ஆத்தூர் சிறுமி கொலை நடந்தது என்ன?



சேலம் ஆத்தூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது தளவாய்பட்டி கிராமம். அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள் சின்னப்பொண்ணு-சாமிவேல் தம்பதியினர். சாமிவேல் இறப்பு சடங்கில் பிணங்களை அடக்கம் செய்கிற தோட்டி வேலை செய்பவர். இவர்களுக்கு அருள்ஜோதி, ராஜலெட்சுமி என்கிற மகள்களும், சற்குணநாதன் என்கிற மகனும் உண்டு. இந்தக் குடும்பத்தின் கடைக்குட்டிதான் 13 வயது நிறைந்த சிறுமி ராஜலெட்சுமி. 8ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவர்களது வீட்டிற்கு எதிர் பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார்-சாரதா தம்பதியினர் தோட்டம்,

பெரிய வீடு, மாடுகள் மற்றும் சொந்தமாக கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் என ஓரளவு வசதியாக வாழ்ந்து வந்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த கடந்த 22 ந்தேதி அன்று இரவு சுமார் ஏழு மணிவாக்கில் ராஜலெட்சுமி, வீட்டில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டே தன் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது எதிர் வீட்டில் வசித்து வந்த தினேஷ்குமார் உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் நீண்ட வீச்சரிவாளுடன் சிறுமி ராஜலெட்சுமியின் வீட்டுக்குள் ஆவேசமாக நுழைந்திருக்கிறான். நுழைந்தவன் ராஜலெட்சுமியின் கழுத்தை நோக்கி முதலில் வெட்டி இருக்கிறான்.

அப்போது ரத்தம் பீறிட்ட நிலையில் சிறுமி கதறி அலறிக் கொண்டே ‘அண்ணா நான் என்ன தப்புண்ணா செய்தேன், ஏண்ணா என்ன வெட்டுற.. வெட்டாதண்ணா..வெட்டாதண்ணா’ என கூச்சலிட்டு அலறிக் கத்தி இருக்கிறார். தடுக்க வந்த தாய் சின்னப்பொண்ணுவை தகாத வார்த்தைகளைப் பேசி காலால் எட்டி உதைத்திருக்கிறான். அப்போது சிறுமியின் தாய் தடுமாறிக் கீழே விழுந்த நிலையில், சிறுமியின் தலை முடியை கொத்தாகப் பிடித்து, தரதரவென இழுத்து வாசலுக்கு வந்த தினேஷ், அவர்களது வீட்டு வாசல் அருகே வைத்து மீண்டும் வீச்சரிவாளை அழுத்தமாக கழுத்தில் இறக்கி சிறுமியின் தலையை துண்டித்திருக்கிறான்.

கொலைவெறி அடங்காத தினேஷ் அதே நிலையில், துண்டிக்கப்பட்ட சிறுமியின் தலையை எடுத்துக்கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அதைப் பார்த்த அவன் மனைவி சாரதா மற்றும் அவன் வீட்டில் இருந்த அவனது தம்பி சசிக்குமார் இருவரும் ‘தலையை ஏன் இங்க எடுத்துட்டு வந்த, வீசிட்டு வா ’ என கூச்சலிட்டுக் கத்த, சிறுமியின் தலையை மீண்டும் கொண்டு வந்து சாலையில் வீசியிருக்கிறான் தினேஷ். தொடர்ந்து உறக்கக் கூச்சலிட்ட நிலையில் வீட்டிற்குள் சென்றிருக்கிறான். ரத்தம் ஆறாய் பெருகிய நிலையில் சிறுமியின் துண்டிக்கப்பட்ட உடல் வீட்டின் வாசலிலும், தலை சாலையிலுமாக வெகுநேரம் கிடந்துள்ளது.

