிதந்து சென்ற காட்சி பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது. திரையுலகில் எல்லோருக்கும் நல்லவராக ஒருவர் வாழ்ந்து முடிப்பதென்பதும் இயலாத காரியம், ஆனால் மனோரமா அனைவருக்கும் நல்லவராக வாழ்ந்து, அனைவர் மீதும் மாறாத அன்பு செலுத்தி மறைந்தவர்.

மனோரமா நடித்த திரைப்படங்கள்

மாலையிட்ட மங்கை, பெரிய கோவில், மரகதம், களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, பார் மகளே பார், லவகுசா, மகளே உன் சமத்து, குலமகள் ராதை, போலீஸ்காரன் மகள், திருவிளையாடல், அன்பே வா, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, படகோட்டி, எதிர் நீச்சல், ஆனந்த ஜோதி, போலீஸ்காரன் மகள், சர்வர் சுந்தரம், உயர்ந்த மனிதன், கண்ணே பாப்பா, ராஜபார்ட் ரங்கதுரை, பாரத விலாஸ், சீர்வரிசை, கண்காட்சி, கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், கணவன், ஆயிரம் பொய், பொம்மலாட்டம், தலைவன், பட்டிக்காடா பட்டணமா, காசேதான் கடவுளடா, நீதி, ராஜராஜ சோழன், அக்கா, உனக்காக நான், உண்மையே உன் விலை என்ன?, முகமது பின் துக்ளக்,

கண்ணா நலமா, மணிப்பயல், பத்து மாத பந்தம், சூரிய காந்தி, ஒரு குடும்பத்தின் கதை, பூவா தலையா?, காசி யாத்திரை, ரோஜாவின் ராஜா, நீ ஒரு மகாராணி, மோகம் முப்பது வருஷம், கிரஹப்பிரவேசம், பந்தாட்டம், பத்ரகாளி, வாழ்வு என் பக்கம், உங்களில் ஒருத்தி, பேரும் புகழும், மேயர் மீனாட்சி, பாலூட்டி வளர்த்த கிளி, ஒரு கொடியில் இரு மலர்கள், நல்ல பெண்மணி, முத்தான முத்தல்லவோ, குல கௌரவம், ஜானகி சபதம், ஆளுக்கொரு ஆசை, ஆறு புஷ்பங்கள், துர்கா தேவி, ஆசை மனைவி, துர்க்கை, குப்பத்து ராஜா, சிட்டுக்குருவி, பைலட் பிரேம்நாத், ஆயிரம் ஜென்மங்கள், பைரவி,

தியாகம், அலங்காரி, இமயம், கல்யாணராமன், பில்லா, பூந்தளிர், தீ, சவால், மங்கம்மா சபதம், அடுத்த வாரிசு, வாழ்வே மாயம், அவன் அவள் அது, சிம்லா ஸ்பெஷல், தாய் மூகாம்பிகை, ஸ்ரீதேவி கருமாரியம்மன், சங்கிலி, தீர்ப்பு, மணல் கயிறு, மருமகளே வாழ்க, மிருதங்கச் சக்கரவர்த்தி, கண்ணோடு கண், கைவரிசை, ஜோடிப்புறா, போக்கிரி ராஜா, பக்கத்து வீட்டு ரோஜா, சட்டம், சிவப்பு சூரியன், நீதிபதி, நிரபராதி, தங்கமகன், பாயும் புலி, எனக்குள் ஒருவன், கைராசிக்காரன், மண்சோறு, ஓ மானே மானே, அன்பே ஓடி வா, ஸ்ரீராகவேந்திரா, விதி, நினைவுகள், சிதம்பர ரகசியம்,

ஜான்ஸி, விக்ரம், சம்சாரம் அது மின்சாரம், அம்புலி மாமா, பேர் சொல்லும் பிள்ளை, நான் அடிமை இல்லை, குரு சிஷ்யன், பாட்டி சொல்லைத் தட்டாதே, என் ஜீவன் பாடுது, உன்னால் முடியும் தம்பி, இது நம்ம ஆளு, தம்பி தங்கக்கம்பி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், புதிய பாதை, குரு சிஷ்யன், எதிர்க்காற்று, நடிகன், வேடிக்கை என் வாடிக்கை, சின்னக் கவுண்டர், சின்னத்தம்பி, இதயம், மன்னன், நீ பாதி நான் பாதி, சிங்காரவேலன், அண்ணாமலை, எஜமான், ஜென்டில்மேன், பொன்னுமணி, உத்தம ராசா, தர்மசீலன், செந்தூரப்பாண்டி, காதலன், தேவா,

ஜெய்ஹிந்த், சரிகமபதநி, ரசிகன், நாட்டாமை, முறை மாமன், மருமகன், கூலி, பெரிய குடும்பம், நந்தவனத் தேரு, நான் பெத்த மகனே, மே மாதம், சைதன்யர், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், முத்துக்காளை, மாமன் மகள், பரம்பரை, இந்தியன், லவ் பேர்ட்ஸ், அருணாச்சலம், வள்ளல், பூ வேலி, நட்புக்காக, வீரத் தாலாட்டு, மறுமலர்ச்சி, ரோஜா வனம், உன்னைத் தேடி, பெரியண்ணா,  கும்மிப்பாட்டு,

சிம்மராசி, கண்ணால் பேச வா, வெற்றிக்கொடி கட்டு, திருநெல்வேலி, கண்ணன் வருவான், சிநேகிதியே, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரே ஒரு கிராமத்திலே, ஞானப்பறவை, கிழக்கு வாசல், பாண்டவர் பூமி, உன்னருகே நானிருந்தால், மாயி, கிருஷ்ணா கிருஷ்ணா, தமிழ், ஜெயா, விசில், ஜெமினி, சாமி, திவான், அன்பே அன்பே, பேரழகன், 7ஜி ரெயின்போ காலனி, கற்க கசடற, இம்சை அரசன் 23ம் புலிகேசி, பாசக்கிளிகள், ஆழ்வார், தாமிரபரணி, உளியின் ஓசை, லாடம், அஆஇஈ, சிங்கம், சிங்கம் 2.