பெண்களை பாதிக்கும் நோய்கள்



தைராய்டு

பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக தைராய்டு இருக்கிறது. இது பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருத்தரிப்பின்மை போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்துவதை நடைமுறையில் பார்க்கிறோம். தைராய்டு என்றால் என்ன? தைராய்டு சுரப்புக் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?
எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன? அவற்றை சரி செய்ய முடியுமா என்பதை பற்றியெல்லாம் நமக்கு விளக்குகிறார் மருத்துவர் திலோத்தம்மாள். “தைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதியில் வண்ணத்துப் பூச்சியின் வடிவத்தில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு (மெட்டபாலிசம்) அடிப்படையானது.

நம் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று. இது பிட்யூட்டரி சுரப்பியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. தைராய்டு சுரப்பு குறைவானாலோ அதிகமானாலோ உடலில் பல விதமான பிரச்னைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியில் (Thyroid Gland) வேறு சில பிரச்னைகளும் உண்டாகலாம்.

தைராய்டு பிரச்னை ஆண்களை விட பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. எட்டில் ஒரு பெண்களுக்கு இந்த தைராய்டு பிரச்னை ஏற்படுகிறது. பெண்களின் உடலில் இதனால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பெண்கள் உடலில் தைராய்டு பிரச்னை ஏற்படுத்தும் மாறுபாடுகள் சிலவற்றை காண்போம்.

பருவமடைதல் மற்றும் மாதவிடாய்

பருவமடைதலில் சிக்கல். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்பே பருவமடைதல் அல்லது காலதாமதமாகுதல். மிகக் குறைவான மாதவிடாய் அல்லது அதிகமான மாதவிடாய், முறையற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் நின்று போதல் போன்றவை ஏற்படுகிறது.

இனப்பெருக்கம்

தைராய்டு சுரப்பு குறைவானாலோ அதிகமானாலோ கரு உருவாவதில் அது பாதிப்பை உண்டாக்கும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகலாம்.
கர்ப்பம் மற்றும் குழந்தை பேற்றிற்கு பிறகான காலம் கர்ப்பத்தின் போது ஏற்படும் தைராய்டு பிரச்னைகள் கருக்கலைப்பு, குறைப்பிரசவம், மூளை வளர்ச்சி குறைபாட்டோடு குழந்தை பிறத்தல், குழந்தை இறந்து பிறத்தல் போன்ற சிக்கல்களையும் குழந்தை பேற்றிற்குப் பிறகு தாயின் உடலில் வேறு சில தாக்கங்களையும் அதிக அளவில் ஏற்படுத்துகிறது.  

மெனோபாஸ்

நாற்பதுக்கு முன் அல்லது நாற்பதுகளின் தொடக்கத்தில் என மிகக் குறைந்த வயதில் மெனோபாஸ் ஏற்படுதல்.

என்ன மாதிரியான தைராய்டு பிரச்னைகள் பெண்களை தாக்குகின்றன?

1. ஹைப்போ தைராய்டிஸம்

தைராய்டு சுரப்பு (தைராய்டு ஹார்மோன்) குறைவாக இருப்பது ஹைப்போ தைராய்டிஸம். இந்நிலைமை உடலின் செயல்பாடுகளை குறைக்கும்.

ஹைப்போ தைராய்டிஸத்தின் அறிகுறிகள்

* எடை அதிகரித்தல்.
* எந்நேரமும் சோர்வாக இருத்தல்.
* மலச்சிக்கல்.
* மூட்டு மற்றும் தசைகளில் வலி.
* மன அழுத்தம்.
* முகம் மற்றும் தோல் வெளுத்துப்போதல்.
* முடி கொட்டுதல்.
* முகம் ஊதிப்போய் இருத்தல்.
* குரல் தடித்துப்போதல்.
* மாதவிடாய் அதிகமாக போதல்.
* இதயத்துடிப்பு குறைவாக இருத்தல்.
* கெட்ட கொழுப்பு (LDL)அதிகரித்தல் (கெட்ட கொழுப்பு அதிகரிப்பதால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும்)

ஹைப்போ தைராய்டுக்கான சிகிச்சை

தேவையான தைராய்டு சுரப்பு அதிகரிக்க மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும்.

2. ஹைப்பர் தைராய்டிஸம்

தைராய்டு சுரப்பு அளவுக்கு அதிகமாக இருப்பது ஹைப்பர் தைராய்டிஸம். உடலின் செயல்பாடுகளை இது வேகமாக்கும். உதாரணத்திற்கு இதயத்துடிப்பு இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும். ஹைப்பர் தைராய்டிஸத்தினாலும் உடலில் பல சிக்கல்கள் ஏற்படும்.