கீழே விழுந்து கிடந்த சிறுமியின் அம்மா எழுவதற்குள் சம்பவம் நடந்து முடிந்திருந்தது. தகவல் தெரிந்து வந்த சிறுமியின் அப்பா தன் மகளின் துண்டிக்கப்பட்ட தலையைப் பார்த்ததுமே கதறியபடி மயங்கிச் சரிந்திருக்கிறார். தினேஷ் குமாரின் குடும்பத்தை எதிர் கொள்ள முடியாமல் ராஜலெட்சுமியின் குடும்பத்தினர் தவித்து செய்வதறியாது நின்றிருக்கின்றனர். சம்பவம் நிகழ்ந்த சற்று நேரத்தில் இருசக்கர வாகனத்தை சசிக்குமார் ஓட்டிச்செல்ல, அவனுக்குப் பின் அவனது தம்பி தினேஷ்குமாரும் மனைவி சாரதாவும் அமர, ஆத்தூர் காவல்நிலையத்தில் தினேஷ்குமார் அவனாகவே சரணடைந்திருக்கிறான்.

தினேஷ்குமார் போகும்போது சிறுமியின் குடும்பத்தினரை சாதிப்பெயரைச் சொல்லி இழிவாக அழைத்து, நான் ஜாமீனில் சீக்கிரம் வருவேன், உங்களை எல்லாம் விடமாட்டேன். இன்னும் இரண்டு கொலை உங்கள் வீட்டில் நடக்க உள்ளது. என் வீட்டையும் என் நிலத்தையும் என் மாட்டையும் எவனும் எதுவும் செய்யக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறான். அவன் சரணடைந்த நிலையில், கொலை நடந்து இரண்டு மணி நேரம் கழிந்து காவல் துறையினர் வந்து சிறுமியின் துண்டிக்கப்பட்ட தலையையும்,

உடலையும் கைப்பற்றியுள்ளனர். காவல் நிலையத்தில் முதலில் மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்பட்ட தினேஷ்குமார், தன்னை சுடுகாட்டு முனி என்றும் தனக்கு மல்லிகை பூ வாடை பிடிக்காது என்றும், சிறுமியை முனி கொன்று விட்டது. தனக்கும் சிறுமியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி அதிரவைத்திருக்கிறான். தொடர்ந்து இரண்டு நாட்களாக சைக்கோ போல முரண்பாடாக பேசியும் நடித்தும் காவல்துறையினரை ஏமாற்றியிருக்கிறான். அவனின் மனைவி சாரதா காவல்துறை விசாரணையில் என் கணவர் சமீப காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். என் குழந்தையைக் கூட கொல்ல முயற்சி செய்தார்.

எங்கள் குழந்தை மீது அவருக்கு அதிக பாசம். குழந்தையை யார் தூக்கினாலும் கோபப்படுவார். அந்த பொண்ணு ராஜலெட்சுமி என் குழந்தையை தூக்கியதனால் என் கணவர் எரிச்சலடைந்தார் என்றும் தன் கணவருக்கு முனி பிடித்திருக்கிறது, அவர் இந்தக் கொலையைச் செய்யவில்லை, சாமி தான் இந்த கொலையை செய்திருக்கிறது எனவும் விசாரணையில் சொல்லியிருக்கிறார். போலீசார் இரண்டு நாட்கள் மருத்துவர்களோடு தினேஷ்குமாரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உட்படுத்தியபோது, அவரின் மனநலம் சரியாக இருக்கிறது என்றும் தினேஷ் எந்த விதத்திலும் மனநலம் பாதிக்கப்பட்டவன் இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர்.

மேலும் விசாரணையில் தான் மனநலம் பாதிக்கப்பட்டவனாக நடித்தேன் என தினேஷ்குமாரே வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான். விசாரித்த வரையில் இதற்கு முன் தினேஷ் அந்தப் பகுதியில் தவறாக நடக்க முயன்றதாக அவன் மீது எந்த குற்றமும் பதிவாகவில்லை. சின்ன வயதில் இருந்தே கொலையான சிறுமி ராஜலெட்சுமி தினேஷ் குடும்பத்தோடு மிகவும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். இரண்டு குடும்பத்திற்குள்ளும் மிகவும் சுமுகமான உறவே இருந்துள்ளது. இரு குடும்பத்தினருமே ஒருவரை ஒருவர் பேசியும் பழகியும், கொடுக்கல் வாங்கல் நிலையில் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருந்துள்ளனர்.

