நீராலானது இவ்வுலகு



கருத்து கேட்பு என்னும் ஜனநாயக நடைமுறை

நீர், நிலம், காற்று உள்ளிட்ட நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று அரசமைப்புச்சட்டம்  கூறுகிறது. அதேபோல அரசின் எந்தவொரு நடவடிக்கையும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் இருக்க வேண்டும் என்று அரசிற்கான  வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன. மேலும் இயற்கை வளங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் செல்லுகின்ற வகையில் அரசு  இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.இந்திய நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ மக்களின் கருத்திற்கு இணங்க  செயல்பட வேண்டும் என்பதே இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள ஜனநாயக நடைமுறையாகும். ஆக, எளிய, விளிம்பு நிலை  மக்களின் குரல்களை கருத்தில் கொண்டு தான் எந்த ஒரு திட்டமும், கொள்கையும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயக  நடைமுறையாக இருக்க முடியும். இத்தகைய வாய்ப்புகளை இந்திய ஜனநாயகம் வழங்குகிறதா?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்  

 
அரசு அல்லது தனியார் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுவதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்னும் நடைமுறை  இந்தியாவில் முதல் முறையாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.போபால் விஷ வாயு விபத்தை தொடர்ந்து  1986-ம் ஆண்டு இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கின்ற எந்தவொரு திட்டமாக இருந்தாலும்  இந்த சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்களை கொண்டு எந்த ஒரு வளர்ச்சி  திட்டத்ைத கட்டுமானம் செய்கின்ற போதும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பதனை யாராலும் மறுக்க  முடியாது.  இதனால் பலவித இயற்கை சீர்கேடுகளும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் உண்டாகின்றன. உயிர்பன்மை பாதுகாப்பு அமைப்புகள்  பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கை சமன்பாடு சரிகிறது. மனித நலவாழ்வு கெடுக்கப்படுகிறது.

இவற்றை எல்லாம் தடுத்து அல்லது குறைந்த அளவிலான பாதிப்போடு, வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த சில அறிவியல்  முன்னெடுப்புகள் தேவைப்படுகிறது. அப்படியான தேவையை தீர்க்கவே சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீடு என்னும் அறிவியல் ஆய்வு முறை  ஐக்கிய நாடுகளின் சபையினால் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படுமுன், அது அந்த இடத்தின்  சூழ்நிலைக்கு உகந்ததாக உள்ளதா, திட்டத்தால் பாதிப்பு ஏதாவது ஏற்படுமா என்பதை கவனமாக கண்டறிதல் வேண்டும். இது திட்டத்தின்  துவக்கக் கட்டத்திலேயே செய்யப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய கேள்விகளுக்கான விடையை சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீடு மூலம்  கண்டறிய முடியும்.

சுற்றுச்சூழல் தாக்கம் அளவீடு என்பது ஒருவித பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாகும். ஒரு திட்டத்தை செயல்படுத்தப்படுவதற்கு முன்  அத்திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்புகள் உண்டாகலாம்என்பதனை கண்டறிந்து, அதற்கு ஏற்றவண்ணம் செயல்படுவது  அறிவுடைமை யாகும். இதன் அடிப்படையிலேயே 1994ம் ஆண்டு மத்திய அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் “சுற்றுச்சூழல்  பாதிப்பு அளவீட்டு ஒழுங்குமுறைகள்” என்னும் சட்டத்தை வெளியிட்டது. இச்சட்டப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற பல புதிய  கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் குறிப்பாக பொதுமக்கள் கருத்து கேட்டறிதல், சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு ஆய்வு  போன்றவை கட்டாயமாக்கப்பட்டன.

1994ம் ஆண்டு சட்டத்தின்படி, எந்த ஒரு திட்டத்திற்கும்  சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்க, சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு ஆய்வு அறிக்கை  கட்டாயமாக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு ஆய்வானது, சுற்றுச்சூழல் பாதிப்பு மேலாண்மை திட்டத்தை கொண்டு இருக்க  வேண்டும். மேலும் இந்த ஆய்வறிக்கை, எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கலாமா வேண்டாமா என்னும் அடிப்படையில்  செயல்படுத்தப்பட வேண்டும் என்னும் அறிவியல் நெறியோடு வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த சட்ட நடைமுறைதான் மிகவும் முக்கியமானது.  இப்படி செய்யப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு ஆய்வறிக்கை, மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களுக்கு புரிகின்ற  மொழியில். இந்த ஆய்வறிக்கை மூலம் திட்டத்தை பற்றி புரிந்து கொண்ட மக்கள் தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பளிக்க வேண்டும்  என்றும் சட்டம் கூறுகிறது.