ஹைப்பர் தைராய்டிஸம் அறிகுறிகள்

* எடை குறைவு.
* அதிகமான உணவு உட்கொள்ளுதல்.
* தூக்கமின்மை.
* இதயத்துடிப்பு அதிகமாதல்.
* அதிகம் வியர்த்தல்.
* உடலின் வெப்ப நிலை அதிகமாதல்.
* கண்கள் பெரிதாக வெளியே வருவது போல் இருத்தல்.
* குறைவான மாதவிடாய்.
* தசைகளில் பலவீனம்.
* கை கால்கள் மரத்துப்போதல்.
* கை நடுக்கம்
* எரிச்சலடைதல், பதட்டமாதல்.
* அடிக்கடி மலம் வெளியேறுதல் (diarrhea).

பொதுவாக ஹைப்பர் தைராய்டிஸத்தின் அறிகுறிகள் மெதுவாகத் தான் வெளியில் தெரிய வரும்.

ஹைப்பர் தைராய்டுக்கான சிகிச்சை

ஹைப்பர் தைராய்டு எந்த காரணத்தினால் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து ஹைப்பர் தைராய்டுக்கான சிகிச்சை அளிக்கப்படும். ஆன்டி தைராய்டு மாத்திரைகள் வழங்கப்படலாம். பீட்டா பிளாக்கர்ஸ்- ஹைப்பர் தைராய்டுக்கான காரணத்தை சரி செய்வதற்கான சிகிச்சைகள் அளிக்கப் படலாம்.  
ரேடியோ அயோடின் சிகிச்சை கொடுக்கப்படலாம். ஆனால் இது நிரந்தரமான ஹைப்போ தைராய்டு பிரச்னையில் கொண்டுவிடும். அதாவது அதிகமான சுரப்பை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சையினால் சுரப்பு மிகவும் குறைந்து போகும். அறுவை சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியினை நீக்கலாம். இதனாலும் நிரந்தரமான ஹைப்போ தைராய்டு பிரச்னை ஏற்படும்.

3. தைராய்டட்டீஸ்

தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கம் உடலில் உள்ள ஆன்டி பாடீஸ் தைராய்டு சுரப்பியை பாதிக்கும் போது இந்த பிரச்னை ஏற்படும். மரபு ரீதியாகவும் தைராய்டட்டீஸ் ஏற்படும். வைரல் அல்லது பாக்டீரியல் தொற்றுகளாலும் மற்றும் சில மருந்துகளாலும் கூட தைராய்டட்டீஸ் ஏற்படலாம். இதில் இரண்டு வகை உள்ளது. குறிப்பாக போஸ்ட் பார்ட்டம் தைராய்டட்டீஸ் என்பது குழந்தை பிறப்பிற்கு பிறகு 10 சதவிகிதம் பெண்களை பாதிக்கிறது. பிரசவத்திற்கு பின் ஏற்படும் பேபி ப்ளூஸ் பிரச்னை போன்றே இருப்பதால் தைராய்டட்டீஸ் ஏற்பட்டிருப்பதை அவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொள்ள முடியாது.

இதனால் மிகுந்த சோர்வு ஏற்படும். திடீர் திடீர் என கோபம், அழுகை போன்றவை ஏற்படலாம். மரபு ரீதியாகவும், முன் பிரசவத்தின் போது இந்த பிரச்னை ஏற்பட்டவர்களுக்கும், குரோனிக் வைரல் ஹெபடைட்டீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த வகை தைராய்டட்டீஸ் ஏற்படும் அபாயம் அதிகம். சிலருக்கு ஒரு வருடத்திற்குள் இந்த பிரச்னை சரியாகி விடும். இந்த பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் ஹைப்போ தைராய்டிஸம் ஏற்படும் அபாயம் உண்டு. அறிகுறிகளை பொறுத்து சிகிச்சை இருக்கும்.

3. காய்ட்டர்

தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக பெரிதாக இருத்தல். சில காலங்களுக்கு மட்டும் (உதாரணமாக வளரிளம் பருவத்தில் பெண்கள் பூப்படையும் காலகட்டத்தில்) இது ஏற்பட்டு சில நேரங்களில் தானே சரியாகிவிடும். இல்லையென்றால் வேறு சில தைராய்டு பிரச்னைகளுக்கு அறிகுறியாகவும் காய்ட்டர் ஏற்படலாம். காய்ட்டர் ஆண்களை விடவும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இருக்கும் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. கழுத்தில் வீக்கம் மட்டும் தான் காய்ட்டரின் ஒரே அறிகுறி.

இதனை கண்களால் பார்க்கவும் கைகளால் தொட்டு உணரவும் முடியும். பெரிய அளவிலான காய்ட்டர் கழுத்துப்பகுதியில் ஒரு அழுத்தமான உணர்வை கொடுக்கும். இருமல் மற்றும் சுவாசப்பிரச்னையும் இதனால் ஏற்படலாம். சில நேரங்களில் இதற்கு சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சில நேரங்களில் இயல்பான அளவிற்கு வருவதற்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சில நேரம் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இதற்கான காரணங்களை பார்த்து விட்டு மருத்துவர் தேவையான முடிவை எடுப்பார்.