சிறுமியும் அண்ணா என்றுதான் தினேஷை உரிமையோடு அழைத்திருக்கிறார். சிறுமி, தினேஷ்-சாரதாவின் குழந்தையைப் பார்த்துக்கொள்வது, அந்தக் குழந்தையோடு விளையாடுவது, குழந்தையை சாப்பிட வைத்து தூங்க வைப்பது என அந்தக் குடும்பத்தோடு மிக இயல்பாக இருந்திருக்கிறார். சாரதாவும் பல நேரங்களில் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வந்து தன் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லும்படியான நிலையில்தான் இரு குடும்ப உறவுகளுமே இருந்துள்ளது. சில நேரங்களில் தினேஷ் தோட்டத்தில் பூக்களை பறிக்க சிறுமி செல்வாராம்.

அவர் வரவில்லை என்றாலும், ஏன் வரவில்லை என சாரதா உரிமையோடு கேட்கும் நிலையே அவர்களுக்குள் இருந்துள்ளது. சுமுகமான உறவில், திடீரென ஒருத்தன் இத்தனை கொடூரமாக நடக்க காரணம் என்ன? என்ற நம் கேள்விக்கு, தினேஷ்குமார்-சாரதா குடும்பத்தின் சில உண்மைகள் சிறுமி ராஜலெட்சுமிக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தங்களது குடும்ப மானம் போய்விடும் என்று பயந்து திட்டமிட்டு கொலை செய்திருக்கிறான் தினேஷ். அவனுக்கு உடந்தையாக தினேஷின் மனைவி மற்றும் தம்பி இருந்துள்ளனர். வழக்கில் தினேஷ் குமாரின் மனைவி சாரதா மற்றும் அவனது தம்பி சசிக்குமாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இவர்கள் இருவருக்கும் தெரியாமல் இந்த கொலை நடக்க வாய்ப்பில்லை. கொலையை செய்ய பின்புலமாக இருந்துவிட்டு, தற்போது தன் கணவனை காப்பாற்ற சாரதா நாடகம் ஆடுகிறார் என அருகாமையில் வசிப்போர் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கொலையில் சாதியோ பாலியல் வன்முறையோ பிரதானமாகத் தெரியவில்லை. அதையும் தாண்டி ஏதோ ஒன்று நெருடுகிறது. விசாரித்தவரையில் இதில் வலுவான காரணம் ஏதோ ஒன்று உள்ளது. அந்த உண்மை தெரிந்த காரணத்தாலேயே சிறுமி பலியாகியுள்ளார். தடயத்தை அழிப்பதற்காகவே கொடூரக் கொலை நடந்துள்ளது. சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்தாகிவிட்டது. இது அச்சில் ஏறும் வரை அந்த மாவட்ட ஆட்சியரோ, பகுதி தாசில்தாரோ நேரில் சென்று பார்த்ததாக தகவல் இல்லை.

இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு சாதி ரீதியிலான இயக்கங்களும், அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரிய அளவில் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தவும் இல்லை. விசாரணை தொடர்பாக எந்த முன்னேற்றமும், அசைவும் இல்லை. இதுவரையில் முழுமையான உண்மை எதுவும் வெளிவரவில்லை. ஊடகங்கள் இதை வெறும் க்ரைம் செய்தியாக சாதாரணமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றன. காவல் துறையினர் நேர்மையாக செயல்பட்டால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும்.‘என் மகள் ராஜலெட்சுமியின் தலையில்லாத முண்டம் என் கண் முன்னே துடித்துக்கொண்டிருந்தது… ’ எனக் கதறி ஓலமிடும் ராஜலெட்சுமியின் தாய் சின்னப் பொண்ணுவிற்கு நம் என்ன சொல்லி ஆறுதல் படுத்திவிட முடியும்.