எனவே, எந்த ஒரு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு,  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொது மக்கள்  கருத்து கேட்பு கூட்டம் நடைபெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இப்படியான கருத்து கேட்பு கூட்டம் குறித்த தகவல் மக்களிடம்  போதிய காலம் முன்பு தெரிவிக்கப்பட வேண்டும். கருத்து கேட்பு கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். திட்டத்தினால்  பாதிப்புக்குள்ளாகும் எந்த மக்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். தங்கள் சந்தேகங்களை  கேட்கலாம். அதிலும் குறிப்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெருவாரியான மக்கள் எந்த ஒரு திட்டத்தை ஏற்றுக்  கொண்டால் மட்டுமே அத்திட்டத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்கள் கருத்து கேட்பு அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு ஆய்வறிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டே  சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். 2006ம் ஆண்டு, 1994ம் ஆண்டு சட்டம் விரிவுப்படுத்தப்பட்டு புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு  சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திலும் மேற்கூறிய சட்டத்தின் நடைமுறை தொடரப்படுகிறது. சட்டம் இப்படி உள்ள போதிலும்,  பொது மக்கள் கருத்து கேட்பு நடைமுறை பல்வேறு வகையில் சட்டமீறலோடு தான் நடைபெறுகின்றன. உதாரணமாக கூடங்குளம் அணு  உலை தொடர்பான பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கூறலாம். கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ள 3 மற்றும் 4 அணுஉலை  தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் 2008ம் ஆண்டு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெருவாரியான மக்கள் அணுஉலைக்கு  எதிராகவே கருத்து கூறினர். ஆனால், பெருவாரியான மக்கள் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது. எனவே கருத்து கேட்பு கூட்டத்தை மேலும் வெளிப்படையானதாக  மாற்றப்படுவது தேவையாக இருக்கின்றது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து, 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பொது மக்கள் கருத்து கேட்பு நடைமுறை  உள்ளது. எந்த ஒரு வளர்ச்சி திட்டத்திற்காகவும் நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு சமூக பாதிப்பு அளவீட்டு ஆய்வறிக்கை  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.சமூக பாதிப்பு அளவீட்டு ஆய்வறிக்கை, உள்ளாட்சி அமைப்புகளோடு  கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. 90களில்  அடிநிலை மக்களுக்கான உரிமையை நிலை நாட்ட  உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் அரசமைப்புச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இப்படியாக அரசமைப்புச்  சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள மக்கள் உரிமையை நிலைநாட்டும் வகையிலேயே 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு  வரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் இருப்பது போல, இச்சட்டத்தில் உள்ள சமூக பாதிப்பு அளவீட்டு ஆய்வறிக்கையும், பொது மக்கள் கருத்து  கேட்பு நடைமுறையும் இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சமாகும். இச்சட்டப்படி பெரு வாரியான மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே  திட்டங்கள் கொண்டுவரப்பட முடியும். நிலங்கள் கையகப் படுத்த முடியும். பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இந்த சட்டத்திலும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கெடு வாய்ப் பாக, சேலம்–-சென்னை இடையிலான அதிவேக சாலை திட்டம் இச்சட்டத்தின் கீழ்  நடைமுறைப்படுத்த அரசுகள் மறுக்கின்றன. காரணம் இச்சட்டத்தில் உள்ள சில விதிவிலக்குகள். சேலம்- சென்னை வரையிலான அதிவேக  சாலை திட்டத்திற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை சட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் இழப்பீடு தொகையை தீர்மானம் செய்ய 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் பின்பற்றப்படுகிறது. சட்டத்தில் உள்ள சில  அம்சங்களை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகளால் இவை செய்யப்படுகின்றன.      சுற்றுச்சூழலை மட்டுமல்ல, மக்களின்  வாழ்வுரிமையையும் பாதுகாக்க, பொது மக்கள் கருத்து கேட்பு என்னும் நடைமுறை மிகவும் அவசியமானது. உண்மையான ஜனநாயக  நடைமுறையாகவும் இதுவே இருக்க முடியும். மக்கள் கருத்து கேட்பு நடைமுறை பல நேரங்களில் சட்ட மீறலாக நடைபெறுவது ஜனநாயக  விரோதமாக கருத வேண்டும். மக்கள் கருத்து கேட்பு நடைமுறையை பாதுகாக்கவும், அதனை மேலும் வலுப் படுத்த சிவில் அமைப்புகள்  செயல்பட வேண்டியுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, மக்கள் கருத்து கேட்பு  நடைமுறை என்பது  ஜனநாயகத்தில் மக்கள் பங்காற்றும் முறை என்னும் புரிதல் நம்மிடம் ஏற்பட வேண்டும். நம் கடமை, உரிமை  உள்ளடங்கிய விஷயம் இதுவென்ற புரிதல் நம்மிடம் ஏற்பட வேண்டும்.

 
-(நீரோடு செல்வோம்!)