காய்ட்டர் ஏற்பட காரணங்கள்

* தைராய்டு முடிச்சுகள்
* தைராய்டு கேன்சர்
* தைராய்டட்டீஸ்
* ஹாசீமோட்டோஸ் நோய் (Hashimoto’s disease)
* க்ரேவ்ஸ் நோய். (Graves disease) போன்ற காரணங்களால் காய்ட்டர் ஏற்படலாம்.

தைராய்டு முடிச்சுகள்

தைராய்டு சுரப்பியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்படும் வீக்கம். தைராய்டு முடிச்சுகள் ஒன்றோ பலவோ தைராய்டு சுரப்பியில் உண்டாகலாம். இவை சில நேரங்களில் பார்க்கும் படி வெளியே தெரியும். சில நேரம் தொட்டுப் பார்த்தால் அதனை உணர முடியும். அது தடிமனாக இருக்கலாம். திரவம் அல்லது ரத்தத்தால் நிரம்பி இருக்கலாம். ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக பெண்களை தாக்குகிறது. கேன்சர் அல்லாத சாதாரண தைராய்டு முடிச்சுகள் வேறு எந்த அறிகுறியும் காட்டாது. இந்த முடிச்சிலிருந்து அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் சுரந்தால் ஹைப்பர் தைராய்டிஸம் ஏற்படலாம். சில தைராய்டு முடிச்சுகள் பெரிதானால் விழுங்குவதிலும் மூச்சு விடுவதிலும் சிரமம் கொடுக்கும். 

* தைராய்டு முடிச்சுகளுக்கான சிகிச்சை

சாதாரண முடிச்சாக இருக்கும் போது தொடர் கண்காணிப்புகள் தேவைப்படும். சில நேரம் அது கேன்சராக இருந்தாலோ அல்லது மிகவும் பெரிதாகி உணவு விழுங்குவதிலும் மூச்சு விடுவதிலும் சிரமம் கொடுத்தாலோ அறுவை சிகிச்சை செய்து நீக்கி விடுவார்கள். இந்த முடிச்சுகளால் நிறைய தைராய்டு ஹார்மோன் சுரந்தால் ரேடியோ அயோடின் சிகிச்சை தருவார்கள். இந்த சிகிச்சை முடிச்சுகள் சுருங்கவும் ஹார்மோன் சுரப்பு குறையவும் செய்யும்.

மூன்று வகையான தைராய்டு முடிச்சுகள் ஏற்படலாம்.

1. ‘ஹாட்’ நாடுயூல் (‘Hot’ nodules)

இதில் நிறைய ஹார்மோன் சுரக்கும். இதனால் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக கேன்சர் ஏற்பட வாய்ப்புண்டு.

2. ‘வார்ம்’ நாடுயூல் (‘Warm’ nodules)

இதில் இயல்பான சுரப்பு இருக்கும். இதனால் 5லிருந்து 8 சதவிகிதம் வரை கேன்சர் ஏற்பட வாய்ப்புண்டு.

3. ‘கோல்டு’ நாடுயூல் (‘Cold’ nodules)

இதில் ஹார்மோன் குறைவாக சுரக்கும். இதனால் 15 சதவிகிதம் வரை கேன்சர் ஏற்பட வாய்ப்புண்டு. தைராய்டு கேன்சர் தைராய்டு சுரப்பியில் ஏற்படுவது தைராய்டு கேன்சர். சில நேரம் தைராய்டு முடிச்சுகள் கேன்சராக மாறும். அறிகுறிகளற்ற தைராய்டு முடிச்சுகளால் தைராய்டு கேன்சர் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகும். ஆனால் எல்லா தைராய்டு முடிச்சுகளும் கேன்சராகும் என்று சொல்ல முடியாது. கேன்சர் ஏற்பட்டால் தொண்டையில் வீக்கம், குரலில் மாற்றம் போன்றவை ஏற்படும். ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களுக்கு தைராய்டு கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வரும் ஆண்டுகளில் இது இன்னும் கூட அதிகரிக்கலாம். 25 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த அபாயம் அதிகம். மரபு ரீதியாக காய்ட்டர் பிரச்னை அல்லது தைராய்டு கேன்சர் இருப்பவர்களுக்கும் வரலாம். சிறு வயதில் நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளில் ரேடியேஷன் தெரபி எடுத்துக் கொண்டவர்களுக்கு வரலாம். ரத்தப் பரிசோதனைகள், ரேடியோஆக்டிவ் அயோடின் இன்டேக் சோதனை மற்றும் தைராய்டு ஸ்கேன் மூலம் இதனை கண்டறியலாம்.  

தைராய்டு கேன்சருக்கான சிகிச்சை

அறுவை சிகிச்சை தான். கேன்சர் வேறு எங்கும் பரவாமல் சிறிய அளவில் இருக்கும் போது முழு சுரப்பியையும் நீக்கி விடுவார்கள். அது தான் முக்கிய சிகிச்சை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரேடியோ அயோடின் தெரபி அளிப்பார்கள். அதன் பிறகு தேவைப்படும் சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

- ஸ்ரீ தேவி மோகன்