நேரில் சென்று சம்பவத்தை அறிந்து வந்தவரான சாதி ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினரான ரமணியிடம் பேசியபோது…

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை, கேட்க யாரும் இல்லை. அவர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வீடு புகுந்துகூட வெட்ட முடியும். அவர்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற நிலைதான் இதில் உள்ளது. இதில் தினேஷ் மட்டுமே குற்றவாளி கிடையாது. அவனது மனைவி மற்றும் தம்பிக்கும் இதில் பங்கு உள்ளது. சாதி பிரச்சனை, பாலியல் வன்முறை என எல்லாவற்றையும் கடந்து சிறுமியின் கொலையில் சிக்கல் நெருடுகிறது. குழந்தையில் இருந்து தனது 13 வயதுவரை அங்குதானே சிறுமி வளர்ந்திருக்கிறார். மேலும் அந்தக் குடும்பத்தோடு மிகவும் ஒன்றிப் பழகி இருக்கிறார்.

இங்கே பிறப்பிலேயே  தீண்டத்தகாத பிறவிகளாகவும், இழிவாகவும் பார்க்கப்படும் பிரிவினர் என்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பெண்களும்தான். வெறும் குண்டர் சட்டங்களோ, போக்சோ சட்டங்களோ போடுவதால் பெரிதாக என்ன மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்து விடுமா?  மாறாக சமூகத்தை, பொது புத்தியை மாற்றியாக வேண்டும். சட்டங்கள் இருந்தும் அவை கிடப்பில் இருக்கிறது. நிர்பயா வழக்கின்போது வெடித்த போராட்டங்களால் விளைந்த வர்மா ஆணையத்தின் அறிக்கை பெண்களின் நலனிலிருந்து முன்வைக்கப்பட்ட அருமையான அறிக்கை.

அதனை ஆளும் பாஜக அரசு தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு கண்துடைப்பாக அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனாலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு, கொலை, பலாத்காரம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. பெண் குழந்தைகளை மதித்து நடப்பதற்கான சிந்தனைகளை, கண்ணோட்டத்தை உருவாக்க அரசு என்ன மாதிரியான திட்டங்களை இங்கே வைத்திருக்கிறது? இந்தியா போன்ற பிற்போக்கு சாதிய சமூகத்தில், பெண்கள் நான்கு விதமான ஒடுக்கு முறைகளை சந்திக்கிறார்கள். முதலாவது ஆணாதிக்க ஒடுக்குமுறை.

இரண்டாவது பாலியல் பாகுபாடு. மூன்றாவது சாதி ரீதியான இழிவு மற்றும் ஒடுக்குமுறை. நான்காவது மதம் ரீதியாக ஒதுக்கப்படுதல். சமத்துவமின்மை காரணமாக, பெண்கள் இங்கே சரிபாதியாக முன்னேறினாலும், வளர்ந்து வரும்  முதலாளித்துவ சமூகத்தில் வளர்ச்சியும் நாகரிகமும், பெண்களை வெறும் நுகர்வு பண்டமாக மட்டுமே முன்நிறுத்துகிறது. ஆக பெண்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் நான்கு விதமான ஒடுக்குமுறைக்கு எதிராக களமிறங்குவதில்தான் மாற்றங்களை நோக்கி நகர முடியும். ஆணாதிக்க பாலியல் வன்முறைக்கு எதிராக முடுக்கப்பட்டிருக்கும் #MeToo இயக்கம் தினம் பாதிக்கும் ராஜலெட்சுமிகளுக்காக ஒலிப்பதில் அடங்கியுள்ளது அதன் வெற்றி.

- மகேஸ்வரி